

இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல நாவலாசிரியை டோரிஸ் லெஸ்ஸிங் தன்னுடைய 94ஆம் வயதில் கடந்த மாதம் காலமானார்.
1919 ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி ஆல்பிரட் குக் டெய்லர் மற்றும் எமிலி மாட் ஆகியோருக்கு மகளாக பெர்ஷியாவில்(தற்போதைய ஈரான்) பிறந்தார் டோரிஸ் லெஸ்ஸிங்.
ஏழு வயதில் பள்ளியில் படிப்பை ஆரம்பித்த டோரிஸ் லெஸ்ஸிங், பின்னர் சலீஸ்பெரியிலுள்ள பெண்கள் பள்ளியில் சேர்ந்தார். 14ஆம் வயதில் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டார். பிறகு ஒரு அலுவலகத்தில் தட்டச்சராகவும், பத்திரிகையாளராகவும் பணிபுரிந்தார். இந்தக் காலகட்டத்தில்தான் டோரிஸ் லெஸ்ஸிங்கினுடைய சிறுகதைகள் சில பிரசுரமாகியிருந்தன.
1939ஆம் ஆண்டு பிராங்க் சார்லஸ் விஸ்டம் என்பவரைத் திருமணம் செய்துகொண்டு, ஜான், ஜூன் என்கிற இரண்டு குழந்தைகளுக்குத் தாயானார். பின் 1943ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். 1945ஆம் ஆண்டு ஜெர்மனியிலிருந்து ரூடேசியாவிற்கு குடிபுகுந்து, அங்கு அரசியலில் ஈடுபட்டிருந்த கோட்பிரைட் என்பவரை மறுமணம் செய்துகொண்டு, தென் ரூடேசியன் தொழிலாளர் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.
1949ஆம் ஆண்டு கோட்பிரைட்டிடமிருந்து விவாகரத்து பெற்றுத் தன் மகன் பீட்டரோடும், 'தி கிராஸ் இஸ் சிங்கிங்' (The Grass is Singing) என்கிற தன்னுடைய முதல் நாவலின் கையெழுத்துப் பிரதியோடும் லண்டனுக்குக் குடிபெயர்ந்தார் டோரிஸ் லெஸ்ஸிங். இன அடக்குமுறைகளையும், காலனிய ஆதிக்கத்தையும் குறித்து சற்றே ஆராய்ந்து எழுதப்பட்ட அவரது முதல் நாவல் 1950ஆம் ஆண்டு வெளியாகி, பெருத்த வரவேற்பைப் பெற்றது.
1952 முதல் 1956வரை பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு அணு ஆயுதங்களுக்கு எதிராக முழங்கிவந்தார் டோரிஸ் லெஸ்ஸிங். 1956இல் ஹங்கேரியக் கிளர்ச்சி நடந்தபோது, பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலக்கிக்கொண்டார். தென் ஆப்பிரிக்காவிலுள்ள ஆட்சிமுறை குறித்து இவர் விமர்சனம் செய்தபோது, 1956 முதல் 1995வரை, தன் நாட்டிற்குள் நுழைய இவருக்குத் தடைவிதித்தது தென் ஆப்பிரிக்க அரசு.
1952 முதல் 1969வரை வெளியான லெஸ்ஸிங்கினுடைய 'ஹர் சில்ட்ரன் ஆஃப் வயலன்ஸ்’ (Her Children of Violence) நாவல் தொடர், அவரைத் தேர்ந்த நாவலாசிரியராகவும் பெண்ணியவாதியாகவும் நிரூபித்தது. இத்தொடர் வெளிவந்த காலத்தில், ஏ பிராப்பர் மேரேஜ் (1954), கோயிங் ஹோம் (1957), தி கோல்டன் நோட்புக் (1962), எ மேன் அண்டு டூ வுமன் (1963), தி பிளாக் மடோனா (1966) ஆகிய படைப்புகளை இவர் எழுதியுள்ளார்.
லண்டனில் குண்டுவெடிப்புத் தாக்குதல் நடத்த முனைகிற இளம்பெண்ணொருத்தியை மையப்படுத்தி 1985இல் வெளியான, லெஸ்ஸிங்கினுடைய 'தி குட் டெர்ரரிஸ்ட்' நாவல், இன்றளவும் லண்டனில் பெருத்த எதிரொலியை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.