

லண்டனில் வழங்கப்படும் மிகப் பிரபலமான புக்கர் விருது , இந்த ஆண்டு 28 வயதே ஆன நியூஸிலாந்தைச் சேர்ந்த எலியனர் காட்டன் என்ற பெண்ணுக்கு அவர் எழுதிய லூமினெரீஸ் என்ற 832 பக்கங்கள் கொண்ட புத்தகத்துக்குக் கிடைத்த விஷயம் சர்ச்சைக்கு உள்ளாகியிருப்பதில் ஆச்சரியமே இல்லை. இவ்வளவு சிறிய வயதில் எவருக்கும் இதுவரை இந்த விருது கிடைத்ததில்லை; மிகச் சிறிய புத்தகமான ‘டெஸ்டமெண்ட் ஆஃ மேரி’ [Colm Toibin எழுதியது] , அல்லது ஜிம் க்ரேஸ் எழுதிய ஹார்வெஸ்ட் அல்லது இந்திய வம்சாவளி அமெரிக்க [இப்போது இத்தாலியில் வசிப்பவர்] எழுத்தாளர் ஜும்பா லாஹிரியின் லோலாண்ட் என்ற புத்தகங்களுக்குக் கிடைக்கலாம் என்று கருதப்பட்டது.
எலியனர் காட்டனின் லூமினெரீஸுக்குப் பரிசு என்ற அறிவிப்பு வந்ததும் புத்தக உலகம் கிட்டத்தட்ட ஸ்தம்பித்துவிட்டது. மிதமான விற்பனையில் இருந்த புத்தகம் உடனடியாக அமேசான் இணையதள விற்பனையில் முதலிடம் பிடித்தது. இந்த மகாபெரிய நாவல் நியூசிலாந்தில் 19- நூற்றாண்டில் ‘தங்க வேட்டை‘ காலகட்டத்தைப் பின்னணியாக வைத்து ஜோதிடக் குறியீடுகளுடன் கட்டமைக்கபட்டு எழுதப்பட்ட துப்பறியும் நாவல். சஸ்பென்ஸ் நிறைந்த நாவல்.
எது நல்ல எழுத்து என்பதைப் பற்றின சர்ச்சை புக்கர் பரிசு கிடைக்கும்போதெல்லாம் துவங்குகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் புக்கர் ஜூரியில் இருந்தவர்கள் நல்ல எழுத்து சுவாரஸ்யமாகவும் இருக்க வேண்டும் என்றார்கள். மிக நீண்ட நாவலும் நல்ல இலக்கியமாக இருக்க முடியும். சஸ்பென்ஸ் உள்ள கதையும் நல்ல இலக்கியமாக உருவாக முடியும்.
நம்மூர் தீவிர ஆச்சார இலக்கியவாதிகள் அதை ‘வணிகக் கேளிக்கை எழுத்து’ என்று ஒதுக்கினாலும் ஒதுக்கலாம். ஒரு இலக்கிய அன்பர் என்னிடம் சொன்னார். நல்ல நாவல் என்பதில் சஸ்பென்ஸ் இருக்கக்கூடாது. எனக்கு வியப்பாக இருந்தது. நமது வாழ்வே சஸ்பென்ஸ் நிறைந்தது. நாளை என்ன நடக்கும் என்றுணராத அஞ்ஞானத்தில் [மிதப்புடன்] வாழ்பவன் மனிதன். தனக்கு மிகப்பெரிய வியப்பு அளிப்பது, மரணம் உறுதி என்று அறிந்தும் மனிதன் தான் சாசுவதம் என்று நினைப்பது என்று தருமனே சொன்னானே யட்சனிடம், அத்தகைய பேதமை தேவை. அப்போதுதான் வாழ்வின் சஸ்பென்ஸ்கள் நமக்கு வியப்பை அளிக்கும் .அனுபூதியும் பிறக்கும். நமது காவியங்கள் எதிர்பாராத திருப்பங்கள் கொண்டவை.
சஸ்பென்ஸ் வைத்து எழுதுவது இலக்கிய ரீதியில் குற்றமாகமுடியாது. அதை எப்படி எழுத்தாளர் கையாண்டார் என்பதில்தான் இருக்கிறது சுவாரஸ்யம். மன்னியுங்கள். சுவாரஸ்யம் தேவை, வாழ்விலும் எழுத்திலும். லூமினெரீஸ் பற்றி ஜூரிக்கள் ஒருமனதாகச் சொன்னார்கள். காட்டனின் எழுத்து ‘ஜொலிக்கிறது’ [luminous] என்றார்கள். ‘நெடும் கதை என்றாலும் இழுத்தடிக்காத கச்சிதமான கட்டமைப்புடன் அமைந்த நாவல்’ என்றார்கள். புத்தகத்தைக் கீழே வைக்க முடியாத அளவுக்கு வாசகரைக் கட்டிப்போடவைக்கும் த்ரில்லர்’ என்றார்கள்.
இத்தனை சின்ன வயசில் பரிசு கிடைத்தது எலியனரின் துர்பாக்கியம் என்கிறார் ஒரு எழுத்தாளர். தோல்வியை அனுபவிக்க வேண்டியது ஆன்மாவுக்கு நல்லது என்கிறார். சாமுவேல் பெக்கெட் என்ற புகழ் பெற்ற எழுத்தாளரின் எழுத்து அவரது ஐம்பது வயது வரை வெளிச்சத்துக்கு வரவில்லை. அவரது ‘Waiting for Godot‘ என்ற படைப்பு திடீரென்று அவரைப் புகழின் உச்சிக்கு அழைத்துச்சென்றது. அப்போது பெக்கெட் சொன்னாராம், ‘நான் புகழற்றவனாக இருந்ததே எனக்குச் சௌகரியமாக, இயல்பாக இருந்தது’ என்று. இத்தனை சின்ன வயசில் புகழடைந்துவிட்ட எலியனர் அந்தச் சுமையோடு இனிமேல் எப்படி மேற்கொண்டு எழுதப்போகிறார் என்று புலம்புகிறார் அந்த எழுத்தாளர்.
எலியனரின் பிரச்சினைகள் வேறு. தான் ஒரு பெண் எழுத்தாளராக இருப்பதே சுமை என்கிறார். நேற்று முளைத்தவள் இத்தனை பெரிய புத்தகத்தை எழுதுவதாவது என்று அவரது நாட்டு ஆண்கள் கேட்கிறார்களாம். ஆண் எழுத்தாளர்களை உங்கள் எண்ணங்கள் (what do you think?) என்ன என்று கேட்பவர்கள் பெண் எழுத்தாளர்களை உங்கள் உணர்வுகள் என்ன [ how do you feel?] என்கிறார்களாம். அறிவார்த்தமான பிரக்ருதி இல்லை நீ என்கிற மரபு ரீதியான ஆண் உலக மதிப்பீட்டை எதிர்கொண்டு எழுத்துலகில் பயணிப்பதே அதிகப் போராட்டம் என்கிறார்.
ஊருக்கு ஊர் இதே கதைதான் போலிருக்கிறது.