

கல்வி கற்பது மனிதர்களின் வாழ்நாள் செயல்பாடு. மனித சமூகத்தைப் பிணைத்துள்ள அடிமைத் தளைகளிலிருந்து விடுபட்டு, மேலெழ உதவும் ஏணி கல்வி. கற்றுத்தர முற்படுகிற எவரும் தினசரி கற்பவராய் இருந்தாலொழிய, மற்றவர்களுக்குச் சிறப்பாகக் கற்றுத்தர அவரால் முடியாது.
‘எங்களை ஏன் டீச்சர் ஃபெயிலாக்கினீங்க?’ (தமிழில்: ஜே.ஷாஜஹான், வாசல் பதிப்பகம்) என்று ஆசிரியருக்குக் கடிதம் எழுதிக் கேள்விக்கணை தொடுத்த மாணவர்களின் குரல், ஏற்புடைய பதில் கிடைக்காமல் தேம்பி ஓய்வதை நாம் உணர வேண்டும். எவ்வாறு குழந்தைகள் கற்கின்றனர்... அவர்கள் எப்படி கல்வியில் தோற்றுப்போகின்றனர் என்பது குறித்த ஜான் ஹோல்டின் ‘ஆசிரியரின் டைரி’ (யுரேகா வெளியீடு) நூல் நமக்குப் புதிய வாசல் திறக்கும். அதேபோல, கேளாக் காதினரின் காதுகளில் உறைக்கும்படி உரத்து ஒலித்தது ‘நம் கல்வி... நம் உரிமை’ நூல் (‘தி இந்து’ வெளியீடு). காந்தி, அம்பேத்கர், தாகூர், பாரதியார், விவேகானந்தர், பெர்ட்ரண்ட் ரஸ்ஸல், தந்தை பெரியார், லெனின் உள்ளிட்ட பல சிந்தனையாளர்களின் கல்விச் சிந்தனைகளைத் தனித்தனி நூல்களாக ‘பாரதி புத்தகாலயம்’ வெளியிட்டுள்ளது.
‘டோட்டோசான்: ஜன்னலில் ஒரு சிறுமி’ (தமிழில் அ. வள்ளிநாயகம், சொ. பிரபாகரன்), கிஜுபாய் பாத்கேகாவின் ‘பகல் கனவு’, ‘ஆயிஷா’ நடராசனின் ‘இது யாருடைய வகுப்பறை’, ச.சீ. ராஜகோபாலனின் ‘தமிழகப் பள்ளிக் கல்வி’, சிங்கிஸ் ஐத்மாத்தவின் சோவியத் நாவலான ‘முதல் ஆசிரியர்’, ‘தமிழகத்தில் கல்வி’ - சுந்தர ராமசாமி, வசந்திதேவி உரையாடல் பதிவு (காலச்சுவடு), ‘தலித் மக்களும் கல்வியும்‘ (புலம்), ‘ஓய்ந்திருக்கலாகாது’ கல்விச் சிறுகதைகள் (பாரதி புத்தகாலயம்), ‘முரண்பாட்டை முன் வைத்தல்’ பேரா. கிருஷ்ணகுமார், பேராசிரியர் ச. மாடசாமியின் ‘போயிட்டு வாங்க சார்’, ‘என் சிவப்பு பால் பாயிண்ட் பேனா’, சேவியர் தனிநாயகம் அடிகளின் ‘பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் கல்வி’, ‘உனக்குப் படிக்கத் தெரியாது’ (என்னுடைய மொழிபெயர்ப்பு), ‘டேஞ்சர் ஸ்கூல்’ (தமிழில்: அப்பணசாமி), பிரளயன் எழுதிய ‘கல்வியில் நாடகம்’ ச. தமிழ்ச் செல்வன் எழுதிய ‘இருளும் ஒளியும்’ (அறிவொளிக் கல்வி பற்றி), ச.முருகபூபதியின் ‘கதை சொல்லும் கலை’ - இப்படி இன்னும் பல நூல்கள் கல்வித் தளத்தில் அலையடிக்கின்றன. கல்வி தொடர்பான விழிப்புணர்வைப் பெற மேற்கண்ட நூல்கள் உதவும் என்பது நம்பிக்கை.
- கமலாலயன், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்.