

ராணிதிலக்கின் கவிதைகளில் சில படிக்கச் சிரமம் தருவதாகவும், சில ஜென் பாணியிலும் சில வினோதத் தன்மையிலும் உள்ளன. அவருடைய ‘கவிதையை வாசித்தல்’ கவிதையில் ஒரு கவிதையை வாசிப்பது எத்தகளைய உணர்வுகளை உருவாக்கக் கூடியது என்றும், தன் கவிதையை தானே வாசிப்பதும், உன் கவிதையை வாசிப்பதும் எத்தகைய உணர்வுகளைத் தரக்கூடியதென்றும் அதில் விவரிக்கிறார்.
'ஒன்றுக்கும் ஒன்றும் ஆகவில்லை' என்ற கவிதையில் தண்டவாளங்களுக்கிடையில் ஒரு குட்டி ஆடு, ரயில் இன்னும் வரவில்லை அல்லது வந்து கொண்டிருக்கிறது. காத்திருப்போரின் சத்தம், தண்டவாளத்தில் பாய்கிறது. மிகத் தூரத்தில் ரயில். எதிரில் நடந்து செல்லும் ஆடு. அவர்கள் சத்தம். பார்த்துக் கொண்டிருக்கிறேன். ரயில் கடந்து விட்டது. ஆடு கடந்துவிட்டது. திரும்பிப் பார்க்கும் போது தண்டவாளத்தில் அதே ஆடு சென்று கொண்டிருக்கிறது. ரயில் இல்லை. ஒன்று ஆகவில்லை என்று சொல்வதற்கில்லை. இப்பொருளில் கவிதை அமைந்துள்ளது. ஜென் நினைவு ஏற்படுகிறது. ரயில் வருகிறதா,கடந்துவிட்டதா? எதுவும் விபரதீமாக நடந்துவிட்டதா? தெரியவில்லை. ஜென்னின் வெற்று வெளி என்பதுதான் பதில்.
‘இயந்திர சாலையின் கதவுகள் காத்திருக்கின்றன’ என்ற கவிதையில் ஒருவன் மிக வேகமாக வண்டியை மிதிக்கிறான். ரயில்வே கதவை அடைத்திருக்கிறார்கள். ரயில் கடக்க இருக்கிறது. தொழிற்சாலை கதவு மூடப்படும் போது பசி திறந்துவிடுகிறது. அவனால் காத்திருக்க முடியாது. ரயில் வந்துவிட்டது. பேரிரைச்சலுடன் கடக்கிறது. மிதிக்கிறான் அதிவேகமாக. கதவை அடைக்க சில நிமிடங்களே இருக்கின்றன. யாரும் எதிர்பாராத தருணத்தில் மிதிவண்டு ரயிலைத் துளைத்துப் பாய்கிறது. ரயில் கடந்தபின் ஒரு எலும்புக்கூடு மிதிப்பதைப் பார்க்கிறார்கள். தொழிற்சாலையின் கதவைத் திறக்கிறார்கள். ஏனென்றால் அங்கே எலும்புக்கூட்டிற்கும் வேலை காத்துக் கிடக்கிறது. இதுதான் கவிதைப் பொருள். ஓடுகின்றன ரயிலைத் துளைத்துக் கடக்கும் மிதிவண்டிக்காரன், ரயில் கடந்தபின் எலும்புக்கூடாக மாறும் வினோதத் தன்மை என்னைக் கவர்ந்தது.
வினோதங்களும் ஜென் தன்மையும் கலந்த கவிதைகள் இவரிடத்தில் உள்ளன. ஆனால் இவருடைய கவிதைகளில் தாமரை என்ற சொல் அடிக்கடி பல அர்த்தங்களில் வந்து கவிஞரை அதிகாரம் செய்கிறது. இவர் தாமரையின் அதிகாரத்திற்குப் பணியாது இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.