

பெரும்பான்மை மனிதர்களிடம் குறு கிய எண்ணங்களே காணப்படு கின்றன. உலகை நேசிக்கிறேன் என்று பொதுவாகச் சொல்லப்படுவது வெறும் மாயை. உலகை நேசிப்பது என்பது பரந்து விரிந்த எண்ணம். பேதமற்று, வெறுப்புக் கசப்புகள் நீங்கி உயிர்களிடத்தே அன்பு செலுத்தும் செயலே உலகை நேசிப்பது.
நுகர்வுபொருட்களுக்கான சந்தையே உலகை ஒன்றுசேர்த்து வைத்திருக்கிறது. உண்மையில் உலகம் ஒன்று என மனிதர்கள் நினைப்பதில்லை. தான் வாழும் இடத்தை மட்டுமே உலகம் என்று நினைக்கிறார்கள். `வண்ணம் பூசியப் பறவை’ என்றொரு நாவலை ஜெர்சி கோஸின்ஸ்கி என்ற யூத எழுத்தாளர் எழுதியி ருக்கிறார். அதில் பறவைகளைப் பிடித்து விற்கும் லேக் என்றொரு கதாபாத்திரம் இடம்பெற்றுள்ளது. லேக் விசித்திரமானவன். கண்ணி வைத்துப் பறவைகளைப் பிடித்து விற்பவன். ஒருமுறை, இவன் கண்ணி வைத்துப் பிடித்தப் பறவை ஒன்றுக்கு சாயம் அடித்து, அதன் வண்ணத்தை மாற்றிவிடுகிறான். பின்பு, அதை வானில் பறக்கவிடுகிறான். வண்ணம் தீட்டப்பட்டப் பறவையின் குரலை கேட்ட மற்ற பறவைகள் திரும்பிப் பார்க்கின்றன. ஆனால், தங்களைப் போல நிறமில்லையே என அதைத் தாக்கத் தொடங்கின. வண்ணம் மாறிய பறவையோ தான் எதிரியில்லை என நிரூபிக்கும் விதமாக நெருக்கத்திலேயே பறந்தது. யாரோ ஒரு அந்நியப் பறவை என முடிவு செய்துகொண்ட பறவைகள் அதைக் கொத்தி வீழ்த்துகின்றன. பறவை மண்ணில் விழுந்து செத்துப் போகிறது. பறவையின் நிறத்தை வண்ணம் பூசி மாற்றிவிடுவதைப் போன்ற செயலைதான் நுகர்வு கலாச்சாரம் மேற்கொள்கிறது. வேற்று நிறங்களைப் பூசிக்கொண்டவர்கள் நிலத்தின் அந்நியர்களாகிவிடுகிறார்கள்.
பறவைகள் கட்டாயத்தில் வண்ணம் மாற்றப்படுகின்றன. நாமோ, விரும்பி நம் வண்ணத்தை மாற்றிக் கொள்கிறோம். இது நம் பண்பாட்டில், உருவத் தில், செயல்களில் வெளிப்படையாகத் தெரிகிறது. குறுகிய எண்ணம் கொண்டிருப்பவன் அதைப் பற்றி உணர்வதே இல்லை. மாறாக, பரந்த எண்ணம் கொண்டவர்களைப் பரிகாசம் செய்கிறான். உலகம் தனக்குத் தேவையில்லை என்று ஏளனம் செய்கிறான். பரந்த எண்ணம் கொண்டவன் அதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்வதே இல்லை. முழுநிலவு எதைக் கண்டு பொறாமைப்படப் போகிறது சொல்லுங்கள்.
பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மனிதர்கள் தங்கள் எண்ணத்தின் அடிப் படையிலேயே வாழ்கிறார்கள். கோடி கோடியாக பணம் வைத்துக்கொண்டு அடுத்தவருக்கு ஒருபிடிச் சோறு தராதவர் களும் இருக்கிறார்கள். வறுமையானச் சூழலில்கூட தேடிவந்தவர்களுக்கு உணவு அளிப்பவர்களும் இருக்கிறார்கள். எண்ணம்தானே செயலுக்கான காரணம். பரந்த எண்ணம் என்பது சுயநலத்தை முதன்மைப்படுத்தாது. அதற்காகத் தன்னை நிராகரிப்பதில்லை. தன்னையும் சகஉயிர்களையும் சமமாகக் கருதுவது. தனக்குப் பசிப்பதைப் போல இன்னொரு உயிருக்கும் பசிக்கும் என உணர்ந்து கொள்வது. சுகதுக்கங்கள் பொது வானவை. அவற்றைச் சந்திக்கவும் வென்று கடக்கவும் தைரியம் கொள்வதற்கும், வழிகாட்டுவதற்கும் பரந்த எண்ணங்கள் தேவைப்படுகின்றன.
ஒன்றாம் வகுப்பில் படிக்கிற பைய னுக்குப் பத்தாம் வகுப்புப் பாடம் நிச்சயம் புரியாதுதான். அவன் அதைக் கேலி செய்யவே செய்வான். அப்படித்தான் குறுகிய எண்ணம் கொண்டவர்களால் பரந்த எண்ணம் கொண்டவர்களைப் புரிந்துகொள்ள முடியாது. ஆனால் பத்தாம் வகுப்பு படிக்கிறவனுக்கு ஒன்றாம் வகுப்புப் பாடங்கள் எளிமையானவை. ஆகவே, பரந்த மனதுகொண்டவர்கள் குறுகிய மனது உடையவர்களை வெறுப்பதில்லை. பாவம் அறியாமையில் உழலுகிறார்கள் என்று புரிந்து கொள்கிறார்கள். சொர்க்கம் என்பது எங்கேயிருக்கிறது எனக் கேட்டால் பலரும் வானைக் காட்டுவார்கள். அது உண்மையில்லை. கீழேதான் இருக்கிறது. பூமியை விடச் சொர்க்கம் எதுவுமில்லை. சொர்க்கம் என்பது ஒரு வசிப்பிடமில்லை, அதுவொரு நிலை! வாழும்போதே அந்த நிலையை ஒருவனால் அடைந்து விட முடியும். ஞானிகள் அதையே வாழ்ந்து காட்டுகிறார்கள். ஞானியின் ஆசனத்தில் ஒருவன் உட்கார்ந்துவிடுவதால் அவனும் ஞானியாகிவிட முடியாது. ஞானம் என்பது முடிவற்ற தேடலில் கிடைக்கும் உன்னதம்.
வீட்டின் சுவர்கள் அடுத்த வீட்டினையும் நம்மையும் பிரிக்கின்றன. அதுபோல எண்ணிக்கையற்ற சுவர்களை மனிதர்கள் தனது எண்ணத்தால் உருவாக்கியிருக்கி றார்கள். அந்தச் சுவர்கள் தடையாக உயர்ந்து நிற்கின்றன. தான் எழுப்பிய சுவருக்குள்ளாகவே வாழ வேண்டும் என்று அவர்கள் தன் குடும்பத்தையும் கட்டுப்படுத்துகிறார்கள்.
சுவர்கள் மனிதர்களைக் கட்டுபடுத்தும் பறவைகளைக் கட்டுபடுத்தாது. அவை தன் எளிய சிறகுகளைக்கொண்டு எவ்வளவு நீளமான, உயரமான சுவரையும் தாண்டி பறந்துவிடும். ஆற்றின் வேகமே படகை செலுத்திவிடும் என்றாலும் துடுப்புகள் தேவைப்படத்தானே செய்கின்றன. துடுப்புகள் இல்லாத படகு விரும்பிய திசையை போய்ச் சேரமுடியாது. கட்டு பாடற்ற எண்ணங்களால் அலைக்கழிக்கப் படுகிறவர்கள் ஞானத்தால் வழிநடத்தப்பட வேண்டும் என்பதே உலக நியதி.
சிறுவர்களுக்காகச் சொல்லப்படும் நீதிக் கதைகளில் ஒன்றை இணையத்தில் வாசித்தேன். அதில், ஒருநாள் ஒரு விறகு வெட்டி காட்டில் மரம் வெட்டிக்கொண் டிருந்தான். அப்போது ஒரு புலி அவனைத் துரத்த ஆரம்பித்தது. உயிர் தப்பிக்க அருகில் இருந்த ஒரு மரத்தின் மீது ஏறிக்கொண்டான். அந்த மரத்தில் ஒரு குரங்கு வசித்து வந்தது. அந்தக் குரங்கு விறகுவெட்டியிடம் ``பயப்படாதே, புலியால் உன்னை நெருங்கவே முடி யாது. நான் இருக்கிறேன்…’’ என்று தைரியம் சொன்னது.
புலி பசியோடு மரத்தடியிலே காத் திருந்தது. பகல் மறைந்து மாலையும் வந்தது. விறகுவெட்டிக்கு பசி எடுத்தது. அவன் குரங்கிடம் உதவி கேட்டான். உடனே குரங்கும் பழங்களைப் பறித்து வந்து கொடுத்தது.
கோபமடைந்த புலி குரங்கிடம் சொன்னது: ``நீயும் என்னைப் போல ஒரு விலங்கு. மனிதர்களை நம்பாதே. அவனைக் கீழே தள்ளு. என்னால் பசி தாங்க முடியவில்லை” ஆனால், குரங்கோ ``உயிருக்குப் போராடுகிறவர் யாராக இருந்தாலும் எனது நண்பனே. நம்பியவருக்கு துரோகம் செய்யக்கூடாது’’ என மறுத்தது.
பிறகு குரங்கு மரக் கிளையைப் பற்றிக்கொண்டு தூங்க ஆரம்பித்தது. அப்போது புலி சொன்னது: ``விறகு வெட்டியே... எவ்வளவு நாள் ஆனாலும் நான் இங்கிருந்து போக மாட்டேன். என் பசியைத் தீர்த்துக்கொள்ளும்வரை இங்கேதான் இருப்பேன். உன்னை உயிரோடு விட்டுவிடுகிறேன். அந்தக் குரங்கை கிழே தள்ளிவிடு. அதை சாப்பிட்டுவிட்டுப் போய்விடுகிறேன்’’ என்றது.
உடனே விறகுவெட்டி, தூங்கும் குரங்கை கிழே தள்ளிவிட்டான். புலி பாய்ந்து அதைத் தின்றுவிட்டு மறைந் தது. சுயநலம் மனிதர்களை என்ன வேண்டுமானாலும் செய்யவைக்கும் என்பதையே இந்தக் கதை நமக்கு அடையாளம் காட்டுகிறது.
அடிமைத்தனம் என்பது உலகில் முற்றிலும் ஒழிக்கப்படவில்லை. அதன் வடிவம் மட்டுமே மாறியிருக்கிறது என்கிறார் கவிஞர் சார்லஸ் புகோவெஸ்கி. அதன் நிரூபணம் போலவே கார்ப் பரேட் நிறுவனங்களும், தனியார் கல்வி நிலையங்களும், அரசு உயரதிகார அமைப்பும் நடந்துகொள்கின்றன.
புத்தகங்களே விழிப்புணர்வூட்டும் எண்ணங்களையும் அனுபவங்களையும் அறிவையும் நமக்குத் தருகின்றன. உலகைப் புரிந்துகொள்ளவும், இணைந்து வளர்த்தெடுக்கவும். நம்மையும், சமூ கத்தையும் மேம்படுத்தவே புத்தகங்கள் துணைசெய்கின்றன. இன்றும் அதன் மதிப்பை பலரும் உணராமல் இருப்பது அவர்கள் அறியாமையே.
- கதைகள் பேசும்… | எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerramki@gmail.com