Published : 08 Nov 2014 01:01 PM
Last Updated : 08 Nov 2014 01:01 PM

கதைகளாக வேண்டிய கட்டுரைகள்

‘யுகமாயினி’ இதழில் பேரா. க. பஞ்சாங்கம் எழுதிய பத்திக் கட்டுரைகளின் தொகுப்பு தான் இந்த நூல். உண்மையில், பஞ்சாங்கம் பொறுமையைக் கைக்கொள்ளாமல் ரொம்பவும் அவசரப்பட்டுவிட்டார் என்றே தோன்றுகிறது. ஏனெனில், மிகமிக நல்ல சிறுகதைகளாகவோ நாவல்களாகவோ வந்திருக்க வேண்டிய பல கதைகள் வெறுமனே கட்டுரைகளாகக் கலைந்துவிட்டன. ஆசிரியர் கட்டுரையாகச் சொல்லும்போதே ஒரு பரபரப்பும் எதிர்பாராத திருப்பங்களுமாய் இருக்கின்றன. சிறுகதை உலகம் பல அரிய முத்துக்களை இழந்துவிட்டது என்பதில் ஐயமில்லை.

கட்டுரைகளாக இவற்றை உணரும்பட்சத்தில் சமகாலத்தின் அரசியல் மற்றும் பண்பாட்டுச் சீரழிவுகள்குறித்த ஆசிரியரின் கோபம் நம்மையும் தொற்றிக்கொள்கிறது. பல நடப்புகளை நம் சங்க இலக்கியப் படைப்பு களோடு ஒப்பிட முடிகிறது. தாய்க்குத் திருமண ஏற்பாட்டைச் செய்யும் ஒரு மகன், ஆசைஆசையாகத் திட்டமிட்டுக் கட்டிய ஒரு வீட்டை விட்டுவிட்டு, தன் சொந்த மண்ணுக்குத் திரும்பும் மலையாளிகளின் மண்பற்று, சிங்கப்பூரின் பொருளாதாரத்தை முன்னேற்றியதாகக் கருதப்பட்ட லீ - குவான் - யூவின் மனிதாபிமானமற்ற அணுஆயுத ஆதரவு என வகைதொகையில்லாமல் அருமையான கட்டுரைகள், அவற்றின் மீதான கட்டுரையாளரின் பார்வைகள் என நேர்த்தியாக எழுதப்பட்டவை. இதனாலேயே மானுடத்தைப் பேசுகின்ற ஒரு தொகுப்பு இது.

- களந்தை பீர்முகம்மது



அழுததும் சிரித்ததும்
க.பஞ்சாங்கம்
அன்னம் வெளியீடு, மனை எண். 1, நிர்மலா நகர்,
தஞ்சாவூர் - 613 007, விலை : ரூ.140
தொலைபேசி: 954362- 279288

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x