

சமூகப் பிரச்சினையோ தனிநபர் வாழ்வோ எதுவாக இருந்தாலும் அசோகமித்திரனின் எழுத்தில் யதார்த்தம் வலுவாக இருக்கும். பாத்திரங்களைச் சித்தரிப்பதில் துல்லியமான சித்திரங்களும் மிகையற்ற விவரணைகளும் இருக்கும். ஒரு பாத்திரத்தை இவரது சித்தரிப்பின் வாயிலாக நாம் சந்திக்கும்போது அந்தப் பாத்திரத்தின் பின்னணி, அது பிரதிநிதித்துவப்படுத்தும் மனித இயல்பு ஆகியவையும் இயல்பாக நமக்கு அறிமுகமாகிவிடும். ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்லிவிட்டு,அதை மையமாக வைக்காமல் சுற்றியிருக்கும் கதாபாத்திரங்களை வைத்தே அனைத்தையும் விளங்கவைத்துவிடக் கூடியவர் அசோகமித்திரன். சென்னையில் ஒரு காலகட்டத்தில் நிலவிய குடிநீர்ப் பிரச்சினை குறித்து அசோகமித்திரன் எழுதிய ‘தண்ணீர்’ நாவலில் அறிமுகமாகிறாள் ஜமுனா.
இடுப்பில் குடத்துடன் தண்ணீர் தேடி அலைகிற யாருடைய முகத்திலும் நம்மால் ஜமுனாவை இனம் கண்டுவிட முடியும். ஜமுனா மெத்தப் படித்தவளோ, அதிகாரம் படைத்தவளோ அல்ல. ஒரு குடம் தண்ணீருக்காகத் தெருத் தெருவாக அலைபவள். தன் தெருவில் எப்போது தண்ணீர் வரும் என்பதைக்கூட அண்டை வீட்டுக் குடும்பத் தலைவர்களிடம் கேட்பதற்குத் தயங்குகிறவள். அப்படியே துணிந்து பேசிவிட்டாலும் அதிகப்படியாக முறைவைத்துப் பேசிவிட்டதாக நினைத்து தன் அசட்டுத்தனத்தை நொந்துகொள்கிறவள். வீட்டுக்கார அம்மாளின் கணவரான அறுபது வயது மாமாவின் பார்வை தன் முதுகில் ஊர்வதை உணர்ந்து அவளால் அருவருப்பில் உடல் சுருங்கத்தான் முடியுமே தவிர வேறெதுவும் செய்துவிட முடியாது.
வேலைக்குப் போய் சம்பாதிக்கிற தங்கை சாயாவின் முன்னால் தன் வாழ்க்கை நிர்வாணப்பட்டு நிற்பதை நினைத்துக் கூனிக் குறுகிப் போகிறவள் ஜமுனா. பொய்த்துப்போன சினிமா கனவுகளையும் நிராசைகளையும் கண்களில் சுமந்திருப்பவள். ஒட்டி உலர்ந்துவிட்ட முகத்துக்கும் துருத்திக்கொண்டிருக்கும் கழுத்தெலும்புக்கும் நிச்சயம் சினிமாவில் ஹீரோயின் வாய்ப்பு இனிக் கிடைக்காது என்பதையும் அறிந்தே இருப்பவள். இருந்தும் தன் வீடு தேடி வருகிற பாஸ்கர் ராவுடன் சேர்ந்துகொண்டு தயாரிப்பாளர்களுடன் இரவைக் கழித்து வீடு திரும்புகிறவள். வீட்டுக்குள் நுழைந்ததுமே தன் கண்களின் மூலம் இரவு நடந்த சம்பவங்கள் அனைத்தையும் தெரிந்துகொள்ளும் தங்கையின் பார்வையைத் தவிர்ப்பவள். தன் செயலால் கோபம் கொண்டு வீட்டைக் காலி செய்துகொண்டு லேடீஸ் ஹாஸ்டலுக்குப் போகும் தங்கையின் கால்களைப் பிடித்துக்கொண்டு கெஞ்சுகிறவள்.
என்னதான் காலேஜுக்குப் போய்ப் படித்திருந்தாலும் தனக்குத் தெரிந்த உலகத்தின் விரிவும், தீவிரமும், கூச்சல் களும், விக்கல்களும், முனகல்களும், உக்கிரமும் தன் தங்கைக்குத் தெரியாது என்று புரிந்திருந்தும் அவளுடைய பிரிவு தந்த தனிமையைச் சமாளிக்கத் தெரியாதவள். தனிமை தரும் விரக்தியின் உச்சத்தில் தற்கொலை செய்துகொள்ள கயிறு முடிச்சிட்டு வைக்கிறவள். தன்னைத் தண்ணீர் பிடிக்கத் துணைக்கு அழைத்துச் செல்லும் டீச்சரம்மாவின் தோளில் முகம் புதைத்து அழுகிறவள்.
‘வெட்கங்கெட்டவளே’ என்று தன் முகத்தில் தங்கை காறி உமிழ்ந்தாலும் அவளைத் தேடிக்கொண்டு ஹாஸ்டலுக்குச் செல்கிறவள். மாமாவின் வீட்டில் வாழ்வின் இறுதி நாட்களைக் கழித்துக்கொண்டிருக்கும் அம்மாவுக்குத் துணையிருந்து எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில் இருக்கிறவள். ராணுவத்தில் இருக்கும் தன் கணவருக்கு மாற்றல் கிடைக்காத வேதனையில் கதறியழுகிற தங்கைக்குத் தன் வலி மறைத்துப் புன்னகையோடு ஆறுதல் சொல்கிறவள். தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு யார் அப்பாவாகிவிட முடியும் என்று சிரித்தபடியே கேட்கிற ஜமுனா, நாளை நடப்பதைக் குறித்து இன்று கவலைப்படாதவள். அதனாலேயே அனை வருக்கும் வாழ்க்கை மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்கிறவள்.
ஜமுனாவின் ஆளுமை, அவளது வாழ்வு, அதன் நெருக்கடிகள் ஆகியவற்றை நாவலின் பின்புலமான தண்ணீர்ப் பிரச்சினையோடு இணைத்துப் பார்க்கும்போது ஜமுனா என்பது தனி நபரல்ல என்பது புரியும்.