Last Updated : 03 Jan, 2014 12:15 PM

 

Published : 03 Jan 2014 12:15 PM
Last Updated : 03 Jan 2014 12:15 PM

பாட்டரவம் கேட்டிலையோ..!

கோயம்புத்தூர் புத்தகக் கண்காட்சி புலம் ஸ்டாலில் அமர்ந்திருக்கும்போது 'பாட்டுத் திறம்' நூல் சூடான பக்கோடாவைப் போல விற்றுக்கொண்டிருந்ததைக் கண்டு ஆர்வமாகி இந்நூலை வாங்கினேன். நவீன கவிஞரான மகுடேசுவரன் ஒரு திரைப்படப் பாடலாசிரியரும் கூட. திரைப்படங்களுக்குப் பாட்டெழுதும் வேட்கை பள்ளி நாட்களிலேயே அவருக்கிருந்ததை அவரே நூலில் பதிவு செய்திருக்கிறார். அனேகமாக பஞ்சு அருணாசலம் அவரது அந்நாளைய ஆதர்சமாக இருந்திருக்கலாமென்பது என் துணிபு.

தமிழ்த் திரையிசைப் பாடல்களில் எண்பது விழுக்காடு காதல் அல்லது காமம். பத்து விழுக்காடு சுயபீற்றல். இன்னொரு பத்து விழுக்காடு பிரிவு துயர் அல்லது தத்துவப்புலம்பல் - இவைதான் என் சொந்த வகைப்பாடாக ஒரு காலத்தில் இருந்தன. அர்த்தமற்ற உளறல்கள், ஆபாசம், தேய்வழக்கு சொற்கள், ஒரே மாதிரியான பாவங்கள் ஆகியனவற்றிலிருந்து ஒரு நவீன வாசகன் விலகியிருக்க வேண்டுமென்று நினைத்திருந்தேன்.

ஆனால், வயதாக வயதாக சில பாடல்கள் நம்மை நெருங்கி வருகின்றன. நாமறியாமலே அவற்றோடு ஒரு நேசம் உருவாகி விடுகிறது. நம் சொந்தவாழ்வின் தருணங்களோடு ஒட்டி உறவாடக்கூடிய ஆயிரக்கணக்கான பாடல்கள் தமிழில் எழுதப்பட்டுள்ளன என்பது மெள்ள புத்திக்கு உறைக்கிறது. பிரக்ஞையோடு பாடல் வரிகளை, இசை நுணுக்கங்களை, பாடகர்கள் காட்டும் ஜாலங்களை ரசிக்கத் துவங்குகையில் உலகின் எந்த இசை வடிவங்களோடும் ஒப்பிடத்தகுந்த அம்சங்கள் தமிழ்த் திரையிசையில் பல பாடல்களுக்கு இருக்கின்றன என்பது தெளிவாகிறது.

கண்ணதாசன், வாலி, பஞ்சு அருணாசலம், புலமைப்பித்தன், கங்கை அமரன், முத்துலிங்கம், நா. காமராசன், ஆபாவாணன், குருவிக்கரம்பை சண்முகம் ஆகிய பாடலாசிரியர்கள் எழுதிய சில பாடல்களின் நாடகீய தருணங்களை, வரிகளில் தவழும் கவித்துவத்தை, கவிகளின் சொற்தேர்வுத் திறனை தனக்கேயுரிய செறிவான உரைநடையில் அலசுகிறார் மகுடேசுவரன். கூடவே, பாடல் உருவான வரலாற்றுச் செய்திகளையும் சொல்லிச் செல்வது வாசிப்பு சுவாரஸ்யத்தை அதிகரிக்கிறது.

எங்கேயோ கேட்ட குரலின் தோல்வியே ரஜினி தான் தேர்ந்தெடுக்க வேண்டிய பாதையை தீர்மானிக்க வைத்தது; ஊமை விழிகளில் ஆபாவாணன் கைக்கொண்ட சினிமா ஸ்கோப் தொழில்நுட்பம் எப்படி தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றியது; 'இதோ இருக்கானே இவன் செருப்பு, சாயபுவைத் தவிர, எல்லா பூவையும் எழுதிட்டான்' என கங்கை அமரனைப் பற்றி கண்ணதாசன் அடித்த கமெண்ட்; பக்த பிரகலாதாவிற்குப் போடப்பட்ட செட்டில் வண்ண விளக்குகளைப் பொருத்தி படம் பிடிக்கப்பட்டதுதான் 'இளமை இதோ இதோ...' பாடல்; பாரதிதாசன் திரைப்படங்களுக்குப் பணியாற்ற வாங்கிய பெருஞ்சம்பளம் என சுவாரஸ்யமான தகவல்களை அடுக்கிக்கொண்டே இருக்கிறார் நூலாசிரியர்.

தனிப்பட்ட ரசனையில் எனக்குப் பிடித்த தமிழ் சினிமா பாடலாசிரியர்கள் பஞ்சு அருணாசலமும், கங்கை அமரனும். எளிமையான சொற்களை வைத்துக்கொண்டு ஆயிரக்கணக்கில் மகத்தான பாடல்களை உருவாக்கிய இவர்களிருவரும் அதற்குரிய அங்கீகாரத்தைப் பெற்றிருந்தார்களா என்பது கேள்விக்குரியது. இவர்களது வரிகளெல்லாம் சமகாலத்திய பெரும்புலவர்கள் எழுதியதாகவே தமிழ்ச்சமூகம் கருதியது வன்கொடுமை. இவர்கள் எழுதிய பாடல்களைத் துப்பறிந்து கண்டுபிடிப்பது, அதன் கவித்துவ உச்சங்களை அலசுவது என் வாடிக்கைகளுள் ஒன்று. இந்நூலில் கங்கை அமரனின் உச்ச கட்ட வெற்றிப்பாடலான 'மாங்குயிலே..' அலசப்பட்டுள்ளது. பஞ்சு அருணாசலத்தைப் பற்றி இரண்டு விரிவான கட்டுரைகள் உள்ளன.

மகுடேசுவரனின் உரைநடை தமிழினி எழுத்தாளர்களுக்கேயுரிய மயக்கமூட்டும் மொழிச்செறிவு கொண்டது. மேலதிகமாக மகுடேஸ்வரன் அழகான கலைச்சொற்களை உருவாக்கும் திறன் படைத்தவர் (உதாரணங்கள்: ஹெட்செட் - கருஞ்சரடு; ஹீரோயிசப் படங்கள் - நாயக மயக்கப் படங்கள்; மீட்டர் - அதேயளவான நேரத்தன்மையுள்ள). கீழே அவரது உரைநடைக்கு சில சாம்பிள்களைக் கொடுக்கிறேன்.

"ஒரு பாடல் கேட்ட அனுபவத்தில் விழுந்து செத்த ஈயாகிவிட வேண்டுமேயன்றி நக்கி நகர்ந்த நாயாகிவிடக்கூடாது."

"செவியுள்ளவனின் செங்குருதிக்குள் ரத்தத் துகள்களைப் போல நடமாடிக்கொண்டே இருக்கின்றன பஞ்சு அருணாசலத்தின் பாடல்கள்."

"எண்பதுகளில் இளமைப் பருவத்திலிருந்தவர்களின் எலும்பு மஜ்ஜையை ஆராய்ந்து பார்த்தால் இந்தப் பாடல் எழுப்பிய உணர்வின் கடைசித் தொற்று எங்காவது தென்படலாம்."

இந்நூல் பெரும்பாலும் எண்பதுகளின் மத்தியில் வெளியான பாடல்களைப் பேசுகிறது. போலவே அடுத்தடுத்த பத்தாண்டுகளில் வந்த பாடலாசிரியர்களைப் பற்றியும், பாடல்களின் திறனைப் பற்றியும் அவர் நூலெழுதி வெளியீட்டால் வாசிக்கத் தயாராக இருக்கிறேன்.

நூலின் பெயர்: பாட்டுத் திறம்

ஆசிரியர்: மகுடேசுவரன்

விலை: ரூ.90/-

வெளியீடு: புலம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x