Last Updated : 01 Jan, 2016 10:17 AM

 

Published : 01 Jan 2016 10:17 AM
Last Updated : 01 Jan 2016 10:17 AM

மவுனத்தின் புன்னகை - 1: இறக்காமலே இறத்தல்!

எந்த ஒரு எழுத்தாளரையும் ‘பேசு’ என்றால் அவர் அவரைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பார். இரண்டு எழுத்தாளர்களைப் பேசச் சொன்னால் அவர்கள் பதிப்பாளர்களைப் பற்றிப் பேசுவார்கள் என்று சொல்வார்கள்.

நான் சில ஆண்டுகள் ‘ஆதர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா’ என்ற அமைப்பில் அங்கத்தினனாக இருந்தேன். அதில் சேர்வதற்கு நீங்கள் ஒரு நூலுக்காவது ஆசிரியராக இருக்க வேண்டும். ஆண் டுக்கு ஒருமுறை டெல்லியில் இதன் வருடாந்திர மாநாடு நடக்கும். அதற்கு ரயில் கட்டணம் கிடைக்கும். மற்றபடி அமைப்பு பெருவாரியாக இந்தி, பஞ்சாபி, ஆங்கில எழுத்தாளர்களின் சங்கம். தலைவர் ஒரே ஒரு நூல் எழுதியிருப்பார். வருடா வருடம் அதைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பார். அதே போல, துணைத் தலைவர், செயலாளர். இந்த மூன்று பேருக்கும் அன்றைய இந்திய அரசிடம் செல்வாக்கு உண்டு. ஏதோ சிறிது பணத்தை மானியமாகப் பெற்று இந்த ஆண்டு விழாக்கூட்டம் நடத்திவிடுவார் கள். ‘எமர்ஜென்சி’ ஆண்டில் கூட இந்த விழா நடந்தது. மற்ற ஆண்டுகளில் இந்த அமைப்பைப் பெரிதாக மதித்து ஒரு குட்டி மந்திரி கூட வந்தது இல்லை. ஆனால் ‘எமர்ஜென்சி’ ஆண்டில் ஒரு பிற்பகல் பிரதமர் வருகிறேன் என்று அவராகச் சொல்லிவிட்டார்.

அவ்வளவுதான். ஒரே பரபரப்பு. இதில் விசேஷம் என்னவென்றால் அக்கணம் வரை எல்லா எழுத்தாளர்களும் அரசைத் திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தார்கள். ஒரு தொகுதி கூடக் கிடைக்காது, தாயும் மகனும் படுதோல்வி அடையப்போகிறார் கள் என்றெல்லாம் பேசிகொண்டிருந்த மனநிலையில் பிரதமரை நேருக்கு நேர் எப்படிப் பார்க்க முடியும்? ஆனால் பிரதமர் வந்தால் யாராவது முக்கிய அங்கத்தினர்கள் அவரை வரவேற்க வேண்டும், வரவேற்புரை ஆற்ற வேண் டும், அந்த அமைப்பு என்ன பணிகளில் ஈடுபட்டிருக்கிறது என்று எடுத்துக் கூற வேண்டும். ஆனால் படைப்பிலக்கியம் வரை இந்திரகாந்தி அவர்களுக்கு நல்ல தெளிவு இருந்தது. அப்போது கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு சாராரைக் ‘குட்டி’ காங்கிரஸ் என்று கூடச் சொல்வார்கள். ஆனால் அவர்கள் வற்புறுத்தல் இருந்தும் கூட ‘டாக்டர் ஜிவாகோ’ நூலோ, படமோ தடைசெய்யப்படவில்லை. அதன் பிறகு ஆபாச எழுத்தாளர்களை அரசு கண்டிக்க வேண்டும் என்று ஓர் எழுத்தாளர் அமைப்பு கோரிக்கை விட்டபோது, “இந்த மாதிரி விஷயங்களில் தீர்வு காண அரசாங்கத்துக்கு நுட்ப உணர்வு போதாது, ஆதலால் இதுபோன்ற விஷயங்களை உங்களுக்குள் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டார்.

இந்தச் சூழ்நிலையில் என் நண்பர் ஒருவர் காரில் வந்திருக்கிறார். அந்தக் கட்டிடத்தின் போர்டிகோவில் ஒரு வண்டி இல்லை. காலியாக இருந்தது. அவர் நிலைமையைப் புரிந்துகொண்டிருக்க வேண்டும். இல்லை. அவர் உள்ளே போனார். உடனே நான்கு ஆறடி உயரமுள்ள போலீஸ்காரர்கள் அந்த வண்டியை அப்படியே தூக்கி எங்கோ ஒரு மூலையில் போட்டுவிட்டார்கள். காரணம், பாதுகாப்பு.

சரியான நேரத்தில் இந்திராகாந்தி வந்தார். வரவேற்புரை, அமைப்பு வரு டாந்திர அறிக்கை போன்றவற்றுக்குக் காத்திருக்கவில்லை. அரை மணி உரை. எழுத்தாளர், பதிப்பாளர், வானொலிக் காரர்கள் எல்லோருக்கும் பொருந்தும் படியாக மிகச் சிறப்பான உரை. நன்றியுரை வரை காத்திராதபடி ஒரு மவுனப் புன்னகையுடன் விடை சொல்லிவிட்டுக் கிளம்பிப் போய்விட்டார். அந்த உரைக்குப் பிறகு கூட்டமே சுரத்து இல்லாமல் போய்விட்டது. இந்திரா காந்தி தேர்தலில் தோற்றுவிட்டார், ஆனால் எழுத்தாளர்களை வாய் பேச முடியாதபடி வென்றுவிட்டார்.

இதற்கிடையில் என் நண்பர் வெளியே வந்து பார்க்கிறார், போர்டிகோ காலியாக இருக்கிறது; இங்கே வண்டி இருந்ததே, எங்கே என்று யார் யாரையோ விசாரிக் கிறார். அங்கிருந்த போலீஸ்காரர் களையே கேட்கிறார். யாருக்கும் தெரிய வில்லை. காரணம், அதைத் தூக்கி எங்கோ மூலையில் போட்டவர்கள், பிரதமரின் தனிப்படைக்காரர்கள். அவர் கள் பிரதமரோடு போய்விட்டார்கள். நாம் வைத்த இடத்தில் பொருள் இல்லை என்றால் அது எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். இல்லாமலும் போய் விடலாம். அது மிகப் பெரிய, மிக விசாலமான இடம். அதை வெளிச்சுவர் அருகே இருந்த உயரமான பூச்செடிகள் மத்தியில் இன்னொரு பூச்செடியாக வைத்திருந்தார்கள். இப்போது வண்டியை ஓட்டி வந்தால், பூச்செடிகள் போய்விடும். இல்லாது போனால் பிரதமர் மெய்க்காப்பாளர் போல நான்கு பயில்வான்கள் வேண்டும். நண்பர் பூச்செடி மீது ஓட்டினார். எங்கிருந்தோ பத்து பேர் கூடிக் கத்தினார்கள். அன்று நிலைமையைச் சமாளிப்பது பெரும்பாடாகிவிட்டது.

ஆதர்ஸ் கில்ட் சென்னைப் பிரிவு என்று சில நாட்கள் கல்கியில் உதவி ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்ற எஸ்.வீ.எஸ். தி.நகர் தக்கர் பாபா நிலையத்தில் நடத்தினார். தக்கர் பாபாவில் கொசுக்கள் அதிகம். உங்கள் இலக்கிய ஆர்வத்துக்கு அவை சவால் விடுவது போலிருக்கும்.

என்னை ஒரு பம்பாய்ப் பத்திரிகை கதைகளுடன் சிறப்புக் கட்டுரைகளும் கேட்டது. அனுப்பினேன். என் செலவுப் பணம் கூட அனுப்பவில்லை. இது ஆதர்ஸ் கில்ட் விஷயம். நான் புகார் செய்தேன். மூன்று முறை புகாருக்குப் பின் ஆதர்ஸ் கில்டில் இருந்து பதில் வந்தது. “இது எங்கள் விஷயம் இல்லை. எடிட்டர்ஸ் கில்டிடம் புகார் செய்யுங்கள்’’ என்று சொன்னார்கள். அதே போல ஓர் ஐரோப்பிய வல்லரசு அவர்கள் மொழியில் வெளியிட்ட சிறு கதைத் தொகுதியில் என்னுடைய மூன்று கதைகளைச் சேர்த்திருந்தது. சிலருக்குப் பணம் அனுப்பியது. எனக்கில்லை. நான் கேட்டு எழுதினேன். பதில் இல்லை. ஒரு சந்தர்ப்பத்தில் பீஷ்ம் சஹானியைச் சந்திக்க நேர்ந்தது. அவரிடம் விசாரித்தேன். பதினைந்து நாட்கள் கால அவகாசம் தேவை என்றார். அவர் ஓர் உத்தமமான மனிதர். அவர் பத்தே நாட்களில் கடிதம் எழுதினார்.

“உன் கதைகள் 1971-க்கு முன்பு எழுதப்பட்டவை. அந்த நாடு அப்போது காப்புரிமைச் சட்டத்தில் இல்லை. யஷ்பால் போன்ற எழுத்தாளர்களுக்கே இதைத்தான் கூறினார்கள்” என்று எழுதியிருந்தார்.

தமிழ்நாட்டில் எழுத்தாளர்களைத் ‘தேசியமாக்குதல்’ என்று ஓர் ஏற்பாடு இருந்தது. அந்த ஏற்பாட்டின் கீழ் அரசு சில தேர்ந்தெடுத்த எழுத்தாளர்களுடைய சந்ததியாருக்கு ஒரு குறிப்பிட்ட தொகை கொடுத்துவிடும். அதன் பிறகு அவர் படைப்புகளை யார் வேண்டுமானாலும் வெளியிடலாம். ஆங்கிலத்தில் ‘ப்ப்ளிக் டொமைன்’ என்கிறார்கள். நான் இறக்காமலே, தேசியமாக்கப்படாமலே ‘ப்ப்ளிக் டொமைன்’ ஆகிவிட்டேன்!

- புன்னகை படரும்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x