

செர்பியாவைச் சேர்ந்தவரும் தற்போது அமெரிக்காவில் வாழ்ந்து வருபவருமான அலெக்ஸாண்டர் ஹெமனின் சமீபத்தைய புத்தகம், தி புக் ஆஃப் மை லைவ்ஸ் (The Book of My Lives / Aleksandar Hemon /Picador, 2013). நாவல் வடிவில் ஒரு வாழ்க்கை வரலாற்றைச் சொல்கிறது. வாழ்க்கை வரலாற்றின் கூடவே செர்பிய தேசச் சரிதமும் இடம் பெற்றுவிடுகிறது. போர்க்கால செர்பியா என்பதால் ஏறக்குறைய ஐரோப்பிய சரித்திரத்தின் ஒரு காலகட்டம் இடம் பெற்று விடுகிறது.
அலெக்ஸாண்டர் ஹெமன், யுகோஸ்லாவியா சிதறுண்டு போன காலத்தின் இளைய தலைமுறையினர். ஆதலால் தன் தலைமுறையினர் சோசலிஸ வீழ்ச்சியை எப்படி எதிர்கொண்டனர். யுத்தத்தில் எப்படி சிதறடிக்கப்பட்டனர், இப்படிச் சிதறுண்டு போனதால் தனி நபர் அடையாளங்களும் ஆளுமைகளும் எவ்விதம் மாறுதலுற்றன என்பதில் கவனம் செலுத்துகிறார்.
நம்பிக்கைகளையும் கனவுகளையும் அளித்து வந்த மார்மூல் டிட்டோவின் யூகோஸ்லாவியா, ஐந்து நாடுகளாகச் சிதறுண்டு போகிறது. லட்சக்கணக்கான மக்கள் பலியாகின்றனர். வாழ்வாதாரங்கள் அழிக்கப்படுகின்றன. நூலகத்திலிருந்து பாலங்கள் வரை எரியூட்டப்பட்டு தொடர்புறுத்துதலே சாத்திய மற்றும் போகின்றது.
இப்பின்புலத்தில், அலெக்ஸாண்டர் ஹெமனின் தாய், தந்தையரும், சகோதரியும் கனடாவுக்குப் புலம் பெயர, ஹெமன் சிகாகோவுக்கு வேலைதேடிப் போக நேர்கிறது.
குடும்பம், உறவுகள், நட்புகள் எல்லாவற்றையும் இழந்து, எந்தப் பாரம்பரியமும் எந்த வேர்களும் இல்லாத சிகாகோவுக்கு இடம்பெயர நேர்வதன் வலியை அழுத்தமாகப் பதிவு செய்கிறார் ஆசிரியர்.
“அகத்திற்கும் புறத்திற்கும் இடையிலான எல்லைகள் நடைமுறையில் இல்லாதிருந்தன. ஏதோ ஒரு விதத்தில் நீங்கள் மறைந்து போனால் உங்களது சகபிரஜைகள் தம் கூட்டு ஞாபகத்திலிருந்தும் அரட்டைகளில் பெற்ற விபரங்களிலிருந்தும் உங்களை மீண்டும் கட்டமைத்து விட முடியும். மனித வலைப்பின்னலினான உங்களது இடத்தை வைத்து, நீங்கள் யார் என்னும் உணர்வும் உங்களது ஆழமான அடையாளமும் தீர்மானிக்கப்படும் … ஆனால் சிகாகோவோ, மக்கள் ஒன்றிணைவதற்காக அல்லாமல், பாதுகாப்புடன் விலிகியிருப்பதற்காக தீர்மானிக்கப்பட்டது” என்பார்.
பாசிஸ முகங்கொண்டு யுத்தத்தை மூளச்செய்த அரசியல் தலைவர்களுள் ஒருவரான ரடோவன் கராட்ஸிக், ஒரு சாதாரண மனநல ஆலோசகராக, சிறிய கவிஞராக, ஊழல் பெருச்சாளியாக இருந்தவர். அதிகாரம் பெற்று செல்வாக்குச் செலுத்தும் காலங்களில், தன் அழித்தொழிப்பு நடவடிக்கைகளை விளக்கிடும் நாடகத்தில் நடித்து தன்னைப் பெரிய நாயகனாக விளம்பரப்படுத்தும் அளவுக்குச் சென்றுவிட்டவர். பெரிய இலக்கியப் பேராசிரியராக விளங்கிய கோல்ஷெவிக் இவருக்கு அடுத்த நிலையிலான தலைவராக இருந்து தன் கட்சியின் அக்கிரமங்களை நியாயப்படுத்தி வந்தார்.
போரின் உச்சகட்டத்தில் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டபோதுதான், பேராசிரியர் கோல்ஷெவிக் குற்ற நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியதுடன், தான் உயிர்த்திருப்பது நியாயமில்லை என்றுணர்ந்து தற்கொலை செய்து கொண்டார். ஆரம்பத்தில் பியானோவின் சுரக்கட்டைகளை மீட்டிய அவரது நீண்டவிரல் துப்பாக்கி விசையைத் தொட்ட மாத்திரத்தில் நடுக்கமுற்றிருக்கும் என்றெழுதுகிறார் ஹெமன்.
இந்த கராட்ஸிக்கிற்கும் கோல்ஷெவிக்கிற்கும் அடிப்படை ஆதாரமாக இருந்தவர் நாஜிப் போர்க்குற்றங்களின் பிதாமகர்களுள் ஒருவரான ஹெர்மன் கோயரிங்,“ ‘பண்பாடு’ என்னும் சொல்லைக் கேள்விப்படுகையில் என் கைத் துப்பாக்கியைத் தேடுகிறேன்” என்று வெறியுடன் முழங்கியவர்.
இப்படியான நச்சுக்காற்று மூச்சில் கலந்து விடுவதுதான் வரலாற்றில் பாரதூரமான பாதகங்களுக்கு வித்திடுகிறது. இதன் நுண்ணிய தலைகாட்டல் தன்னிடமும் ஏற்பட்டிருந்ததை ஹெமன் மறைமுகமாகச் சொல்லுகிறார் தன் நூலில். நான்கரை வயதான ஹெமனுக்கு ஒரு தங்கை பிறந்ததும் அதைச் சகித்துக் கொள்ள முடியாது, கைக்குழந்தையை கழுத்தைத் திருகி கொன்றுவிட முற்பட்டதை பதிவுசெய்திருக்கிறார்.
தன் குடும்பம், தன் தெரு, தன் சமூகம், தன் நகரம் என ஒட்டு மொத்த சரஷீவா நகரினையே தன்னுள் உள்ளடக்கி நேசிக்க முடிந்த ஹெமனுக்கு, தன் தங்கையையே உருத்தெரியாது ஆக்க வேண்டும் என்னும் வெறி ஏற்பட்டால், அகந்தையும் , ஆணவமும் வெறியும் கொண்டு அதிகாரத்தில் திளைக்க விரும்பும் அரசியல் தலைவன் “பண்பாடு” என்றதும் துப்பாக்கியின் விசையை முடுக்கிவிடத் தானே செய்வான். நூலகத்தைச் சாம்பலாக்கி விட்டுத் தானே மறுவேலை பார்ப்பான். குழந்தைகள், பெண்கள் என்ற பேதமின்றி உயிர்களைப் பலி வாங்குவான். அடையாளங்களை அழிப்பதுடன் நினைவுகளையும் அழிக்க முற்படுவான்.
குழந்தை வளரத் தொடங்குகையில் இரண்டிலிருந்து நான்கு வயதுக்கு உட்பட்ட காலகட்டத்தில் ஏற்படும் ஓர் அம்சத்தை நுட்பமாக ஹெமன் விவரிக்கிறார். அப்பருவத்தில் ஒரு சில குழந்தைகளிடம் அபரிமிதமான மொழி வளர்ச்சி ஏற்பட்டுவிட, அதனைத் தொடர்புபடுத்திப் பார்க்கும் விதத்தில் அக்குழந்தைகள் கற்பிதமான நபரை அல்லது கற்பிதமான சகோதரி, சகோதரனை உருவாக்கிக் கொள்ளும். புதிதாய் வெடித்துப் பெருகும் வார்த்தைகளுக்கு இக்கற்பனைப் பாத்திரங்களிடம் உறவாடும் பண்பு வந்து விடும்.
கற்பிதமான எடுத்துரைப்புகளை அக்குழந்தைகள் உருவாக்கிக் கொள்ளும். மேலும், “புதிதாய் பெற்றுக் கொள்ளும் வார்த்தைகள் அகத்திற்கும் புறத்திற்கும் இடையே ஒரு பேதத்தை ஏற்படுத்திக் கொள்கின்றன. குழந்தையின் அகம் இப்போது வெளிப்பாடு கொள்ளக் கூடியதாகி அவ்வகையில் தன்னை புறநிலைப்படுத்துவது சாத்தியமாகிறது. இதனால், உலகம் இரு மடங்காகிறது…”
வளமான வாழ்க்கையும் அபரிமிதமான நாட்டார் கதைகளும் வண்ண மயமான பண்பாடும் நிறைந்துள்ள செர்பியாவிலிருந்து ஏற்கனவே நமக்கு அறிமுகமாயிருக்கும் எழுத்தாளர் மிலோவார்ட் பாவிக். இப்போது அலெக்ஸாண்டர் ஹெமன்.
வாழ்க்கை வரலாறு, ஆய்வு, ஆவணப்படுத்தல் என்றால் வறண்டு உலர்ந்த வார்த்தைகள் குவித்து இறுக்கம் கொண்டுவிடும். அது வாசகனை விரட்டியடிக்கும். ஹெமனின் இப்பதிவு புனைவின் வசீகரம் சேர்ந்த விவரிப்பில் இருக்கிறது.