Last Updated : 11 Mar, 2017 10:26 AM

 

Published : 11 Mar 2017 10:26 AM
Last Updated : 11 Mar 2017 10:26 AM

கவிதைத் திண்ணை: துயரத்தின் பேரிரைச்சல்!

சில கவிதைகள் நம்மை ஆற்றுப்படுத்திச் செல்வதுண்டு. இன்னும் சில கவிதைகள் முள் குத்தியது போன்ற வலியைத் தருவதுண்டு. ஜெ. பிரான்சிஸ் கிருபாவின் கவிதைகள் இரண்டாவது ரகம். கிருபாவின் கனவுகள், நினைவுகள், கற்பனைகள் என எல்லாவற்றிலும் துயரத்தின் சுவடுகள் பதிந்திருக்கின்றன.

'ஒரு ஒற்றையடிப் பாதையைக்கூட‌

நேராய்க் கிழிக்க வக்கற்றவன்தான்

நானும்'

எனும் வரிகளில் இயலாமைப் போர்வைக்குள் சுயகழிவிரக்கம் இருப்பது உண்மை. இது ஒரு நிலை. இன்னொரு கவிதையில் கிருபா இப்படி எழுதுகிறார்:

'பஸ் நிறுத்தங்களில்

காத்திருக்கும் பார்வையில்

எந்தக் கணம் எவளை

எப்படி பேரழகியாக்கும்

என்பது நிச்சயங்களற்றது'

இதுவும் ஒரு நிலை. மேற்கண்ட இரண்டு நிலைகளும் நம்மில் பலருக்கும் பொருந்திப் போகும். அந்த உணர்வு இழைதான் கவிஞரின் கேவலையும் கொண்டாட்டத்தையும் நாமும் சுமக்கும்படி ஆக்குகிறது.

கிருபாவின் கனவுகள் கலைடாஸ்கோப்பில் காணும் மாயங்கள் போன்றவை.

'வெளி நதியில்

சிறகின் துடுப்பிசைத்து

எதிர் வரும் வண்டை

நான்

கண்டுகொண்டிருப்பது

எந்தப் பூவின் கனவோ'

என்கிறார் ஒரு கவிதையில்.

'இறப்பதுபோல் எல்லோரும் காண்கிறார்கள்

ஏறக்குறைய இரண்டு கனவுகளேனும்

பிறப்பதுபோல் வந்திருக்குமா

யாருக்கேனும் ஒன்று'

என்ற கவிதையில், நாம் இறக்கிறோம் அல்லது இறப்பதுபோல கனாக் காண்கிறோம். தவறியும், பிறப்பதாக நாம் கற்பனை கொள்வதில்லை. மீறிச் செய்தாலும் தோற்கவே செய்கிறோம். டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்டுள்ள 'ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதைகள்' எனும் தொகுப்பு இப்படித்தான் பல ஜாலங்களைக் கொண்டிருக்கிறது. கிருபாவின் இதுவரையிலான கவிதைகள் அனைத்தும் அடங்கிய‌ முழுத் தொகுப்பு இந்தப் புத்தகம்.

கிருபாவின் குறுங்கவிதைகள் சட்டென்று ஈர்த்துவிடுகின்றன என்றால், நெடுங்கவிதைகளில் ஓரிரு வரிகள் மட்டுமே கவிதையாகத் தெரிகின்றன. 'குழந்தைகள் உலகத்தில் கதவுகளே கிடையாது' என்றும், 'பறவைகளை யாருமே பறந்து பார்ப்பதில்லை' என்றும் எழுதிய கவிஞருக்கு,

'கணங்கள்தோறும்

என்னை நானே

தண்டித்துக்கொண்டிருக்கும்

போது

ஏன்

நீயேனும் கொஞ்சம்

என்னை மன்னிக்கக்கூடாது!'

என்று கேள்வியெழுப்பும் நிலை வந்திருக்கக் கூடாதுதான். அப்படிப் புலம்ப வைத்தது காதல்தான் என்றால், அவரின் வார்த்தைகளிலேயே அவருக்கு ஆறுதல் தரவும் செய்யலாம்.

'கடவுள் செய்த வெட்டி வேலைகளில்

ஒன்றுதானா

காதல் படைத்ததும்!'

- ந. வினோத் குமார்,
தொடர்புக்கு: vinothkumar.n@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x