Published : 24 Jun 2017 09:12 AM
Last Updated : 24 Jun 2017 09:12 AM

நல்வரவு: கொடுமைகள் தாமே அழிவதில்லை

கொடுமைகள் தாமே அழிவதில்லை - செ. கணேசலிங்கன்
விலை: ரூ. 300, வெளியீடு: குமரன் புத்தக இல்லம், 3, மெய்கை விநாயகர் தெரு, குமரன் காலனி, வடபழனி, சென்னை-26.

தொண்ணூறு வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் செ. கணேசலிங்கன் தளராத உழைப்புக்குச் சொந்தக்காரர். ஈழத் தமிழ் எழுத்தாளரான அவரின் இந்தச் சிறுகதைத் தொகுப்பின் முதல் பதிப்பு 1974-ல் வெளியானது. 40 ஆண்டுகளுக்குப் பிறகு 2014-ல் இந்தத் தொகுப்பு மீளச்சு கண்டது. எழுபதுகளில் இலங்கையில் நிலவிய சமூக, பொருளாதாரச் சூழல்களைச் சித்தரிக்கும் 17 கதைகள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன. இந்தத் தொகுப்பின் பல கதைகள் சிங்கள மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத் தக்கது.

வந்தே மாதரம் ஆயிஷா இரா.நடராசன்
விலை: ரூ. 60, பாரதி புத்தகாலயம், சென்னை-18,  : 044-24332424

சிறுவர்களுக்கான படைப்புகளைத் தொடர்ந்து எளிய மொழியில் தரும் ஆயிஷா இரா. நடராசனின் எழுத்தில் வெளிவந்துள்ள அறிவியல் நெடுங்கதை இது. நம் தேசத்தை முன்பு ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள், சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நம்மையாளும் வெறியோடு வருகிறார்கள். அவ்வாறு உள்நுழையும் அந்நிய சக்திகளை, அறிவியல் ஆற்றலின் சக்தியோடு குழந்தைகள் ஒன்றுசேர்ந்து எதிர்க்கும் போராட்டமே இந்தக் கதை. குழந்தைகளின் அறிவியல் சிந்தனைக்கும் தேசபக்திக்கும் ஒரு ‘சலாம்’போட வைத்துள்ளார் நூலாசிரியர்.

அறிவியல் பயணம் 2016 - பேரா.கே. ராஜூ
விலை: ரூ.120, மதுரை திருமாறன் வெளியீட்டகம், சென்னை-600017,  : 7010984247

அறிவியல் பார்வையுடன் கூடிய ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டுமென்கிற ஆவலில் விளைந்த 50 அறிவியல் குறுங்கட்டுரைகளின் தொகுப்பு. மாறிவரும் மனித வாழ்க்கைக்கேற்ப அறிவியலின் அற்புதங்களை எவ்விதம் நாம் கைக்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றிய கட்டுரைகள் இவை. ‘செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்..?’, ‘சிம்பன்ஸிகளுக்கு சமைக்கத் தெரியுமா?’, ‘தண்ணீர் பிடிக்க ஏடிஎம் மிஷின்’, ‘சிறுநீரிலிருந்து மின்சாரம்’ என ஒவ்வொரு கட்டுரையும் நம்மை தலைப்பிலேயே கவனிக்க வைக்கின்றன.

பொன்னியின் செல்வன் ஓவியங்கள்! ஓவியர் சங்கர் லீ
விலை: ரூ. 450, வெளியீடு: மு.ஆ. சங்கரலிங்கம், சென்னை,  : 9841981618

‘பொன்னியின் செல்வன்’ நாவலே ஓர் எழுத்துச் சித்திரம்தான். வந்தியத்தேவன், குந்தவை பிராட்டியார், நந்தினி, பழுவேட்டரையர், ஆழ்வார்க்கடியான் நம்பி என அக்கதை மாந்தர்கள் அனைவருக்கும் வாசகர்களும் தங்கள் மனதில் உருவம் கொடுத்திருப்பார்கள். அதேபோல் ‘பொன்னியின் செல்வன்’ கதாமாந்தர்களை ஓவியங்களாகப் படைத்துள்ளார் ஓவியர் சங்கர் லீ. அந்த ஓவியங்களுக்கு வண்ணம் தீட்டினால், நந்தினியையும் வந்தியத்தேவனையும் அலங்காரமாக உருவாக்கினால் எப்படி இருக்கும். அந்த அனுபவத்தைப் பெற வேண்டுமானால் ஓவியர் சங்கர் லீ-யின் பொன்னியின் செல்வன் ஓவியங்கள் புத்தகத்தை வாங்கி வண்ணம் தீட்டி மகிழலாம்.

மன்னார்குடி இறைபணி வரலாறு தந்தை எம்.எல். சார்லஸ்
(விலை குறிப்பிடப்படவில்லை), வெளியீடு: புனித யோசேப்பு ஆலயம், மன்னார்குடி- 614001.  : 94434 09397

பல்வேறு மதங்களும் ஒன்றுக்கொன்று நட்புறவுடன் தழைத்து வளர்ந்திருக்கும் கலாச்சாரத்தைக் கொண்ட ஊர் மன்னார்குடி கொண்டிருப்பது பலருக்கும் தெரியாது. மன்னார்குடிக்கு கிறிஸ்தவம் வந்து 350 ஆண்டுகள் ஆகின்றன. அதே போல் மன்னார்குடி பாமணி ஆற்றங்கரையில் உள்ள புனித சூசையப்பர் ஆலயம் கட்டப்பட்டு 175 ஆண்டுகள் ஆகின்றன. இந்தச் சிறப்புகளை வரலாறாக, தனது சீரிய முயற்சியின் பலனாக, எல்லோர் முன்னும் வைத்திருக்கிறார் பங்குத் தந்தை எம்.எல். சார்லஸ்.

தொகுப்பு: முருகு, தம்பி, பாரதி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x