Published : 23 Nov 2014 11:04 AM
Last Updated : 23 Nov 2014 11:04 AM

பரிசு அறிவித்த அயோத்திதாசர்

தமிழிலக்கிய மரபில் தருக்கம் அல்லது வாதமுறைக்குத் தனித்த இடமுண்டு. ஆனால் அது ஐரோப்பியர் வருகைக்குப் பின்னர் மரபின் தொடர்ச்சியையும் நவீன வடிவங்களையும் உள்வாங்கிப் புதிய வடிவத்தை எட்டியது. நவீன அரசியல் பின்னணியில் அறிமுகமான பல்வேறு விஷயங்களை விவாதித்துப் பார்ப்பதற்கான மேடைகளாக அவை பரிணமித்தன. பலரும் பார்ப்பதற்கும் பங்கேற்பதற்கும் வாய்ப்பளிக்கக்கூடிய மேடை போன்ற பொதுவெளிகள் இதற்குப் பின்புலமாயின. பிரச்சாரத் தன்மை கொண்ட இந்த விவாதங்கள் அப்போது உருப்பெற்ற அச்சுக் கலாச்சாரத்தின் வழியாக எழுத்தாக்கம் பெற்றன. அப்போது அறிமுகமான பல்வேறு புதிய சமூக அரசியல் கருத்துகளின் ஏற்பு, ஏற்பின்மை போன்றவை இவ்வாறு பேச்சு, அச்சு என்னும் இரண்டு வடிவங்களிலும் விவாதிக்கப்பட்டன. இங்கிருந்த பல்வேறு சமூகக் குழுக்களும் அவரவர் தேவை சார்ந்து இத்தகைய விவாதங்களில் ஈடுபட்டன. அந்த வகையில் ஒடுக்கப்பட்டோரின் அரசியல் குழுக்களும் விவாதங்களை மேலெடுத்தன.

அவற்றுள் அயோத்திதாசரின் தமிழ்ப் பவுத்தக் குழுவினர் மேற்கொண்ட விவாதங்கள் உரிய அளவில் ஆராயப் படவில்லை. ஒடுக்கப்பட்டோர் என்கிற முறையில் சாதி மறுப்பு, இந்து மதத்திற்கு மாற்றாக பவுத்த மத ஏற்பு, இட ஒதுக்கீடு, புராண மறுப்பு போன்ற கருத்துகள் அவர்களால் விவாதிக்கப்பட்டன.

20-ம் நூற்றாண்டின் கால் பகுதிக்குப் பின்னால் தமிழகத்தில் செல்வாக்குப் பெற்ற பல்வேறு சமூகநீதிக் கருத்துகளின் வேர்கள் இங்குதான் இருக்கின்றன.

பவுத்தக் கூட்டங்களும் கண்டனங்களும்

அயோத்திதாசர், லட்சுமி நரசு, சிங்கார வேலர் ஆகிய மூவரும் கூட்டாகப் பங்கேற்ற பவுத்தக் கூட்டங்கள் பற்றியும் அவை சந்தித்த எதிர்ப்புகள் பற்றியும் திரு.வி.கல்யாணசுந்தரனார், தம் வாழ்க்கைச் சரிதத்திலேயே குறிப்பிட்டுள்ளார். பவுத்தத்தைப் புரிந்துகொண்டதில் மூவருக்கும் வேறுபாடுகள் இருப்பினும் அவை வழக்கமான சமயக் கூட்டங் களாக இல்லாமல், பல்வேறு சமூக சீர்திருத்தக் கருத்துகளை இணைத்துப் பேசும் மேடைகளாகவும் இருந்தன. அயோத்திதாசரின் வழிகாட்டுதலில் பல்வேறு இடங்களில் தொடங்கப்பட்ட பவுத்த சங்கங்கள் சார்பாக நூலகம், பள்ளி, நூல் வெளியீடுகள் போன்றவை ஒருங்கிணைக்கப்பட்டன. இச்சங்கங்கள் சார்பாகத் தனிச் சொற்பொழிவுகளும் விவாதங்களும் நடைபெற்றன. இவற்றின் உள்ளடக்கம் மேற்கண்ட கருத்துகளின் அடிப்படையில் அமைந்தன. பவுத்தர்கள் அல்லாதோரும் தலித் அல்லாதோரும் விவாதங்களில் பங்கேற்றனர். இக் கூட்டங்கள் தொடர்பான விரிவான தகவல்கள் அயோத்திதாசர் நடத்திய ‘தமிழன்’ இதழில் காணக் கிடைக்கின்றன. கோலார் தங்கவயல் சாம்பியன் ரீப்ஸ் பகுதியில் சங்கக் கிளை ஆரம்பிக்கப்பட்ட இரண்டாண்டு முடிவுக்குள் 89 சொற் பொழிவுகள் நடந்திருந்தன. மேலும் 1909-ம் ஆண்டு பெங்களூர் மேயோ மண்டபத்தில் பவுத்த ராமாயணம் பற்றி அயோத்திதாசர் ஆற்றிய சொற்பொழிவால் உண்டான விவாதம் சச்சரவாக மாறியது. இந்த விவாதம் பிறகு தமிழன் இதழிலும் தொடர்ந்தது. அயோத்திதாசருக்குப் பாம்பைப் பொட்டலமாகக் கட்டி அனுப்பி எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இரண்டு பிரசுரங்கள்

இந்த வகையில் அயோத்திதாசர் குழுவினர் மேற்கொண்ட விவாதக் கூட்டங்கள் பற்றி இரண்டு பிரசுரங்களை மட்டும் இங்கு பார்க்கலாம். (நன்றி: சென்னை ரோஜா முத்தையா நூலகம்) முதல் பிரசுரம் 1908-ம் ஆண்டு கோலார் மாரிக்குப்பம் பவுத்த சங்கத்தில் நடந்த தருக்கப் பிரசங்கம் பற்றியதாகும். பரவலான கவனம் கோரித் துண்டு நோட்டீஸாக இது அச்சிடப்பட்டுள்ளது. புத்த மதத்தை ஆதரித்தும் ஆரிய மதத்தை மறுத்தும் தலைப்பு அமைந்துள்ளது. அதை வெட்டியோ ஒட்டியோ பேச வேண்டுமென்பது நிபந்தனை. இந்தத் தருக்கப் பிரசங்கத்திற்கென்று அறிவிக்கப் பட்டிருக்கும் எட்டு ஒழுங்கு விதிகள் கவனிக்கத்தக்கவை.

• சபாநாயகர் வார்த்தைக்கு இணங்க வேண்டும்.

• சபை வணக்கத்துடன் பேச வேண்டும்.

• சரித்திர சாஸ்திர ஆதாரம் கூற வேண்டும்.

• மன வருத்தமுண்டாக்கும் சொற்களைக் கையாளக் கூடாது.

• ஒரு முறை பேசினோர் மறு முறை பேசக் கூடாது.

• சகோதர இணக்கத்தோடு பேச வேண்டும்

என்று பேச்சுக்கான ஒழுங்குகளைக் கூறும் பிரசுரம் கடைசி இரண்டு நிபந்தனைகளில் தலைப்புபற்றிப் பேசுகிறது. அதாவது பவுத்தம் கிறிஸ்துவம் முகமதியம் போன்று ஆரிய மதமென்பது எந்தத் தேசத்தில் எந்தக் காலத்தில் தோன்றியதென்பதை ஆதாரங்களுடன் பேச வேண்டும். அடுத்து, காணாப் பொருளுக்குப் பரத்துவமா காணும் பொருளுக்குப் பரத்துவமா என்று கண்டறிய வேண்டும் என்பதாக முடிகிறது. இவர்கள் தருக்க முறையை எவ்வாறு அமைத்துக்கொண்டனர் எவ்வாறு புரிந்து பயன்படுத்தினர் என்பதற்கு இப்பிரசுரம் ஒரு சான்று.

இதேபோல் சென்னை புதுப்பேட்டை பவுத்தரான ளு.ஊ. ஆதிகேசவன், என்பவர் 25.09.1912-இல் தமிழன் இதழிலும் தனிப் பிரசுரமாகவும் ஒரு நோட்டீஸ் வெளியிட்டார். பஞ்சமர்கள் எனப்படும் தாழ்த்தப்பட்டோர் இந்துக்கள் அல்ல என்பது நோட்டீஸின் வாதம். இந்தக் கருத்தை ‘புராதன சாஸ்திரத்தைக் கொண்டும், நீதிநூல் அநுபவங் கொண்டும் தக்க ஆதாரத்துடன் யெமதபிப்ராயத்தைத் தாக்கி நிருபவாயிலாக பத்திரிக்கைகளில் வெளியாக்கி வெற்றி பெறுவார்களாயின் அவர்களுக்கு யெம்மாலியன்ற ரூபாய் பதினைந்து (15) இனாமளித்து பஞ்சமரின் படாடம்பக் கருத்தை மேற்கொள்ள பாத்திரனாவேன்' என்று அறிவித்தார். இது 1500 பிரதிகள் அச்சிடப்பட்டதென்று பிரசுரத்திலேயே அறிவித்திருப்பதன் மூலம் இதன் பரவலாக்கத்தை யூகிக்கலாம். இந்தச் செயற்பாடு அயோத்திதாசரின் கருத்தியலோடு தொடர்புடையதாகும். இதே பிரசுரம் தமிழன் இதழிலும் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து தலைப்பை ஒட்டியும் வெட்டியும் எழுதப்பட்ட விவாதக் கருத்துகள் 1912 அக்டோபர் தொடங்கி 1913 மே மாதம் வரை வெளியாயின. விவாதத்தின் முடிவு என்னவாயிற்று என்பது தெரியவில்லை.

இதில் மற்றுமொரு சுவாரஸ்யமும் நடந்தது. அதாவது 09.01.1913-ம் தேதியிட்ட தமிழன் இதழில் ரங்கூனிலிருந்து லாஜரஸ் எழுதிய கடிதம் வெளியானது. அக்கடிதம் பின்வருமாறு கோருகிறது:

“இவ்வரிய கருத்தை விவாதிக்க 15 ரூபாய் போதாது. மேலும் 85 ரூபாய் நான் தருகிறேன். போட்டிக்கான பரிசை 100 ரூபாயாக உயர்த்தித்தர வேண்டும்.”

கட்டுரையாளர் ஸ்டாலின் ராஜாங்கம், செயல்பாட்டாளர் மற்றும் விமர்சகர், தொடர்புக்கு: stalinrajangam@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x