

தஞ்சை ப்ரகாஷின் மறுவருகை!
மறைந்த எழுத்தாளர் தஞ்சை ப்ரகாஷின் எழுத்துக்கள் குறித்து ஒரு புதிய ஆர்வம் இப்போது பல வாசகர்களிடம் பிறந்திருக்கிறது. அந்த ஆர்வத்துக்குத் தீனிபோடும் நோக்கில் தற்போது தஞ்சை ப்ரகாஷின் படைப்புகள் பல புத்துயிர் பெற்றுவருகின்றன. அவருடைய சிறுகதைகளின் தொகுப்பை 2016 தொடக்கத்தில் டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்டிருந்தது.
தற்போது, தஞ்சை ப்ரகாஷின் 'மிஷன் தெரு' நாவலை வாசகசாலை அமைப்பினர் மறுபிரசுரம் செய்துள்ளனர். மன்னார்குடிப் பகுதி யைச் சேர்ந்த கள்ளர் சமூகத்தினர் கொஞ்சம் கொஞ்சமாக கிறிஸ்துவ மதத்துக்கு மாறிக்கொண் டிருந்த பின்புலத்தைக் கொண்டு எழுதிய இந்த நாவல் இதுவரை கண்டுகொள்ளப்படாமலே இருந் தது. தற்போது வாசக வெளிச்சம் கண்டிருக்கிறது.
*
ஆயிரம் பொன்!
பணமதிப்பு நீக்கத்துக்கு இடையிலும் ஒரு புத்தகம் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது. அது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையைப் பற்றி எழுத்தாளர் வாஸந்தி எழுதிய 'அம்மா: ஜெயலலிதாஸ் ஜர்னி ஃப்ரம் மூவி ஸ்டார் டூ பொலிட்டிக்கல் குயின்'. ஏற்கெனவே, ஜெயலலிதா வாழ்க்கையைப் பற்றி வாஸந்தி எழுதிய நூல் ஒன்றை வெளியிடுவதற்கு எதிராக ஜெயலலிதா வழக்கு போட்டிருந்ததையொட்டி அந்த நூலுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போதைய நூல் சுருக்கமான வரலாறே! எனினும், இதுவரைக்கும் 20 ஆயிரம் பிரதிகளுக்கு மேல் விற்றிருக்கிறது!
*
குட்டியின் பாய்ச்சல்!
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் மகன் ஹரிபிரசாத் 'க்ளீன் போல்டு' என்ற எட்டு நிமிஷங்கள் ஓடக்கூடிய குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார். அண்ணா பல்கலைக் கழகத்தில் மீடியா சயின்ஸ் மாணவரான ஹரி அடுத்து, எஸ்ராவை வைத்து ஆவணப்படம் எடுக்கவிருப்பதாகத் தகவல்.
*
இடது: ஹரிபிரசாத் | வலது: கிங் விஸ்வா
காமிக்ஸ் காவலர் கிங் விஸ்வா
ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபல மாக இருக்கும் ஃப்ரூ காமிக்ஸ் 1948 முதல் ஃபேண்டம் காமிக்ஸ் கதை களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள். காமிக்ஸ் வளர்ச்சிக்காகப் பாடுபடுபவர்களுக்கு 'FREW CRUE' என்ற விருதை அவர்கள் வழங்கிவருகிறார்கள். அந்த விருது தமிழ் காமிக்ஸ் ஆர்வலரான கிங் விஸ்வா வுக்குக் கடந்த அக்டோபர் மாதம் கிடைத்திருக் கிறது. இந்த விருதை ஆசியாவிலேயே முதன்முறையாகப் பெற்றவர் விஸ்வா!
*
நிழல் திருவும் சரவணகுமாரும்!
சீனுராமசாமியிடம் பரிசுபெறும் சரவணகுமார்.
'நிழல்' பதிப்பகத்தின் பதிப்பாசிரியரும் திரைப்பட ஆர்வலருமான திருநாவுக்கரசு தொடர்ந்து குறும்படங்களை இளைஞர்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் குறும்படப் பட்டறைகள் நடத்திவருகிறார். இதுவரை 45 பட்டறைகள் நடத்தியிருக்கிறார். அந்தப் பட்டறைகளில் பயின்று பின் திரைப்படம் சார்ந்த தேடலைத் தொடங்கி '93 நாட்-அவுட்' என்ற குறும்படத்தை எடுத்திருக்கிறார் சரவணகுமார் என்ற இளைஞர். உலக அளவில் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு 20-க்கும் மேற்பட்ட விருதுகள் வாங்கியிருக்கிறார். 80-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தக் குறும்படம் திரையிடப்பட்டிருக்கிறது!