Last Updated : 23 Apr, 2017 10:49 AM

 

Published : 23 Apr 2017 10:49 AM
Last Updated : 23 Apr 2017 10:49 AM

சமகால விஷயங்களை வலுவாகச் சொல்லத் தொன்மங்கள் உதவுகின்றன: தேவிபாரதி நேர்காணல்

தேவிபாரதி 60

தேவிபாரதி, 70-களின் இறுதியில் எழுதத் தொடங்கியவர். ‘பலி’, ‘பிறகொரு இரவு’, ‘வீடென்ப’உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. நெருக்கடிநிலை, 1984 தேர்தல் ஆகிய அரசியல் நிகழ்வுகள் குறித்து ‘புழுதிக்குள் சில சித்திரங்கள்’ என்னும் கட்டுரைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். சென்ற ஆண்டு வெளியான இவரது இரண்டாவது நாவலான ‘நட்ராஜ் மகராஜ்’ வாசகப் பரப்பில் பெரும் கவனம் பெற்றது. தேவிபாரதியின் 60-ம் ஆண்டு பிறந்த நாளை ஒட்டி அவரது எழுத்துப் பயணம் பற்றி அவரிடம் மேற்கொள்ளப்பட்ட உரையாடலிலிருந்து சில பகுதிகள் இங்கே தரப்படுகின்றன.

உங்களது எழுத்துப் பயணம் எப்படித் தொடங்கியது?

வாசிப்பு தொடங்கிய காலத்திலேயே எழுதவும் ஆரம்பித்தேன். அத்துடன் மார்க்ஸிய லெனினிய இயக்கத்தின் தொடர்பும் ஏற்பட்டது. அதன் அடிப்படையில் பத்துப் பதினைந்து சிறுகதைகள் எழுதினேன். எண்பதுகளின் மத்தியில் ரஷ்ய, ஐரோப்பிய இலக்கியப் பரிச்சயம் ஏற்பட்டது. தஸ்தாயெவ்ஸ்கி, டால்ஸ்டாய், காஃப்கா, காம்யூ போன்றவர்களின் எழுத்துகள் வாழ்வு பற்றிய எனது பார்வையைத் துலக்கமாக்கின. ஓர் எழுத்தாளன் எப்படி உலகத்தைப் பார்க்கிறானோ அப்படித்தான் அவனுடைய படைப்பும் அமையும். ஆகவே, எனது படைப்புச் செயல்பாடு சார்ந்த மொழியும் யதார்த்தமான பாதையிலிருந்து மாறுபட வேண்டிய தேவை வந்தது.

எனக்கு எப்போதுமே பொழுதுபோக்கு இலக்கியங்களுடன் பெரிய தொடர்பு இருந்தததில்லை. முற்போக்கு இலக்கியம், தீவிர இலக்கியம் ஆகியவையே என் மனதுக்கு நெருக்கமானவையாக இருந்தன. மேலும் வாழ்வு புதிர்த்தன்மை கொண்டதாகவும், நிச்சயமற்றதாகவும், அவநம்பிக்கையை ஏற்படுத்துவதாகவும் இருந்ததால், இந்தச் சிக்கலான வாழ்க்கையை வெளிப்படுத்தும் படைப்புகளை உருவாக்க ஒரு மொழி தேவைப்பட்டது.

‘அழிவு' போன்ற சிறுகதைகளில் காணப்பட்ட யதார்த்தமான மொழிநடையிலிருந்து எளிய வாசகர் அணுகத் தயங்கும் ஒரு தனிப்பட்ட மொழிநடையில் எழுதத் தொடங்கியது அதனால்தானா?

எளிய வாசகர் அணுக முடியாத விஷயம் என நான் என் மொழியை நினைக்கவில்லை. ‘அழிவு’ முதல் ‘இருளுக்கும் பிறகு ஒளிக்கும் அப்பால்’ போன்ற எனது பல கதைகளில் ஆண் பெண் உறவு சார்ந்த விஷயங்களை ஆழமாகவும் நுட்பமாகவும் எழுத முயற்சி செய்தேன். ஆண் பெண் உறவு குறித்த மரபு சார்ந்த மதிப்பீடு ஒன்று இருக்கிறது. அந்த மதிப்பீடு மீது எனக்குப் பெரிய நம்பிக்கை இல்லை. எனது வாசிப்பும் எனது அனுபவங்களும் அதற்குக் காரணங்களாக அமைந்தன. இந்த வாழ்வை மேலும் மேலும் தீவிரமாகவும், மேலும் மேலும் நுட்பமாகவும் அணுகுவது மேலும் மேலும் உண்மையாக்குவது என்பதுதான் எனது படைப்புப் பார்வை. அதற்கான படைப்பு மொழியை நான் புதிதாகத் தேட வேண்டியதிருந்தது. அந்தத் தேடல்தான் எனது மொழியை வடிவமைக்கிறது. புரிந்துகொள்ள முடியாத சிக்கலான விஷயங்களைப் புரிந்துகொள்ள முயலும்போது ஒரு பதற்றம் உருவாகிறது. அந்தப் பதற்றமும் குழப்பமும் எனது கதைகளில் இடம்பெறும்போது எனது மொழியும் அவற்றுக்கானதாக இருக்கிறது.

பல எழுத்தாளர்கள் சில சிறுகதைகள் எழுதியவுடனேயே நாவலுக்குத் தாவிவிடுகிறார்கள். ஆனால் எண்பதுகளில் எழுதத் தொடங்கியபோதும் உங்களது முதல் நாவல் 2011-ல்தான் வெளியானது. நாவல் எழுதத் தோன்றவில்லையா, அல்லது அந்தத் தருணத்துக்காக காத்திருந்தீர்களா?

சிறுகதைகளிலேயே நான் தொடர்ந்து எனது மொழியைப் புதுப்பித்துக்கொண்டும், செப்பனிட்டுக்கொண்டும்தான் இருந்தேன். ஏனென்றால் படைப்பு மொழியைக் கண்டறிவதற்கான கருவி சிறுகதைதான். அதனால்தான் எனது சிறுகதைகளில் மொழியும் கதை சொல்லும் முறையும் தொடர்ந்து மாறிக்கொண்டேயிருந்தன. படைப்பு மொழிக்கான அந்த முயற்சி எளிமையான விஷயம் அல்ல. தொடர்ந்து எனது வாசிப்பு விரிவடைந்தது. அந்த வாசிப்பு விரிவடைய விரிவடைய எனது படைப்பு மொழி மாற்றமடைந்தது.

அந்தப் படைப்பு மொழிக்காகக் காத்திருந்தீர்கள் எனச் சொல்லலாமா?

அப்படி எந்தத் திட்டமும் எனக்குக் கிடையாது. சிறுகதைகள் மீதுதான் எனக்குத் தீவிர ஈடுபாடு இருந்தது. அதைச் சார்ந்துதான் இயங்கிக்கொண்டிருந்தேன். என்றாலும்கூட, சிறுகதைகளை எழுதிக் குவிக்க நினைக்கவில்லை. ஆனால், பின்னால் சிறுகதைகள் என்பவை நெடுங்கதைகளாக மாறின. நான் எழுதிய முதல் நாவலான ‘நிழலின் தனிமை’யின் பெரும்பகுதி எனது சொந்த அனுபவம். அது வலி மிகுந்த அனுபவம். இந்த அனுபவத்தை ஒரு சிறுகதையாகவோ நாவலாகவோ எழுத வேண்டும் என்ற ஆர்வம் நீண்ட காலமாக இருந்துவந்தது. ஆனால், அந்த வலி என்னுடன் நேரடியாகத் தொடர்புகொண்டிருந்த ஒன்று என்பதால் அதை எதிர்கொள்வதற்கான தயக்கமும் இருந்துகொண்டிருந்தது. மேலும் அதை எதிர்கொள்கிறபோது பழி உணர்வும் வன்மமும் ஏற்படுவது இயல்பு. ஆனால் எனக்குப் பழியின் மீதோ வன்மத்தின் மீதோ உடன்பாடு கிடையாது. அந்தப் பழி, வன்மத்திலிருந்து நான் வெளியேறியபோது அதை எழுதுவது எனக்கு எளிதானது. அப்போதுதான் அதை விலகி இருந்து என்னால் பார்க்க முடிந்தது.

உங்களது பல சிறுகதைகள் நீண்டவையாகவும் நாவலுக்கான சாத்தியம் கொண்டவையாகவும் உள்ளன. நீங்கள் நினைத்திருந்தால் உங்களது பல சிறுகதைகளை நாவல்களாக்கியிருக்கலாம். ஆனால் அவை நீண்ட கதைகளாகவே வெளிவந்தன. ஏன்?

எனது ‘வீடென்ப’ கதையை எடுத்துக்கொண்டால் அது நீண்ட சிறுகதைதான். அதை நாவலாக்கியிருக்கலாம். அதற்கான சாத்தியம் இருந்தது. ஆனால், சிறுகதையில் கிடைத்திருந்த கலாபூர்வ வெற்றி நாவலாக வெளிப்பட்டிருந்தால் கிடைத்திருக்குமா? மேலும், நாவலா சிறுகதையா என்பதை அந்தப் படைப்புதான் முடிவு செய்கிறது, நானல்ல. ‘நிழலின் தனிமை’யும் சரி, ‘நட்ராஜ் மகரா’ஜும் சரி இரண்டையுமே சிறுகதைகளாகத்தான் தொடங்கினேன். இரண்டுமே எனது நேரடியான அனுபவங்களிலிருந்து வந்த விஷயங்கள். அவற்றின் கதாபாத்திரங்கள் எனக்கு நன்கு அறிமுகமானவர்கள். எனது இந்தத் தனிப்பட்ட அனுபவத்தை பொது அனுபவமாக மாற்ற எனக்குக் கைகொடுப்பது எனது படைப்பு மொழி.

உங்களது கதைகளில் காணப்படும் வன்முறைகளின் தோற்றுவாய் எது?

வன்முறை என்பது எனது வாழ்வின் ஒரு பகுதியாக என்னைத் தொடர்ந்துகொண்டேயிருந்தது. நானும் எனது குடும்பமும் பல வன்முறைச் சம்பவங்களை எதிர்கொண்டிருக்கிறோம். அவற்றையெல்லாம் நான் எனது படைப்பில் முன்வைக்க விரும்பவில்லை. ஆனால், இந்த வாழ்வின் மீது படர்ந்திருக்கும் வன்முறையைப் புறக்கணித்துவிட்டு நாம் வாழ முடியாது. எனது வேலை என்பது இந்த வன்முறையைப் புரிந்துகொள்வது, வன்முறையைப் பரிசீலிப்பது. இதிலிருந்து விடுபட இயலுமா என்ற முனைப்புக் கொள்வது. இவைதான் எனது படைப்புகளிலும் வெளிப்படுகின்றன.

நல்ல தங்காள் போன்ற தொன்மக் கதைகளை மறுபடியும் எழுதிப் பார்ப்பது ஏன்?

இது தமிழில் இருந்துவரும் போக்குதான். தொன்மக் கதைகள் வழியே நான் சமகால வாழ்வைப் பரிசீலிக்க முயல்கிறேன். மேலும் நல்ல தங்காள் போன்ற விஷயங்களை எனது சுய அனுபவங்களிலும் எதிர்கொண்டிருக்கிறேன். சம காலத்திலும் ஒரு பெண் எதிர்கொள்ளும் விஷயத்தையே நல்ல தங்காள் கதை கொண்டிருக்கிறது. இத்தகைய தொன்மங்கள் சமகால விஷயங்களை வலுவாகச் சொல்ல உதவுகின்றன.

நொய்யல் என்னும் நாவலை உண்மையிலேயே எழுதுகிறீர்களா?

நானும் அப்படித்தான் நம்புகிறேன். அந்த நாவல் ஒரு ஐதீகம் என்றுகூட ஒரு பேச்சு இருக்கிறது. நூறாண்டுகள் கொண்ட வாழ்க்கையைத் தழுவும் நாவல் அது. அமராவதி ஆற்றுக்கும் நொய்யல் ஆற்றுக்கும் இடையிலுள்ள நிலப்பகுதி சார்ந்த வாழ்க்கை அது. அதில் மூன்று தலைமுறைகள் வருகின்றன. அதை எழுத ஆரம்பித்த பின்னர்தான் நான் பல விஷயங்களை அறிந்துகொண்டேன். நொய்யல் என்பது ஒரு பெரிய கேன்வாஸ். மேலும் மொழி சார்ந்து எனது சோதனைகளின் காரணமாகவும் அது கால தாமதமாகிறது. அநேகமாக இந்த ஆண்டு முடிந்துவிடும் என நினைக்கிறேன்.

பிறப்பு:1957 டிசம்பர் 30

சிறுகதைத் தொகுப்புகள்:பலி, பிறகொரு இரவு, வீடென்ப.

கட்டுரைத் தொகுப்பு:புழுதிக்குள் சில சித்திரங்கள்

விருது:1. சங்கீத நாடக அகாடமி பரிசு - ‘மூன்றாவது விலா எலும்பும் விழுதுகளற்ற ஆலமரமும்’என்ற நாடகத்துக்காக. 2. ‘க்ராஸ் வேர்டு’விருதுக்கு இவரது ‘Farewell, Mahatma’ சிறுகதைத் தொகுப்பு பரிந்துரைக்கப்பட்டது.

படம்: ம.பிரபு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x