

முச்சந்தி இலக்கியம் என அழைக்கப்படும், தமிழ் வெகுஜன இலக்கிய வகைகளில் ஒன்றான குஜிலிப் பனுவல்கள் வெகுசன ரசனைக்குத் தீனிபோட்டன. அவ்வப்போதைய செய்திகளை உடனுக்குடன் பாடல்கள் வடிவில் வெளியிட்டன. தரமான பதிப்பாக அவை வெளியிடப்படாமல் மலிவு விலைப் பதிப்பாக, தரமற்ற தாளில் கட்டுப்படியாகும் வகையில் உருவாக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டன. மக்களின் வாழ்வு சார்ந்த செய்திகளையும் சமூக நிகழ்வுகளையும் அரசியலையும் இவை பதிவுசெய்துள்ளன. ஆனால், இவற்றை வாசிப்பது அவ்வளவு கவுரவமானதல்ல என்னும் எண்ணமே சமூகத்தில் இருந்துவந்துள்ளது.
குஜிலிப் பனுவல்களில் கையாளப்பட்ட மொழிநடை, அவற்றில் தென்பட்ட அச்சுப்பிழைகள் போன்றவை காரணமாக அவை மேட்டிமைச் சமூகத்தினருக்கானவை அல்ல என்னும் புரிதலையும் உருவாக்கியிருந்தன. ஆனால், இவை எல்லாவற்றையும் மீறி அவை சுமார் நாற்பது ஐம்பது ஆண்டுகள் தமிழக நகரங்களிலும் கிராமங்களிலும் புழக்கத்தில் விடப்பட்டிருந்திருக்கின்றன. தமிழ் நாளிதழ்கள் அறிமுகமான பின்னர் இவற்றின் தேவை வெகுவாகத் தேய்ந்து மறைந்துபோயுள்ளது. இத்தகைய குஜிலிப் பனுவல்களைப் பற்றியும், அவற்றின் வரலாறு, சமூகத்தில் அவற்றின் தாக்கம் போன்றவற்றைப் பற்றியும் ஆராய்ந்து நூலாக்கியிருக்கிறார் க. விஜயராஜ். வரவேற்கத் தகுந்த முயற்சி இது.
-ரிஷி