Last Updated : 11 Feb, 2017 10:15 AM

 

Published : 11 Feb 2017 10:15 AM
Last Updated : 11 Feb 2017 10:15 AM

மண்ணின் ஞானக் களஞ்சியம்!

‘ஒரே ஒரு ஊர்ல ஒரே ஒரு ராஜாவாம்’ என்று தொடங்கிப் பல கதைகளைச் சொல்லும் தாத்தாக்கள், பாட்டிகள் இருந்த காலம் இப்போது இல்லை. அவர்கள் சொன்ன கதைகளெல்லாம் இன்றைய அவசர யுகத்தில் ஞாபகக் குறிப்புகளாக்கிவிட்டன. இப்படியான சூழலில்தான் ‘நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம்’ எனும் இந்த நூல் முக்கியத்துவம் பெறுகிறது.

கி.ராஜநாராயணன் தொகுத் துள்ள இந்நூலில் பல வகைப்பட்ட நாட்டுப்புறக் கதைகள் தொகுக்கப்பட் டுள்ளன. இந்தக் கதைகள் எல்லாம் வயல்வெளிகளில், ஊர் மடங்களில், கம்மாய்க் கரைகளில், களத்துமேடு களில், மரத்தடிகளில், வீட்டுத் திண்ணைகளில் மண் மணம் கமழக் கமழச் சொல்லப்பட்டவை.

மனிதர்களை வைத்து மட்டுமல்ல, விலங்குகளை வைத்தும் விதவித மாகக் கதை சொல்லும் மரபும் நம் முன்னோர்களிடம் இருந்திருக்கிறது. நீதிக் கதைகள் என்கிற சட்டகத் தில் அடைக்கத் தகுந்த வகையில்தான் விலங்கு கள் மூலம் சொல்லப்பட்ட கதைகள் அதிகம் அங்கம் வகிக்கின்றன. கதைகளுக்குத் தான் எத்தனை நிறங்கள்? பாம்புகளைப் போல ஒவ்வொரு கதைகளும் ஒவ்வொரு விதமான சட்டைகளை உரிக்கின்றன. கதைகளில் படிந்துள்ள உண்மைகளின் ஆழத்தில் வாழ்க்கை தரிசனங்கள் நமக்குக் கிடைக்கின்றன.

இந்தக் களஞ்சியத்தில் இருந்து உதாரணத் துக்கு ஒரு கதை:

ஒரு காட்டுல இரண்டு குருவிங்க இருக்குது. அக்கா ஒண்ணு. தங்கச்சி ஒண்ணு. ஒருநாள் தங்கச்சி குருவி இரை தேடிட்டு வந்து கூட்டுக் கதவத் தட்டுது. காத்தடிக்குக் கதிர் பறக்குது. கன்னிமரம் கண்ணுல விழுது. அக்கா, அக்கா கொஞ்சம் கதவ திறன்னு சொல்லுச்சி.

அக்கா குருவி ‘கொஞ்சம் இரு. இப்பதான் குழந்தய குளிப்பாட்டுறேன்’னு சொல்லுது. தங்கச்சி குருவியோ திரும்பத் திரும்ப தான் சொன்னதையே சொல்லுச்சி. ‘தங்கச்சி கொஞ்சம் இரு. இப்பதான் குழந்தைக்கு அலங்காரம் பண்றேன்’னு சொல்லுச்சி. மீண்டும் விடாம தங்கச்சி குருவி ‘அக்கா கதவ திற அக்கா…’ன்னு கெஞ்சிச்சு. அதுக்கு அக்கா குருவி… ‘இப்போ பாலூட்டுறேன்…’, ‘தாலாட்டுறேன்’னு சொல்லிச் சொல்லி ரொம்ப நேரம் கழிச்சுதான் கூட்டுக் கதவ திறந்திச்சு.

உள்ளே வந்த தங்கச்சி குருவி ‘அக்கா… அக்கா இங்கெ பாரேன். வெல்லமும் பருப்பும் கொண்டு வந்திருக்கேன். இப்பவே பாயாசம் செஞ்சுக் கொடு…’ன்னு கேட்குது.

தங்கச்சி கொண்டு வந்த வெல்லத்தையும் பருப்பையும் வெச்சி, பாயாசம் செய்து வைக்குது அக்கா. ஆனா, பாயாசம் ஆறுகிற வரை தங்கச்சிக்கு பொறுமை இல்லை. சுடச்சுட இருக்கிற பாயாசத்துல வாயை வைக்க, நாக்கு சுட்டுச்சி.

‘ச்சீ ச்சீ… இந்தப் பாயாசம் நமக்கு வேணாம்…’னு சொல்லி ஒரு குளத்துல கொண்டு போய் அவ்வளவு பாயாசத்தையும் கொட்டிடுது இந்தக் குருவி.

கொஞ்ச நேரம் கழிச்சுக் கூட்டுல சிந்திக்கிடக்கிற பாயாசத்தை நக்கி நக்கிப் பார்க்குது தங்கச்சிக் குருவி. ரொம்பவும் இனிப்பா இருக் கிறத பார்த்துட்டு, ‘அய்யோ எல்லாத்தையும் குளத்துல கொட்டிட் டோமே…’ என்று நினைச்சிக்கிட்டுப் போய்க் குளத்துல இருந்த தண்ணிய பூரா குடிக்குது.

உப்பிய வயிறோட போய் ஒரு வீட்டு வாசல்ல போய் உட்காருது தங்கச்சிக் குருவி. பக்கத்துல இருந்த மாடு ஒண்ணு வாலைச் சுழற்றி ஒரு அடி குடுத்துதே பார்க்கணும். அவ்வளவு தான்… குருவி தான் உறிஞ்சிய எல்லாத்தையும் வெளியேத்தினிச்சு. அப்புறம் என்ன? வீடே குளத்துத் தண்ணியில் மிதந்தது. குருவி விட்டேன் சவாரின்னு நிம்மதியா பறந்து போகுது.

இது ஒரு உதாரணம்தான்.

‘ஒருவனுக்கு நூறு நாடோடிக் கதைகள் தெரிந்தால் போதும்; அவன் ஞானம் பெற்றவனாகிவிடுவான்’ என்று கி.ரா. சொல்வது உண்மைதான். கதைகள் மட்டுமே தெரிந்த கூடவே வாழும் கலையும் தெரிந்த, மனிதர்கள் வாழ்ந்த பூமி இது. அவர்கள் வாழ்க்கைக்கு சாட்சியாக இந்த கதைக் களஞ்சியம் திகழ்கிறது.

- மானா, தொடர்புக்கு: baskaran.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x