Last Updated : 18 Jun, 2017 10:25 AM

 

Published : 18 Jun 2017 10:25 AM
Last Updated : 18 Jun 2017 10:25 AM

‘தம்பி, நான் ஏது செய்வேனடா?’

அது 1990-களின் முற்பகுதி. ‘மனஓசை’ இதழின் மொத்தத் தொகுப்பில் பாரதிபுத்திரனின் கவிதைகள் படிக்கக் கிடைத்தன. அந்தக் காலத்தில் பசுவய்யா, பிரமிள், கலாப்ரியா, தேவதேவன், விக்கிரமாதித்யன், சமயவேல் என ஒருபுறம். வானம்பாடியின் தொடர்ச்சியாக புவியரசு, அப்துல் ரகுமான், மேத்தா போன்றோர் ஒருபுறம். இடதுசாரி கவிஞர்களில் இன்குலாப், இளவேனில், புதிய ஜீவா, கலை நேச பிரபு, இளந்தி என ஒருபுறம்.

இவர்கள் அனைவரிலும் பாரதிபுத்திரன் தனி ரகம். மதுரையில் பாரதிபுத்திரனைப் பிரத்யேகமாக வாசிக்கும் ஒரு கூட்டம் இருந்தது. அதற்கு தனித்த காரணமும் இருந்தது. பாரதிபுத்திரனின் பிரகடனமில்லாத அரசியல், சமூகக் கவிதைகளே அப்படியான பிரத்யேக ஈர்ப்புக்கான காரணம். இடதுசாரிக் கவிஞர்கள் அல்லது இடதுசாரி சாய்வு கொண்டவர்கள், கோஷங்களை மாத்திரமே எழுதக் கூடியவர்கள், சுவர் எழுத்துகளையே கவிதை என நம்புகின்றவர்கள், அதையே பிரசுரிக்கவும் செய்கிறார்கள் என்றெல்லாம் சொல்லப்படுவதுண்டு. அதில் பெருமளவில் உண்மையும் உண்டு. ஆனால், பாரதிபுத்திரனின் பிரத்யேகத் தன்மை, கோஷங்கள் இல்லாமல் சமூக அவலங்களையும் துயரங்களையும் எழுதியதுதான். அவ்வகையில் அவர் முன்மாதிரி இல்லாதவர். ஒரு இடதுசாரி அமைப்பின் இதழான ‘மனஓசை’யில்தான் அவருடைய கவிதைகள் அதிகம் வெளிவந்தன.

மிகையில் கொர்பசேவின்

‘பிரிஸ்தோரிக்கா’

இயக்கம் ரஷ்யாவில் நிகழ்த்திய மாற்றங்கள் அல்லது துயர்மிகு வீழ்ச்சிகளும் தியனான்மென் சதுக்கத்தில் உருண்ட பீரங்கிகளும் உலகளவில் இடதுசாரி இயங்கங்களைப் பெருமளவில் பாதித்ததால் ‘மனஓசை’ போன்ற பத்திரிகைகள் நின்றுபோகின்றன. அதன் பிறகு பாரதிபுத்திரனையும் நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்தக் காலகட்டத்தில் அவர் சென்னை கிறிஸ்துவக் கல்லூரியிலிருந்து கிழக்கு நோக்கி போகத் தொடங்குகிறார். மாமல்லபுரத்தில் போய் நிற்கிறார். கடல் அருகே இருக்கும் சிற்பங்களுடன் பேசத் தொடங்குகிறார். முனைவர் பாலுசாமியின் (பாரதிபுத்திரனின் இயற்பெயர் இதுதான்), ஆய்வு நூல்கள் வெளிவரத் தொடங்குகின்றன. நாயக்கர் கால ஓவியங்கள், சிற்பங்கள் என அவரது ஆய்வுப்புலம் விரிவடைகிறது. தமிழின் கூரிய ஒரு கவிஞனை ஆய்வாளனாய் ஆக்கியதற்கு யார் பொறுப்பு? இதற்கு சந்தோஷப்பட வேண்டுமா துக்கப்பட வேண்டுமா? கவிஞன் ஆய்வாளன் ஆவது பரிணாம வளர்ச்சியா? பாரதிபுத்திரனிடம் கேட்டால் அவர் தனது நூலின் பெயர் ஒன்றை பதிலாகச் சொல்லக்கூடும் ‘தம்பி,- நான் ஏது செய்வேனடா?’

கவிதைக்கு அவர் திரும்பவேண்டுமென எம்மைப் போன்றோர் அவரை மறுபடியும் மறுபடியும் அழைப்பதுண்டு. அவருடைய பிரத்யேகமான புன்னகையுடன் “செய்யணுங்க” என்பார். ஆனால், அந்தப் புன்னைகையின் பொருள் ஆழம் மிக்கது, துயரம் மிக்கது.

அவரது ‘மாரிக்கால இரவுகள்’ தொகுப்பில் இப்படி ஒரு கவிதை:

எப்போதும் சந்திப்போம்

இதயத்து மறைவிடங்களை இடித்துவிடுவோம்.

எப்போதும் இதழ்களில்

பூத்திருக்கட்டும் ஒரு புன்னகை.

அணைத்துக்கொள்ளவும் தட்டிக்கொடுக்கவும்

தயாராக இருக்கட்டும் கைகள்.

திருமண நாளில் வாழ்த்துச் சொல்லும்போதும்

போராட்டக் களத்தில் நம்பிக்கை சொல்லும்போதும்

உண்மையாய் ஒலிக்கட்டும் ஒரு சொல்.

மலர்களோடு வரவேண்டும் நீ

கனிகளோடு வழியனுப்ப வேண்டும் நான்.

அந்திநேரத்து மங்கும் ஒளியாய் இந்த நாட்கள்

உனக்காகத் தீபம் கொண்டு உன் வீடு வரும் வழியில்

நீயும் எதிர்ப்படு அதேபோல.

நம்மைச் சூழ்ந்து

நாம் எப்போதும் இருப்போம் காற்றுப்போல

என் இனியவனே!

மனிதனின் இறுதி இலட்சியம்

மனிதனாக ஆவதுதான்.

இந்தக் கால் நூற்றாண்டு காலத் தோழமையில் அதிகபட்சம் அவரைப் பத்து முறைக்குள்தான் சந்தித்திருப்பேன். எனக்கும் அவருக்குமான ஒரே தொடர்புக் கண்ணி ‘மாரிக்கால இரவுகள்’ தொகுப்பு மாத்திரமே. அந்தத் தொகுப்பின் பின் அட்டைக் கவிதை நம்மிடம் இப்படிப் பேசும்:

முந்தானைக்குள் புதைத்த முகத்தில்

குமுறும் கண்ணீரோ

கட்டப்பட்டு அடிபடும் விலங்காய்

நெளிந்து முணங்கிச்

சுருளும் ஜீவனின் வலியோ

உள்ளிழுக்கும் நீரில்

இறுதிமுறையாய் மேல்வந்து தத்தளித்து

வான் உதிர அலறும் உயிரின் ஓரமோ

எது தந்தவை இவை?

எரியும் ரணங்களிலிருந்து

வழிகின்றன சொற்கள்.

மிக உறுதியாகத் தோழர், இந்த இருபத்தேழு வருடங்களாய் எரியும் ரணங்களிலிருந்து வழிகின்றன உங்கள் சொற்கள்! உங்கள் சொற்கள்!



பாரதிபுத்திரனும் பாலுசாமியும்

பாரதிபுத்திரனாக:

மாரிக்கால இரவுகள்

- (கவிதை), தடாகம் வெளியீடு.

மிளகுக் கொடிகள்

வி.எஸ். அனில்குமாருடன் இணைந்து அண்மைக்கால மலையாளக் கவிதைகளின் மொழிபெயர்ப்பு, அகரம் வெளியீடு.

தம்பி, -நான் ஏது செய்வேனடா?

(பாரதியைப் பற்றி பாரதிபுத்திரனிடம் பா. ரவிக்குமார், பச்சியப்பன் எடுத்த நேர்காணல்), பொன்னி வெளியீடு.

மேலும், எம்.சி.சி. ‘வனம்’ கவியரங்கில் வாசிக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்புகளான ‘வனம்’, வானம் பிறந்தது’ ஆகியவற்றின் தொகுப்பாசிரியர்களுள் ஒருவராகவும் இருந்திருக்கிறார்.

பாலுசாமியாக:

கொல்லிமலை மக்கள் பாடல்கள்

(பதிப்பாசிரியராக), கலைஞன் வெளியீடு.

அர்ச்சுனன் தபசு மாமல்லபுரத்தின் இமயச் சிற்பம்,

காலச்சுவடு வெளியீடு.

மாமல்லபுரம்: புலிக்குகையும் கிருஷ்ண மண்டபமும்,

காலச்சுவடு வெளியீடு.

நாயக்கர் காலக் கலைக் கோட்பாடு,

காலச்சுவடு வெளியீடு.

சித்திர மாடம்

தமிழ்நாட்டுச் சுவரோவியங்களைப் பற்றிய கட்டுரைத் தொகுப்பு (தொகுப்பாசிரியராக), பரிசல் வெளியீடு.

சித்திரக்கூடம்

திருப்புடைமருதூர் ஓவியங்கள் (விரைவில் வெளிவரவிருக்கிறது).

படம்: அய்யப்ப மாதவன்

- சாம்ராஜ், கவிஞர், ‘என்றுதானே சொன்னார்கள்!’ கவிதைத் தொகுப்பு உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர், தொடர்புக்கு: naansamraj@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x