

ஒரு புத்தகம் வாசகர் கைக்குக் கிடைப்பதற்கு எவ்வளவோ பேரின் உழைப்பும் அடங்கியிருக்கிறது. அதில் கட்டுமானப் பணியும் ஒன்று. அப்பணியை 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் செய்துவரும் ‘மோகனா பைண்டிங் ஒர்க்’ஸின் உரிமையாளர் ம.சிங்காரவேலுவுடன் ஒரு மின்னல் வேகப் பேட்டி:
இதுவரை எவ்வளவு புத்தகங்கள் பைண்டிங் செய்துகொடுத்திருக் கிறீர்கள்?
ரொம்பக் குறைத்துச் சொன்னால்கூட, ஒரு மாதத்துக்கு 50 தலைப்புகளில் புத்தகங்கள். ஒவ்வொரு தலைப்பிலும் 1,000 முதல் 2,000 பிரதிகள். அப்படியானால், 15 ஆண்டுகளுக்கு எத்தனை புத்தகங்கள் என்று நீங்களே கணக்குப் போட்டுக்கொள்ளுங்கள்.
பைண்டிங் பணியில் என்னென்ன வேலைகள் அடங்கியிருக்கின்றன?
புத்தகங்கள் 16 பக்கங்கள் கொண்ட பெரிய ஃபார்மாக அச்சிடப்பட்டு வரும். அதனை வெட்டி, மடித்து கம்போஸ் செய்வோம். இப்படி 10 ஃபார்ம்களை ஒன்றுசேர்த்தால் 160 பக்கம் கொண்ட புத்தகமாக மாறும். அதற்கு நூல் கட்டுமானம் போட்டு, ஒட்டி, வெட்டினால் அட்டையில்லாத புத்தகம். அட்டையை ஒட்டி, மறுபடியும் வெட்டினால் முழுமையான புத்தகம். அவற்றைக் குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள கட்டுக்களாகக் கட்டிக் கொண்டுபோய்ச் சேர்ப்பது வரை எங்கள் வேலை இருக்கிறது.
நீங்கள் இந்தத் துறைக்கு வந்த காலத்துக்கும் தற்காலத்துக்கும் இடையிலான மாற்றங்கள்?
1993-ல் இந்தத் தொழிலுக்கு வந்தேன். அப்போது மடிப்பதற்கு, பெர்பெக்ட் பைண்டிங்குக்கு எல்லாம் மெஷினே கிடையாது. கையால்தான் வேலை செய்வோம். எனவே, கை விரல்கள் வெட்டுப்படுவது மாதிரியான விபத்துக்களெல்லாம் நடந்தன. அப்போது ஒரு கட்டிங் மெஷினும், பின்னிங் மெஷினும் இருந்தால் போதும். வெறும் 50 ஆயிரம் ரூபாயில் தொழில் தொடங்கிட முடியும். இப்போது சர்வதேசத் தரத்தில் இயந்திரங்கள் வந்துவிட்டன. குறைந்து 50 லட்சம் முதலீடு இருந்தால்தான் ஒரு யூனிட் போட முடியும். 5 முதல் 10 வருடங்களுக்கு ஒருமுறை நவீன மாற்றங்களுக்கு உள்ளாக வேண்டியிருப்பதால், மறுபடி மறுபடி முதலீடு செய்ய வேண்டியிருக்கிறது.
பைண்டிங் என்ற பணியைத் தாண்டி, ஒரு புத்தகத்துக்கும் உங்களுக்கும் இடையில் எப்படி உறவு இருக்கிறது?
புத்தக வெளியீட்டை வைத்துக் கொண்டு, அரை மணி நேரத்துக்கு முன்பு கொண்டுவந்து கொடுத்துவிட்டு அவசரப்படுத்துவார்கள். பக்கத் தொடர்ச்சி உள்ளிட்ட விஷயங்களைப் பார்க்கவே நேரம் சரியாக இருக்கும். பிறகெங்கே புத்தகங்களைப் படிப்பது?
எந்தச் சமயத்தில் உங்களுக்கு அதிக வேலைகள் வரும்?
நூலக ஆணை வருகிறது என்றால், ஒவ்வொரு பதிப்பகத்திலிருந்தும் 20 தலைப்புகளில் புத்தகங்களை பைண்ட் செய்யக் கொடுப்பார்கள். தொழில் பரபரப்பாக நடக்கும். கடந்த 4 ஆண்டு களாக நூலக ஆணையே வருவதில்லை. இப்போது சென்னைப் புத்தக விழா மட்டுமே எங்கள் கொண்டாட்ட நேரம். இந்தப் புத்தகக் காட்சிக்கு மட்டும் 100 தலைப்புகளில் புத்தகங்களைத் தயாரித்துக் கொடுத்திருக்கிறோம்.