

கொந்தளிப்பான சமூகக்காலகட்டங்களை தமிழ் இலக்கியம் பதிவு செய்துள்ளதா? அல்லது இலக்கியவாதி கடப்பாட்டு உணர்வுடன் இயங்குகிறானா? என்னும் கேள்வி அடிக்கடி கேட்கப்படுவதுண்டு. 'ஆம்' என்று உரக்கச் சொல்லும் வகையில் இரு சிறுகதைகள் சமீபத்தில் வந்துள்ளன.
தருமபுரி மற்றும் மரக்காணம் பகுதிகளில் இரு உயிர்களைக் காவு வாங்கியும் சில கிராமங்களைச் சூறையாடியும் வெளி தணிந்துள்ள இச்சூழலில், இதன் பதிவுகளாக உள்ள இரு சிறுகதைகளைப் பரிசீலிக்கலாம். பிரிட்டீஷ் இந்திய காலகட்டத்தில் தொண்டை கட்டிச் சமூகத்தினருக்கும் கட்டையன் சமூகத்தினருக்கும் இடையிலான மோதலில் அடிதடி ஏற்பட்டு குற்றவழக்கு நீதிமன்றத்திற்குப் போய்விடுகையில் பாதிக்கப்பட்ட கட்டையன் சமூகமே மீண்டும் வஞ்சிக்கப்படும் நிலையில் தந்திரமாக இருவரைக் கொன்று, பழியும் போட்டுவிடுகிறது தொண்டைகட்டி சமூகம்.
“காதல் செய்யும் அவர்கள் வீட்டுப் பிள்ளைகளை முதலில் கண்டிப்பது என்றும், அதுவும் சரிப்பாடாத போது கை கால்களை எடுத்துவிடுவது என்றும் பழக்கம் வைத்திருந்தார்கள்...” என்று தமிழவன் எழுதிய இக்கதையில் (மணிக்கூட்டுகளுக்கிடையில் கொலை வழக்கு / குமுதம் தீராநதி ,செப்டம்பர் 2013) ஒரு குறிப்பு வருகிறது. இக்குறிப்புதான் இக்கதையை பிரிட்டீஷ் இந்திய காலகட்டத்திலிருந்து நம் காலகட்டத்திற்குக் கொண்டு வந்துவிடுகிறது.
'சோக முடிவுடன் ஒரு காதல்' என்னும் அம்பையின் சிறுகதை (உயிர்மை - அக்டோபர் 2013) தேவி மாகாத்மியத்தின் மகிஷாசுரமர்த்தினி கதையை மறு ஆக்கம் செய்கிறது. மகிஷனை எதிர்கொள்ள முடியாத ஆண் தெய்வங்கள் தேவியை அனுப்ப, பெண்ணால் மட்டுமே தனக்கு மரணம் சம்பவிக்க வேண்டும் என்று வரம்பெற்றிருந்த அவன், தாயன்பு உள்ளிட்ட எந்த நேசமும் கிடைக்கப் பெற்றிராத தனக்கு அவளின் அன்பு மட்டும் கிடைத்துவிட்டால் சண்டையை நிறுத்திவிடுவதாக மன்றாடுகிறான். பன்றிகள் மத்தியில் பாதாளத்தில் கிடக்க வேண்டியவன் தேவலோக வாழ்க்கைக்கு ஆசைப்படலாகாது என்று தீர்மானகரமாக அவனை அழித்துவிடுகிறாள் தேவி.
“அவன் சென்ற பாதையின் பின்னால் தலைவேறு முண்டம் வேறாக உதிரம் பெருக்கோட, அவனை அள்ளி எடுத்து அணைப்பார் இல்லாமல் கிடந்தான். அவலட்சணம், எருமையின் மகன், அசுரன் என்று இகழப்பட்ட மகிஷன் என்ற காதலன், சாகும் கணத்தில் எதிர்காலத்தில் அவனை அறியப்போகும் விதம் தெரிந்துவிட்டதாலோ என்னவோ அவன் முகம் சாந்தமாக இருந்தது. மிகவும் எட்டத்தில் வசப்படாமல் நிற்கும் ஒன்றைப் பிடிக்க முயல்வதுபோல அவன் பெரிய விழிகள் மேலே வானத்தைப் பார்த்தபடி நிலைத்து நின்றன” என்று அம்பை எழுதுவது அசுரனின் முடிவை மட்டும்தானா?
நூற்றாண்டு விழா கொண்டாடும் இந்திய சினிமா வரலாற்றில் ஒரு முரண்சுவையான பதிவு உள்ளது. இந்திய சினிமாவின் முதல் திரைப்படம் 'ராஜா ஹரிச்சந்திரா' வைத் தயாரித்த தாதாசாகேப் பால்கே தாரமதியின் பாத்திரத்தில் நடிக்க, சிவப்பு விளக்குப் பகுதியில் இருந்த பெண்கள் உட்பட, யாரும் வராததால் அன்னா ஹரி சலுக்கே என்னும் ஆணை அப்பாத்திரமேற்ற நடிக்க வைத்து எடுத்து முடித்தார்.
மலையாள சினிமாவின் முதல் படம் 'விஜதகுமாரன்' (காணாமல்போன குழந்தை) எடுத்த ஜே.சி. டேனியல் என்பவர் தன் சொத்துகளை விற்று ஏறக்குறையத் தன்னைப் பணயம் வைத்தே எடுத்தார். நாயர் பெண் பாத்திரத்தில் தாழ்ந்த சாதிப் பெண்ணை (பி.கே. ரோஸி) நடிக்க வைத்ததற்காக உயர் சாதியினரால் புறக்கணிக்கப்பட்ட இப்படத்தின் பிரதிகள் எதுவும் இல்லாது, தடயமின்றிப் போகுமாறு செய்யப்பட்டுள்ளது.
பால்கேயின் திரைப்படப் பிரதி இன்றும் கிடைக்குமளவுக்கு வரலாற்று ஆவணமாக பாதுகாக்கப்பட, டேனியலின் பங்களிப்பு அழித்தொழிக்கப்பட்டுவிட்டுது. காரணம்? பால்கே பிராமணர், டேனியல் அக்காலகட்டத்தில் இழிநிலையில் வைக்கப்பட்டிருந்த நாடார் சமூகத்தவர். எனவேதான், 574 சிறுகதைகளும் பல ஓவியங்களும் படைத்து, 11 கோடி ரூபாய் மதிப்பிலான தன் சொத்துக்களைச் சமூக நிறுவனங்களுக்கு விட்டுச் சென்ற எழுத்தாளர் சூடாமணி ஒருமுறை இப்படிக் குறிப்பிட்டார்:
“சமூகம் மாற மனிதச் சிந்தனை அடிப்படையில் மாற வேண்டும். தீண்டாதார் இக்கொடுமையை எதிர்த்துப் புரட்சி செய்வதோடுகூட, இந்தச் சமூக அநீதியினால் பயனடையும் மேல் வருணத்தாரும் அப்படிப் பயனடைவது அதர்மம் என்று உணர்ந்து நாடு தழுவிய அளவில் இந்தக் கொடுமையை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம்.”
இது சூடாமணியின் ஆசை. நம் சமூகத்தின் ஆசை?