

இந்திய ஆங்கிலக் கவிதையின் நவீனத்துவ, பின்-நவீனத்துவ முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படும் மாகபாத்ராவின் கவிதைகள் தமக்கேயான பிரத்தியேக அழகியலையும் மொழியையும் கொண்டவை, பூடகத்தன்மை மிக்கவை, மறைமுகமாகக் குறிப்புணர்த்துபவை. இத்தொகுப்பிலுள்ள ‘நிகழ்வு’, ‘வண்ணம் குறித்த உறுதியின்மை’ போன்ற கவிதைகள் முறையே கிரகாம் ஸ்டெயின் எரிப்பு, கலர் டி.வி கொண்டு வராததால் உயிரோடு எரிக்கப்பட்ட புது மணப்பெண் குறித்த உண்மைச் சம்பவங்களைக் கருவாகக் கொண்டவை.
மகாபாத்ராவின் கவிதைகள் திட்டமான கண்டனங்களை, சாடல்களை, அரசியல் நிலைப்பாடுகளை அல்லது தீர்வுகளை முன்வைப்பதில்லை, மாறாக, புறவய நிலையில் உணர்வுகளின் தீவிரத்தை மொழியின் புகைத்திரை வழி கடத்திச் செல்பவை.
‘தொன்மத்தின் தலை மரத்தின் கிளையிடுக்கில் சிக்குண்டிருக்கிறது
அறிவின் பேய்கள் அதனைக் கடந்துபோகவிடாது’.(தோற்றுவாய்).
‘நான் சாம்பலைத் தள்ளி வைக்கிறேன்,
அதை என் நெற்றியில் பூசாதீர்கள்’.(சுதந்திரம்).
‘பாவனைகள் ஒருவரைக் காப்பாற்றக்கூடுமா?
இந்த மணிப்பொழுதைத் தள்ளாட்டமின்றி கடத்த,
என் கண்கள் பற்றிக்கொள்ள எதையாவது தேடுகின்றன,’ (அறை வெளிச்சம்)
‘இலக்கற்ற ஒரு நடைக்குப்பின் திரும்புகிறேன்,
ஜன்னல் வழி பார்க்கிறேன்:
பேருந்து நிறைகிறது, திரும்புகிறது, சென்று மறைகிறது,
யாரோ ஒருவரின் சிரிப்பு என்னைக் கலைக்கிறது.
சிந்தனை வெறுமையுற்றிருக்கிறது.
பசி ஒவ்வொருவருக்கும் ஒரு முகமூடியை வழங்குகிறது,
அதில் கூண்டிலடைக்கப்பட்ட மிருகத்தின் வாசனை.’ (ஒரு முகமூடி)
‘…நெறிமுறைகள் எழுதப்பட்ட பழமையான சுவர்,
நம் பார்வைக்குத் தோன்றுவது போல் இல்லையது,
அதன் கற்களுக்குள் யாரோ ஒருவரின் கெட்டுப்போன குருதி பாய்ந்திருக்கிறது.’
(அசோக சாசனத்தின் பாடல், கி.மு.261)
தொடர்பற்ற ஒழுங்கில் அடுக்கப்படும் ஏகாந்த மனநிலைக் காட்சிகள், நடுவே உணர்ச்சித் தீவிரமிக்க ஒரு வரி, அதனைப் பின்பற்றிச் செல்லும் சிந்தனை, தேர்ந்த ஆர்க்கெஸ்ட்ரா கண்டக்டரைப் போல முடித்துவைக்கும் பாங்கு என இக்கவிதைகள் நவீனத்துவ பாணி கட்டமைப்பில் முழுமை பெற்றவை.
இத்தொகுப்பில் அன்னை தெரசா பற்றிய கவிதையோடு மாதுரி தீக்ஷித்தைப் பற்றிய நீண்ட கவிதையும் இருக்கிறது. அன்னை தெரசாவுக்கான கவிதையில் வெளிப்படும் போற்றுதல் மாதுரி தீக்ஷித் கவிதையில் அவல மிக்கதான நம் காலத்தில் பிரபலங்கள் என்பவர்கள் யாராக இருக்கிறார்கள் என்ற பார்வையாக, அடங்கிய சீற்றமும் அங்கதமும் கொண்டு வெளிப்படுகிறது.
மூன்று பாகங்களாக அமைந்த தொகுப்பின் இரண்டாம் பாகம் ‘இன்னுமொரு சீரழிக்கப்பட்ட தேசம்’ என்ற தலைப்பின் கீழமைந்த பத்துக் கவிதைகள், 2002ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்தைப் பற்றியவை. தொகுப்பின் இயல்புக்கு மாறாக நேரடியாகப் பேசும் கவிதைகளும் இவற்றில் உண்டு.
உலக இலக்கியப் பரப்பில் இந்திய ஆங்கிலப் புனைவெழுத்து அடைந்திருக்கும் பேரும் புகழும், இந்திய ஆங்கிலக் கவிதைகளுக்குக் கிடையாது. இவையிரண்டையும் ஒப்புநோக்க வேண்டிய அவசியமில்லை என்றபோதும் இந்திய ஆங்கிலக் கவிதைகள் பல நேரம் பிராந்திய மொழிகளில் எழுதப்படும் கவிதைகளின் வீச்சுக்கும் அனுபவச் செறிவுக்கும் மொழிவன்மைக்கும் அருகில்கூட வர இயலாதவைகளாக இருப்பதை நாம் காணலாம். கவிதை என்னும் இலக்கிய வடிவம் மொழிக்குள்ளான நுட்பமான இயங்குதலைக் கோருவது. மண் சார்ந்த அனுபவங்கள் ஆங்கிலத்தினூடான வெளிப்பாட்டில் நீர்த்துவிடுவதும், வாசகப் பார்வைக்கு அன்னியமாகிப்போவதும் இந்திய ஆங்கிலக் கவிதைகளில் நிகழ்கிறது. ஆனால் அதேவேளை ஜெயந்த மகாபாத்ரா போன்றோரது இந்திய ஆங்கிலக் கவிதைகள் உலக வாசகப் பரப்பில் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெறுகின்றன. இந்திய ஆங்கிலக் கவிதைகளின் இருப்பை நியாயம் செய்ய இந்த ஒரு காரணம் போதுமானது என்றே தோன்றுகிறது.
சர்வதேச அங்கீகாரம் பெற்றிருக்கும் மகாபாத்ராவின் கவிதைகள் அவற்றின் அசலான இந்தியத்தன்மையினால் இங்கும் வரவேற்பைப் பெற்றவை. விமர்சகர் ஜான் பார்னி கூறுவதுபோல ‘உறைந்த, துயர்மிக்க மானுடத்தின் இசையை’ நம்முள் எழுப்புபவை ஜெயந்த மகாபாத்ராவின் கவிதைகள். ‘ரேண்டம் டெசன்ட்’ தொகுப்பு அதை இன்னுமொருமுறை உறுதி செய்கிறது.
Random Descent, (Jayantha Mahapatra)
Third Eye Communications,
N4/252, Nayapalli, Bhubaneswar-751015.
Orissa.