

தவறு. தற்கொலை செய்துகொண்டார் என்றுதான் குறிப்பிட வேண்டும். இடப் பிரச்சினையின் காரணமாகவோ அறியாமையின் காரணமாகவோ 'கொள்' என்ற துணை வினையைப் பலர் இப்போது விட்டுவிட்டு எழுதுகிறார்கள். கொலையைத்தான் 'செய்'யலாம்; தற்கொலையைச் 'செய்ய' முடியாது.
நாம் சாதாரணமாகப் பேசும்போது இயல்பாகவும் சரியாகவும் சொல்வோம். 'அவன் தற்கொல செஞ்சுகிட்டான் (அவன் தற்கொலை செய்துகொண்டான்)' என்று. ஆனால், எழுத வரும்போதுதான் நமக்குப் பிரச்சினையாகிவிடுகிறது. மேற்கண்ட ‘கொள்’என்ற துணை வினை, ஒரு செயல் பிறராலோ பிறர் உதவியுடனோ செய்யப்படவில்லை என்பதையும் ஒருவர் செய்த செயலின் விளைவு, பயன் போன்றவை அவருக்கே கிடைக்கிறது என்பதையும் உணர்த்தப் பயன்படுத்தப்படுகிறது. ஆகவே, ‘தற்கொலை செய்துகொள், திருமணம் செய்துகொள்’போன்ற சொற்கள் ‘கொள்’என்ற துணை வினை இல்லாமல் நிற்காது.
‘கொள்’என்ற துணை வினையை இயல்பாகவே கொண்டிராத பல வினைச் சொற்களுடன் ‘கொள்’சேர்க்கும்போது அந்த வினைச் சொல் குறிக்கும் செயலின் விளைவு, பயன் போன்றவை அந்தச் செயலைச் செய்தவருக்கே கிடைக்கிறது என்ற பொருளும் அந்தச் செயல் பிறருடைய உதவியின்றிச் செய்யப்பட்டது என்ற பொருளும் அந்த வினைச் சொல்லுக்கு வந்துவிடுகிறது.
(எ.டு.) சாப்பாட்டை அவனே எடுத்துக்கொண்டான்/ அவள் தனக்குத் தானே பேசிக்கொண்டாள்.