

இன்று காலையில்தான் தமிழ் எழுத்தாளர் அசோகமித்திரன் இறந்த செய்தியை அறிந்தேன். எழுத்தாளர்களுள் அவர் மாபெரும் ஆளுமை. அவரது எழுத்துகளை மலையாள, ஆங்கில மொழிபெயர்ப்பின் மூலம் வாசித்திருக்கிறேன். சென்று வாருங்கள்!
என்.எஸ்.மாதவன், கேரள சாகித்திய அகாடமி விருதுபெற்ற மலையாள எழுத்தாளர்
அசோகமித்திரன் மறைவு குறித்து வருந்துகிறேன். அவரது ‘The Eighteenth Parallel’ (18வது அட்சக்கோடு), ‘My Years With Boss’ ஆகிய புத்தகங்களை நான் மிகவும் ரசித்துப் படித்தேன்.
ராமச்சந்திர குஹா, வரலாற்றாசிரியர், ஆங்கில எழுத்தாளர்
ஒவ்வொரு சிறிய விஷயமும் வாழ்க்கையின் பெருந்திட்டத்தின் பகுதிதான் என்ற விருப்பமான ஒரு நம்பிக்கையை நோக்கி வாசகரை இட்டுச்செல்கிறார் அசோகமித்திரன். கடைசியாக, அதுவரையிலானது எதுவும் போதாது என்பதுபோல், ஒரு கூடுதல் விவரத்தைச் செருகுவார். அவ்வளவுதான்; படார்! கண்ணைப் பறிக்கும் வெளிச்சத்துடன் இந்த உலகம் வெடித்துச் சிதறுகிறது. யாராக இருந்தீர்களோ அவராக இறுதியில் நீங்கள் எஞ்சுவ தில்லை.
பால் சக்கரியா, சாகித்ய அகாடமி விருது பெற்ற மலையாள/ஆங்கில எழுத்தாளர்
யதார்த்தத்தில் வேர்கொண்ட சொற்களையும் பூரணமான பார்வையையும் நாடுவதென்றால் என்னவென்று உணர்ந்த எழுத்தாளர் அசோகமித்திரன். அற்புதமான தமிழை எழுதியவர் அவர். அது மட்டுமல்லாமல் ஒரு தலைமுறையின் குரலாகவும் இருந்தார்.
டேவிட் ஷுல்மன், இஸ்ரேலைச் சேர்ந்த இந்தியவியல் அறிஞர்
அசோகமித்திரன் ஒரு எழுத்தாளரா என்று சந்தேகம் வரக்கூடிய அளவுக்கு மிக எளிமையாக எழுதக்கூடியவர். ஆனால் மிக நுட்பமான எழுத்தாளர். தன் கதாபாத்திரங்கள் மீது அவருக்கு இருந்த அலாதியான அன்பை, அவரது கதைகளைப் படித்தால்தான் உணர முடியும். தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் எழுதினாலும் அவர் தமிழ் எழுத்தாளராகவே இருக்க விரும்பினார்.
ஆ.இரா.வேங்கடாசலபதி, வரலாற்றாசிரியர், தமிழ் / ஆங்கில எழுத்தாளர்
மயிலாப்பூரில் ஃபிலிம் நியூஸ் ஆனந்தனைச் சந்திக்கச் சென்றேன். அவரிடம், தமிழ் சினிமா குறித்து அசோகமித்திரன் கூறிய கருத்து, பழைய தமிழ்ப் படங்கள் மீது எனக்கு இருந்த ஆர்வத்தை அசைத்துவிட்டதோ என்று கூறினேன். பெருமூச்சு விட்டபடி ஆனந்தன் கூறினார், “அந்தக் காலத்தில் ஜெமினி ஸ்டுடியோவின் பின்பக்கம் ஒரு அறை இருக்கும். அங்கே உட்கார்ந்து நாள் முழுக்க என்ன வேண்டுமோ அதைச் செய்துகொள்ளும்படி அசோகமித்திரனை விட்டுவிடுவார்கள். அந்தப் பையன் மிகவும் திறமைசாலி என்று எஸ்.எஸ். வாசனுக்குத் தெரியும். ஆகவே, அவனை சந்தோஷமாக வைத்திருக்கத் தன்னால் இயன்றதை அவர் செய்தார்” என்று சொல்லிவிட்டுச் சிறிது இடைவெளிக்குப் பிறகு சொன்னார் ஆனந்தன், “ஆனால், அசோகமித்திரனைச் சந்தோஷமாக வைத்திருப்பதொன்றும் அவ்வளவு எளிது இல்லை.”
அரவிந்த் அடிகா, புக்கர் விருதுபெற்ற ஆங்கில எழுத்தாளர்