Published : 24 Sep 2016 11:48 AM
Last Updated : 24 Sep 2016 11:48 AM

தொடுகறி! - திருவுடையானுக்கு மரியாதை!

கலைஞர்களை எப்படிக் கொண்டாடுவது என்பதை மார்க்ஸிஸ்ட் கட்சி சார்ந்த த.மு.எ.க.ச-விடம் ஏனைய கட்சிசார் அமைப்புகள் கற்றுக்கொள்ள வேண்டும். சாலை விபத்தில் மரணமடைந்த மக்கள் பாடகர் திருவுடையான் படத்திறப்பு நிகழ்வை இந்த வாரம் சங்கரன்கோவிலில் நடத்தினார்கள். மார்க்ஸிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன், தமுஎகச தலைவர் ச. தமிழ்ச்செல்வன், பேச்சாளர் பாரதி கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், திருவுடையானின் மூன்று குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் கொண்டு, அவரது குடும்பநல நிதியின் முதல் தவணையாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

ஓவியர்கள் செல்வம், வின்சென்ட், பொன். வள்ளிநாயகம், செந்தில் ஆகியோர் இந்த நிகழ்வில் திருவுடையானின் சித்திரத்தை வரைந்தார்கள். ஒரு சாலை விபத்தில் கை எலும்பு நொறுங்கிப்போய், கையைச் சரியாக வளைக்க முடியாத நிலையில் இருக்கும் ஓவியர் செல்வம் கொஞ்சமும் தளராமல் வந்து திருவுடையான் உருவத்தை வரைந்திருந்தார். “நான் திருவுடையானுக்கு வேறு எப்படி அஞ்சலி செலுத்துவது!” என்று அவர் கேட்டபோது அங்கிருந்தவர்கள் எல்லோரும் கலங்கிப்போனார்கள். குறைந்தபட்சம் ரூ. 10 லட்சம் நிதி திரட்டவும் அடுத்த மாதம் அதைத் திருவுடையான் குடும்பத்தினரிடம் வழங்கவும் த.மு.எ.ச.க. முடிவெடுத்திருக்கிறது!

ஆவி சொன்ன நோபல் ரகசியம்

இருபது வருடங்களுக்கு மேலாக ‘நொய்யல்’ என்ற தலைப்பில் கொங்கு மக்கள் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாவலை எழுத்தாளர் தேவிபாரதி எழுதிவருவதாக இலக்கிய உலகில் ஒரு வதந்தி உண்டு. இதற்கிடையில் ‘நிழலின் தனிமை’, ‘நட்ராஜ் மகராஜ்’ நாவல்கள் உட்பட அவரது நான்கைந்து நூல்கள் வெளிவந்துவிட்டன. அப்படியென்றால் ‘நொய்யல்’ வெறும் வதந்திதானா? தேவிபாரதி சமீபத்தில் வாய் திறந்திருக்கிறார். இந்த ஆண்டு இறுதியில் ‘நொய்யல்’ வெளிவரும் என்று சொல்லியிருக்கும் அவர் இந்த நாவலுக்கு நோபல் பரிசு உறுதி என்றும் அவரே ஆவி ஜோசியம் பார்த்துச் சொல்கிறார்!

தமிழ் சினிமாவும் சிற்பங்களும்

லயோலா கல்லூரியின் காட்சியியல் தொடர்புத் துறை சார்பில், அருள்தந்தை ஜெயபதி பிரான்சிஸ் பெயரில் தீவிர இலக்கிய விவாதத்துக்கான அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கியிருக்கிறார்கள். முதல் நிகழ்ச்சியில் சி.மோகன் பேசினார். ‘தமிழ்த் திரைப்படங்களில் தமிழக சிற்ப ஓவிய மரபுகள்’ என்று தலைப்பு. “நூற்றாண்டைக் கண்ட தமிழ் சினிமாவில் பாரம்பரிய இசை மற்றும் நாட்டார், புராணிக மரபுகளின் தாக்கம் இருந்த அளவுக்கு ஓவிய, சிற்ப மரபுகள் கவனம் பெறவில்லை” என்றார். மாமல்லபுரம் ஒரு சிற்பநகரமாக 'குமுதம்', 'சர்வர் சுந்தரம்', ‘மே மாதம்’ போன்ற படங்களில் பதிவாகியிருப்பதை அவர் குறிப்பிட்டார். ‘பார்த்திபன் கனவு’, ‘ராஜராஜசோழன்’ படங்களில் சிற்பிகள் கதாபாத்திரங்களாகவே இடம்பெற்றதைச் சுட்டிக்காடிய அவர், நவீன ஓவியங்களும் நவீன ஓவியர்களும் தற்கால சினிமாவில் எப்படிக் கேலிப்பொருளாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் விமர்சித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x