Last Updated : 18 Mar, 2017 10:39 AM

 

Published : 18 Mar 2017 10:39 AM
Last Updated : 18 Mar 2017 10:39 AM

நல் வரவு: பாதையும் பயணமும்

பாதையும் பயணமும், உதயை மு. வீரையன், விலை:ரூ.100
பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை-600014, 044-28482441

‘சுதந்திர இந்தியாவில் நாட்டின் மிகப் பெரிய பணக்காரருக்கு இருக்கும் அதே அதிகாரம் ஏழைக்கும் இருக்க வேண்டும்’ என்றார் காந்தி. ஆனால், இன்றைக்கு சுதந்திர இந்தியாவில் அதிகாரத்தின் கோரப்பிடிக்குள் சிக்கித் தவிக்கிறார்கள் ஏழை எளிய மக்கள். இப்படியான சமூக ஏற்றத்தாழ்வை கேள்விக்குள்ளாக்கும் கட்டுரைகளைத் தொடர்ந்து பல்வேறு இதழ்களில் எழுதிவரும் உதயை மு. வீரையனின் 25 கட்டுரைகள் கொண்ட தொகுப்பு. சமூகத்தின் உண்மை முகத்தை அப்படியே படம்பிடித்துக் காட்டும் கட்டுரைகள்.

இப்படியாகத்தான் இருக்கிறது எங்கள் சனங்களின் வாழ்க்கை, தொகுப்பு: சூரியசந்திரன்,
விலை:ரூ. 200, எழில் பதிப்பகம், சென்னை-600015, 9003258983

பத்திரிகையாளரும் எழுத்தாளருமான சூரியசந்திரன் 12 தலைப்புகளின் கீழ் 12 எழுத்தாளர்களோடு நிகழ்த்திய உரையாடல்களின் செறிவான தொகுப்பு. வேட்டை சமூகம், தலித் பெண்கள், கரிசல் மக்கள், கீழத்தஞ்சை விவசாயம், மீனவர் வாழ்க்கை என சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் தலைப்புகளையொட்டிய சந்திப்புகளாகவே அனைத்தும் அமைந்துள்ளன. மறைந்த எழுத்தாளர் கந்தர்வன் தொடங்கி ஜோ.டி. குரூஸ், வேல. ராமமூர்த்தி, பாமா, இமையம் உள்ளிட்டோரின் கருத்துகள் விரிவான விவாதங்களைத் தூண்டும் விதத்தில் அமைந்துள்ளன.

இன்குலாப் சாகாத வானம், பா. செயப்பிரகாசம், விலை:ரூ.20,
புலம் வெளியீடு, சென்னை-600005, 9840603499

ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக் குரலை, “மனுசங்கடா, நாங்க மனுசங்கடா…” எனும் பாடலாய் உரக்க முழங்கிய கவிஞர் இன்குலாப், எவ்விதப் பாசாங்குமற்ற எளிய வாழ்க்கைக்குச் சொந்தக்காரர். தான் ஏற்றுக்கொண்ட கொள்கையிலிருந்து துளியும் வழுவாமல் நேராய் நின்று எழுதியவர், பேசியவர், போராட்டக் களத்தில் முன்நின்றவர். “குறிகளில்லாத முகங்களில் விழிப்பேன்; மனிதம் என்றொரு பாடலை இசைப்பேன்” என்றெழுதியது போலவே வாழ்ந்த கவிஞர் இன்குலாப் குறித்த நினைவுகளை எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் குறுநூலாக்கியுள்ளார். காலத்தால் என்றென்றும் நினைக்கப்படும் கவிஞருக்கான சிறந்த நூலஞ்சலி.

வள்ளுவர்கள், பேரா.சு.சண்முகசுந்தரம், விலை: ரூ.200,
காவ்யா, சென்னை-600024, 044-23726882

வள்ளுவர் பிறந்த காலம் 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதா, வள்ளுவர் என்பவர் ஒருவரா, பலரா… எனப் பற்பல கேள்விகளுக்கான பதிலை நம்மால் இன்னும் அறுதியிட்டுக் கூற முடியவில்லை. வள்ளுவர் குறித்து காலங்காலமாக இருந்துவரும் கருத்தாடல்களை, வாய்மொழிக் கதைகளைத் தொகுத்துள்ளார். அமைப்பியல் பார்வையில் வள்ளுவர் கதைகள், திருக்குறளால் பாதிக்கப்பட்ட திரைக்கவிதைகள், புதுக்கவிதையும் திருக்குறளும் ஆகிய தலைப்புகளில் தற்காலத்தோடும் திருக்குறளைத் தொடர்புபடுத்தி எழுதியுள்ள கட்டுரைகள் நூலாசிரியரின் தோய்ந்த ஆய்வுக்குச் சான்றாகின்றன.

பண்டைய இந்தியாவில் சமூக உருவாக்கம், ஆர்.எஸ். சர்மா,
தமிழில் பாரதி - சுவிதா முகில், விலை: ரூ.90, புதுமை பதிப்பகம், சென்னை - 5,
72002 60086.

கி.மு. 1500-1000 காலகட்டத்தில் ஆளும் பழங்குடி அரசின் கீழே தனியுடமை தோன்றியது. கி.மு. 1000- 500 காலகட்டத்தில் நிலத்தில் தனியுடைமை எல்லை வரையறுக்கப்பட்டு விவசாயம் செய்யப்பட்டது. அதன் பிறகு கி.மு. 322-லிருந்து கி.மு. 200 வரை மையப்படுத்தப்பட்ட அரசு உருவாகி அடிமைச் சமூகத்தைத் திடப்படுத்தியது. சுரண்டலைப் பாதுகாக்கும் வழிமுறையாக வர்ணாசிரம தர்மம் வடிவமைக்கப்பட்டது. இப்படித் தொடர்ச்சியாக இந்திய சமூகத்தை வரையறுத்த பல்வேறு விஷயங்களைப் பற்றியும் சர்மா எழுதியிருக்கிறார். சமூகவியலில் ஆர்வம் கொண்டோருக்கான நூல் இது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x