Published : 11 Feb 2017 10:33 AM
Last Updated : 11 Feb 2017 10:33 AM

நினைவுகளில் கரைந்துபோன உலக ஜன்னல்

பதினைந்து - இருபது ஆண்டுகளுக்கு முன்புவரை மணவை முஸ்தபா என்ற பெயரை கேள்விப்படும் போதெல்லாம், அந்தப் பெயருடன் ஒட்டிய மற்றொரு பெயரையும் சேர்த்தே பலரும் கேள்விப்படுவார்கள். அந்தப் பெயர் 'யுனெஸ்கோ கூரியர்'. ஐ.நா-வின் பண்பாட்டுத் துணை நிறுவனமான யுனெஸ்கோ, சர்வதேச மொழிகளில் அச்சு இதழ் ஒன்றை நடத்திவந்தது. அந்த இதழ் 16 ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழிலும் வெளியாகிக்கொண்டிருந்தது. தமிழ் மட்டுமே அறிந்த வாசகர்களுக்கு உலகு நோக்கிய ஜன்னலாக அது திகழ்ந்தது.

ஆறு ரூபாய் பொக்கிஷம்

தொண்ணூறுகளின் இரண்டாம் பாதியில் என்னுடைய தமிழ்ப் பேராசிரியர் க. பூரணச்சந்திரனின் வீட்டில்தான் யுனெஸ்கோ கூரியரை முதன்முதலில் பார்த்தேன். வண்ண அட்டை, கறுப்பு வெள்ளை உள்பக்கங்கள், தரமான ஒளிப்படங்கள், மேம்பட்ட அச்சு, மாறுபட்ட வடிவமைப்பு என்று புதிய உலகைக் காட்டியது அந்த இதழ். அன்றைய மதிப்பில் வெறும் ஆறே ரூபாய். விலை மலிவுதான். ஆனால், சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பேசுபொருட்கள், விரிவான கட்டுரைகள், எழுத்தாளர்-அறிஞர்களின் கருத்துகளை அள்ளி வந்த பொக்கிஷமாக அது திகழ்ந்தது.

யுனெஸ்கோ கூரியரின் முதல் சிறப்பு, ஒவ்வொரு இதழும் ஒரு மையக் கருவை அடிப்படையாகக் கொண்டே வெளியாவது. புதிய புதிய சொற்கள்; கலை, அறிவியல், கல்வி, சமூகம், பண்பாடு, மானிடவியல் என பல்வேறு துறைகளின் முக்கிய அம்சங்களை அலசும் கட்டுரைகள், சர்வதேச ஒளிப்படக் கலைஞர்களின் ஒளிப்படங்கள், ஓவியங்கள் எனத் தமிழ் இதழியலின் கால் தடங்கள் பாவாத பாதை அது. 'உலகைக் காட்டும் ஜன்னல்' என்ற அந்த இதழின் அடைமொழி, அதைப் பொருத்தமாக உணர்த்தியது.

கூரியர் உலகின் சிருஷ்டிகர்த்தாக்கள்

தமிழுக்கு அறிவுச் செல்வங்களைக் கொண்டுவந்து சேர்ப்பதை, தன் வாழ்நாள் கடமைபோல் கருதி மேற்கொண்டுவந்த கல்வியாளரும், அந்தக் காலத்தில் யுனெஸ்கோவின் துணை இயக்குநராக இருந்தவருமான மால்கம் ஆதிசேஷையா தான், யுனெஸ்கோ கூரியர் இதழ் தமிழில் தொடங்கப்பட முக்கியக் காரணம். 1967 ஜூலை மாதம் தமிழில் தொடங்கப்படுவதை ஒட்டியே, இந்தியிலும் கூரியர் இதழ் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இதழின் ஆசிரியர்களாக எஸ். கோவிந்த ராஜூலு, தெ.பொ.மீனாட்சிசுந்தரம், நெ.து. சுந்தரவடிவேலு ஆகியோர் செயல்பட்டதற்குப் பின்னர், மணவை முஸ்தபா ஆசிரியர் பொறுப்பை ஏற்றார். யுனெஸ்கோ கூரியர் இதழ் ஆசிரியர்களின் முக்கியமான பணியைத் தாண்டி, இதழுக்குத் தொடர்ச்சியாகப் பங்களித்த பல்வேறு மொழிபெயர்ப்பாளர்களின் பணியும் அளப்பரியது.

தமிழில் பல மொழிபெயர்ப்பு இதழ்களுக்கு இருந்த முக்கியப் பிரச்சினையை யுனெஸ்கோ கூரியரும் எதிர்கொண்டது. நேரடியாக நம் மொழியில் வாசிக்கக்கூடிய அளவிலான எளிமையை, அதனால் எட்ட முடியவில்லை. இருந்தபோதும், வெளியான காலத்தில் அந்த இதழ் வெளியிட்ட கருத்துகள், பேசுபொருட்கள் அதன் சந்தாதாரர்களின் புரிதலைப் பல வகைகளில் மேம்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அத்துடன், பொது நூலகங்கள் அனைத்துக்கும் யுனெஸ்கோ கூரியர் சென்றுகொண்டிருந்தது.

தமிழ்ச் சிறப்பிதழ்

தமிழ்நாட்டைப் பற்றிய தனிச் சிறப்பிதழை 'தமிழரின் வாழும் பண்பாடு' என்ற பெயரில் யுனெஸ்கோ கூரியர் மார்ச் 1984-ல் வெளியிட்டது. அந்த இதழ் வெளியாக முக்கியக் காரணமாக இருந்த பிரெஞ்சு-தமிழ் ஆய்வாளர் பிரான்சுவா குரோ, 'சங்க இலக்கியத்தில் நிலக் காட்சி' என்ற கட்டுரையை எழுதியிருந்தார். அவருடன் எழுத்தாளர்கள் சுந்தர ராமசாமி, அம்பை, எஸ்.ராமகிருஷ்ணன் (க்ரியா), சு. தியடோர் பாஸ்கரனின் மனைவி திலகா பாஸ்கரன் (தமிழர் உணவு குறித்து) ஆகியோரும் கட்டுரைகள் எழுதியிருந்தனர். தமிழ்ப் பண்பாட்டைப் பற்றி சுருக்கமான, அதேநேரம் அழகானதொரு சித்திரத்தை அந்த இதழ் உலக மக்கள் மத்தியில் உருவாக்கியது. தமிழ் உள்ளிட்ட 27 உலக மொழிகளில் அந்த இதழ் வெளியாகி இருந்தது.

நிரப்பப்படாத வெற்றிடம்

‘யுனெஸ்கோ கூரியர்’, நிதி நெருக்கடிகளைக் காரணம் காட்டி 2001-ல் நிறுத்தப்பட்டது. செய்தி அறிந்து, சில தகவல்களைச் சேகரிப்பதற்காக சென்னை சேத்துப்பட்டில் இருந்த அந்த இதழின் அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன். மணவை முஸ்தபாவை சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது, தமிழ்ப் பண்பாட்டுச் சிறப்பிதழ், இந்தியச் சிறப்பிதழ் பற்றிக் குறிப்பிட்டார். இந்த இரண்டு இதழ்களின் நகல்களைப் பெற முடிந்தது. அன்றைக்கு இதழ் நிற்பது தொடர்பான விரக்தியுடனே அவர் பேசினார். அன்றைய தமிழக அரசு நினைத்திருந்தால், ‘யுனெஸ்கோ கூரிய’ரின் தமிழ் பதிப்பு ஒருவேளை காப்பாற்றப்பட்டிருக்கலாம். அதிர்ஷ்டமிருந்தால் யுனெஸ்கோ கூரியர் பழைய தமிழ் இதழ்கள் தனிச் சேகரிப்பிலும், சில நூலகங்களிலும் கிடைக்கலாம்.

தற்போதும் யுனெஸ்கோ கூரியர் ஆங்கிலத்தில் வெளியாகிக்கொண்டிருக்கிறது. அத்துடன் ஐ.நா. அங்கீகரித்துள்ள ஆறு மொழிகளில் அச்சு இதழாக வும், இணையத்தில் இலவசமாகவும் வெளியாகி வருகிறது. மொழிபெயர்ப்புச் சிக்கல்களைத் தாண்டி, வாழும் இதழாக ‘யுனெஸ்கோ கூரியர்’-தமிழ் ஏற்படுத்திய வெற்றிடம், இதுவரை இட்டு நிரப்பப்படாமலேயே இருக்கிறது.

- ஆதி வள்ளியப்பன்,
தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in
தமிழ்ப் பதிப்பு அட்டைப் பட உதவி: சுதாகர் கத்தக்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x