Last Updated : 01 Apr, 2017 10:45 AM

 

Published : 01 Apr 2017 10:45 AM
Last Updated : 01 Apr 2017 10:45 AM

என் சூழல், என் குடும்பம்!- கோவை ஞானி

கோவை மாவட்ட கிராமம் ஒன்றில் பதினைந்து வயது வரையிலான என் இளமைக் காலம் கழிந்தது. என் இயற்பெயர் கி. பழனிச்சாமி. 10-ம் வகுப்பு வரை கிராமத்துப் பள்ளிகளில் கற்றேன். பின்னர் கோவை நகரத்திலும் அதன் பின்னர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும் தமிழ் இலக்கியம் பயின்றேன். 50-களிலும் 60-களிலும் தமிழுணர்வு காற்றில் கலந்திருந்தது. திராவிட இயக்கமும் தமிழரசுக் கழகமும் தமிழுணர்வைத் தந்தன. எனக்கு வாய்த்த பேராசிரியர்களும் என்றும் என் வணக்கத்துக்குரியவர்கள். தமிழுணர்வுக்கு நானும் வயப்பட்டிருந்தேன்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றபோது எனக்கு நேர்ந்த ஓர் அனுபவம் பற்றிச் சொல்ல வேண்டும். இளமை முதலே எனக்குச் சமயப் பற்று இருந்தது. விவேகானந்தரை ஆழ்ந்து கற்றேன். கடவுள் உண்டா, இல்லையா என்ற கேள்வி என்னை வாட்டியது. கடவுளைக் காண முடியும் என்று சமயவாதிகள் கூறுகின்றனர். நான் ஏன் கடவுளைக் காண முடியாது என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். தியானப் பயிற்சியில் ஈடுபட்டேன். மூன்று மாத அளவில் வித்தியாசமான பல அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டன. தியானத்தின் முடிவில் நானே பிரம்மம் என்று உணர்ந்தேன். என்னைச் சூழ உள்ள அனைத்தும் பிரம்மத்தின் வடிவங்கள்.

சிதம்பரம் கோயிலுக்கு அடிக்கடி சென்று வந்தேன். ஒரு நாள் நடராசரை வழிபட்டுக்கொண்டிருக்கும்போது எனக்குள் ஒரு கேள்வி கோயிலுக்குள் இருப்பவரும் கடவுள், நானும் கடவுள். எப்படி என்னை நானே வழிபட முடியும்? அன்று முதற்கொண்டு மேலும் எனக்குள் பல அனுபவங்கள். விடுதியில் அன்று இரவு சாப்பிடும்போது என்னை நானே சாப்பிடுவதைப் போல உணர்ந்தேன். சாப்பிட முடியவில்லை. விடுதிக்கு முன்னால் நாய்கள் விளையாடிக்கொண்டிருந்தன. அவற்றைப் பார்த்தபோது நானும் அவற்றோடு விளையாடுவதாக உணர்ந்தேன். மாடியில் எனது அறை இருந்தது. படிக்கட்டில் கீழே இறங்கும்போது ஓர் எண்ணம். மேல் கீழ் என்பது உண்மையில்லை. படிக்கட்டில் காலை எங்கும் வைத்திடலாம். ஆனால், நான் வைக்கவில்லை. உடம்புக்குள் ஓர் உணர்வு என்னைப் பின்னுக்கு இழுத்தது. இப்படியாக எத்தனையோ அனுபவங்கள். உடல் நலம் பெரிதும் கெட்டது. படிப்பில் ஈடுபாடில்லை. என் சொந்த ஊருக்குத் திரும்பினேன். என் தந்தையாருக்குப் பெரிதும் வருத்தம். மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். ‘எக்ஸ்-ரே’ எடுத்துப் பார்த்தோம். எனக்குக் காசநோய் கண்டிருந்தது. பெருந்துறை மருத்துவமனையில் எட்டு மாதம் மருத்துவம். வீட்டுக்குத் திரும்பினேன். ஓராண்டு ஓய்வு எடுத்த பின் மீண்டும் கல்லூரிக்குத் திரும்பினேன். படிப்பைத் தொடர்ந்து முடித்தேன்.

மருத்துவமனையில் படுக்கையில் இருந்தபோது ஓயாமல் சிந்தித்தேன். என் அனுபவத்துக்கு என்ன பொருள் என்று சிந்தித்தேன். என் அனுபவங்கள் எல்லாம் எந்த அளவுக்கு உண்மையானவை? நான் ஏற்கெனவே மார்க்சியம் படித்திருந்தேன். வில்லியம் ஜேம்ஸ் எழுதிய ‘வெரைட்டிஸ் ஆஃப் ரிலிஜியஸ் எக்ஸ்பீரியன்ஸ்’ (Varieties of Relegious Experience) நூலைப் படித்திருக்கிறேன். இளமை முதற்கொண்டு மனத்தில் எவற்றையெல்லாம் உள்வாங்கிக் கொண்டிருந்தோமோ அவற்றை தியானத்தின்போது அனுபவிக்க முடியும். நானே கடவுள் என்பது இத்தகைய ஓர் அனுபவம். எனக்குள் நானும் மற்றவர்களும் திணித்த ஒன்றின் வெளிப்பாடு. கடவுள் உண்மையில்லை. அது ஒரு கருத்துருவம். விவேகானந்தர் போன்றவர்கள் இவ்வகை அனுபவம் பெற்றவர்கள்.

தியானத்தின்போது பிரம்மத்தை உணரலாம். அங்கேயே இருந்துவிட முடியாது. கீழிறங்கித் தரைக்கு வந்தாக வேண்டும். சமூகத்தில் கலந்தாக வேண்டும். சமூகத்தை உயர்த்த வேண்டும். இத்தகைய அனுபவத்தோடு மேலும் மார்க்சியம் படித்தேன். எனக்கு வாய்த்த நண்பர்கள் அற்புதமானவர்கள். அவர்களோடு இணைந்து மார்க்சியத்தை ஆழமாகக் கற்றேன். பல ஆண்டுகள் இப்படிக் கழிந்தன. எனக்குள் மார்க்சியமும் தமிழிலக்கியமும் ஒரு புள்ளியில் இணைந்தன. நான் கற்ற மார்க்சியத்தால் எனக்குள் தமிழிலக்கியம் வளம் பெற்றது. என் தமிழ்க் கல்வியில் மார்க்சியம் எனக்குள் செறிவு பெற்றது.

படித்து முடித்த பிறகு கோவையில் ஒரு பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தேன். பள்ளியில் என்னோடு வேலைபார்த்த ஆசிரியை ஒருவரைக் காதலித்தேன்; அவரும் என்னைக் காதலிக்க, திருமணம் செய்துகொண்டோம். பெண் வீட்டாருக்கு உடன்பாடில்லை. நீதிமன்றம் ஏறி இறங்கினோம். என் மனைவியின் பெயர் இந்திரா. எனக்கென ஒரு குடும்பம் ஏற்பட்டது. குடும்பத்தில் என் ஈடுபாடு என்பது பெரிதாக இல்லை. நல்லவேளையாக என் மனைவி குடும்பப் பொறுப்புகள் அனைத்தையும் ஏற்றுச் செயல்பட்டார். என் படிப்புக்குக் குடும்பம் தடையாக இல்லை. மார்க்சியம், நண்பர்கள், இலக்கியக் கூட்டங்கள், எழுத்துப் பணி என்று என் நேரம் கழிந்தது. என் மனைவியின் ஆளுமைத் திறம் அற்புத மானது. எங்களுக்கு வாய்த்த மக்கள் இருவர். இருவரும் கலையுணர்வு மிக்கவர்கள்.

நிழற்படக் கலையை இவர்கள் தமக்குத் தொழிலாக ஏற்றுக்கொண்டனர். மூத்தவர் பெயர் பாரிவள்ளல், இளையவர் பெயர் மாதவன். என் மக்கள் இவர்கள் என்று சொல்லும்படியாக சில நல்ல குணங்கள் வாய்த்திருந்தன. நானும் கலையுணர்வு மிகுந்தவன். இவர்களும் என்னைப் போல கலையுணர்வு வாய்த்தவர்கள். இவர்கள் யாரையும் ஏமாற்ற மாட்டார்கள். இயன்ற அளவு பிறருக்கு உதவி செய்வார்கள். இவர்களுக்கு சொத்து எதுவும் நான் சேர்த்து வைக்கவில்லை. என்னிடமிருந்து அவர்கள் பெற்ற சொத்து என்பது நற்குணங்கள்தான். இருவரும் அத்தை மகள்களையே திருமணம் செய்துகொண்டார்கள். இருவருக் கும் ஒவ்வொரு ஆண் குழந்தைகள். நான்காண்டுகளுக்கு முன்பு என் மனைவி காலமானார். என் மக்கள்தான் தற்போது என்னைத் தாங்குகின்றனர்.

(தொடரும்)

- கோவை ஞானி, மூத்த எழுத்தாளர், மார்க்ஸிய அறிஞர், தொடர்புக்கு: kovaignani@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x