

தமிழ் எழுத்தாளர்களின் சிம்மசொப்பனம் என்றால் தமிழ் எழுத்தாளர்கள்தான். ஆனால், பேயோனைத் தமிழ் எழுத்தாளர் என்று சொல்வது பலருக்கும் கடினமாக இருக்கும்.
ஏனெனில், பெரும்பாழானோருக்கு ழகர உச்சரிப்பு வரவே வராது. சமீபத்தில் பேயோனின் கவிதைத் தொகுப்பொன்று தமிழின் நல்லூழாக வெளியாகியிருக்கிறது. அவரது மொழியில் சொன்னால் எண்ணிலடங்கா (தோராயமாக 60) சமீபத்திய கவிதைகள் அடங்கிய இந்தத் தொகுப்பை ‘மாப்பிள்ளைக்குக் காராபூந்தி பிடிக்கும்’ என்ற தலைப்பில் அவரே மிகுந்த சிரத்தை எடுத்துக்கொண்டு கண்ணுக்கு அடக்கமான வடிவத்தில் திருட்டு பி.டி.எஃப்-ஆக (ஆச்சரியக் குறி) வெளியிட்டிருக்கிறார். இந்த நூலை இலவசமாகப் பதிவிறக்கிக் கொள்ளலாம் என்பதுடன் இலவசமாகப் படிக்கவும் செய்யலாம் என்பது இதன் சிறப்பு.
உங்களுக்கும் காராபூந்தி பிடிக்குமென்றால் இந்த இணைப்பிலிருந்து தரவிறக்கிக்கொள்ளலாம்: (http://www.writerpayon.com/maappillai-payon.pdf). இந்த நூலில் இடம்பெற்ற உறவுகளின் மேல் யதார்த்தப் புதிர்களின் படலமாய்ப் படரும் உணர்வுகளைப் பற்றிய அவரது கவிதை ஒன்று இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது.
தாவர அன்பு
மதுரைக்குப் போவதாகச் சொல்கிறேன்
மதுரையிலென் மாமா வீட்டில் தங்கு என்கிறாய்
திருச்சிக்குப் போவதாகச் சொல்கிறேன்
திருச்சியில் பெரியப்பா வீட்டில் தங்கு என்கிறாய்
கோவைக்குப் போவதாகச் சொல்கிறேன்
கோவையில் கசின் வீட்டில் தங்கு என்கிறாய்
திருநெல்வேலி போவதாகச் சொன்னால்
சாந்தியக்கா புருஷன் உதவுவார் என்கிறாய்
அசௌகரியத்தின் நகத் துண்டால் நெருடுகிறாய்
யாரும் உதவாமல் நான் போக வழியுண்டா?
மாமாக்களே, பெரியப்பாக்களே
கசின்களே, சாந்தியக்கா புருஷன்களே
உங்கள் தூய்மையான தாவர அன்பிலிருந்து
தப்பிக்க வழி இல்லையா?