Last Updated : 22 Nov, 2014 12:44 PM

 

Published : 22 Nov 2014 12:44 PM
Last Updated : 22 Nov 2014 12:44 PM

ஜி.சுப்பிரமணிய ஐயர்: புதிய விழிப்பின் முன்னோடி

“இருளடைந்த மாகாணம் என்றழைக்கப்படக்கூடிய பாக்கியம் பெற்ற நமது சென்னையில், ஸ்ரீ ஜி. சுப்ரமணிய ஐயரும் அவரைப் பின்பற்றியொழுகும் சிலரும் தவிர, மற்ற பெரும் பெயர்களெல்லாரும் தாங்கள் பழைய சாதியைச் சார்ந்த பரம சாதுக்கள் என்று சொல்லிக்கொண்டு வீட்டிற்குள் தூங்குகின்றார்கள்” என்று பாரதி குறிப்பிடும் ஜி. சுப்ரமணிய ஐயர், அரசியல், சமூக சீர்திருத்தம், இதழியல் என்று பல தளங்களில் தீவிரமாகச் செயல்பட்டவர். ‘தி இந்து’ ஆங்கில இதழின் தொடக்கத்துக்குக் காரணமான அவர், தமிழ் மட்டும் அறிந்தவர்களுக்கும் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சுதேசமித்திரன் இதழைத் தொடங்கியவர். ‘தேசியத்தின் திரிசூலம்’ என்று அழைக்கப்பட்ட பாரதி வ.உ.சி.- சுப்பிரமணிய சிவா ஆகியோரின் பெரும் மதிப்பைப் பெற்றவர். ஊக்கம் தரும் அவரது வாழ்க்கையைக் குறித்துப் பேசும் இந்நூலை பெ.சு. மணி எழுதியிருக்கிறார்.

மதவேற்றுமைக்கு எதிரானவர்

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் 1855 ஜனவரி 19-ல் பிறந்தவர் ஜி. சுப்பிரமணிய ஐயர். திருவையாற்றில் பள்ளிப்படிப்பை முடித்த அவர், 1874-ல் சென்னையில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் படித்தார். ஸ்காட்லாந்து மிஷன் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தபோது முடும்பை வீரராகவாச்சாரியாரின் அறிமுகம் கிடைத்தது. சுப்பிரமணிய ஐயரின் அரசியல் வாழ்வுக்கு வீரராகவாச்சாரியாரின் நட்பு பெருமளவில் உதவியது. பின்னாளில் தலைமை ஆசிரியராக உயர்ந்த அவர், திருவல்லிக்கேணியில் தொடங்கிய பள்ளியில் முஸ்லிம், தாழ்த்தப்பட்ட மாணவர்களைச் சேர்த்துக்கொண்டு பயிற்றுவித்தார். ஜாதி, மத வேற்றுமைகளை ஏற்றுக்கொள்ளாமல் சீர்திருத்தக் கொள்கையுடன் இயங்கிய அவர், ஆங்கிலோ இந்தியப் பத்திரிகைகளின் இந்து மத வெறுப்பையும் சாடியவர்.

சென்னையில் 1850-களில் தொடங்கப்பட்ட இலக்கியச் சங்கங்கள், அரசியல் சமூகப் பிரச்சினைகள் குறித்த விவாதங்களை வளர்த்தெடுத்தன. இந்தப் பிரச்சினைகள் குறித்து அரசுக்கு அவ்வப்போது அறிக்கைகளை அனுப்பிவந்த ‘டிரிப்ளிகேன் லிடரரி சொசைட்டி’யில் சுப்பிரமணிய ஐயர் உறுப்பினராகச் சேர்ந்தார். அவரது அரசியல் மற்றும் எழுத்துப் பணிகளுக்கு இந்தச் சங்கம் அடித்தளம் இட்டது. 1878-ல் சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக முத்துசாமி ஐயர் நியமிக்கப்படுவதை ஆங்கிலோ இந்தியப் பத்திரிகைகள் கடுமையாக விமர்சித்தன. அப்போது பிராமணர் பிராமணர் அல்லாதோர் பிரச்சினையும் தலைதூக்கியிருந்தது. முத்துசாமி ஐயரின் நியமனத்துக்கு எதிராக எழுந்த பிரச்சினையிலும் இது எதிரொலித்தது. இந்த விவகாரம் தமிழர்களிடையே பிளவு ஏற்படுத்தியது சுப்பிரமணிய ஐயருக்கு வருத்தம் அளித்தது.

இந்தக் காலகட்டத்தில், ஆங்கிலம் கற்றவர்களிடம் அரசியல் விவாதங்களைப் பரப்பும் நோக்கில் ‘தி இந்து’ ஆங்கில இதழைத் தொடங்கினார். ‘டிரிப்ளிகேன் லிடரரி சொசைட்டி’யைச் சேர்ந்த முடும்பை வீரராகவாச்சாரியார், டி.டி. ரங்காச்சாரியார், பி.வி. ரங்காச்சாரியார், டி. கேசவராவ், என். சுப்பாராவ் பந்துலு ஆகியோரும் ‘தி இந்து’ இதழ் உருவாக்கத்தில் பங்குபெற்றனர். 1882-ல் ‘சுதேசமித்திர’னைத் தொடங்கினார். இதில் துணை ஆசிரியர்களாகப் பணிபுரிந்தவர்களில் குருமலை சுந்தரம் பிள்ளை, பாரதியார் போன்றவர்கள் மிகவும் முக்கியமானவர்கள். அந்தக் காலகட்டத்தில் வெளிவந்த ‘விகடதூதன்’, ‘வெற்றிக்கொடியோன்’ போன்ற இதழ்கள் சுதேசமித்திரனைப் பின்பற்றி அரசியல் விமர்சனம் செய்தன என்று ஆங்கிலேய அரசின் அறிக்கையிலேயே பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்து தமிழுக்கு அவர் அளித்த வார்த்தைகள், பிற இதழ்களால் பின்பற்றப்பட்டன.

சீர்திருத்தக் கொள்கையில் உறுதி

சமூக சீர்திருத்தக் கொள்கையில் தீவிரமாக இயங்கிய சுப்பிரமணிய அய்யர், சொந்த வாழ்விலும் அதைக் கடைப்பிடித்தார். 10 வயதிலேயே கணவனை இழந்த தனது மகளுக்கு, மறுமணம் நடத்த முடிவுசெய்தபோது பலத்த எதிர்ப்பைச் சந்தித்தார். ஆனால், அதை வெற்றிகரமாக நடத்திக்காட்டினார். அவரது மகளின் மறுமண வாழ்க்கை கசப்பானதாக இருந்ததும், இளம் வயதிலேயே அந்தப் பெண் மரணமடைந்ததும் அவரை வருத்தமுறச் செய்தது. தீண்டாமைக்கு எதிராகவும் அவர் பல கட்டுரைகள் எழுதினார். ‘எத்தனை கொடூரக் குற்றம் செய்தாலும் பிராமணர்களுக்குத் தண்டனை விதிக்கப்படாது’ என்று திருவிதாங்கூர் தலைமைச் செயலாளர் சட்டம் கொண்டுவந்தபோது அதைக் கடுமையாக எதிர்த்தார். ‘கொடூர மூடபக்தி’ என்று அதை விமர்சித்தார்.

காங்கிரஸ் கட்சி தொடங்கப்படுவதற்கு அடிப்படையாக அமைந்த கல்கத்தா கூட்டத்தில் பங்கேற்ற 72 அறிஞர்களில் இவரும் ஒருவர். தொடர்ந்து அரசியல் களத்தில் இருந்தாலும், அவரது சீர்திருத்தக் கொள்கைகளை விரும்பாத சென்னை பிரமுகர்கள் அவருக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்ததைச் சுட்டிக்காட்டுகிறார் பெ.சு. மணி.

காங்கிரஸ் கட்சி மிதவாதிகள், தீவிரவாதிகள் என்று இருபிரிவுகளாகப் பிரிந்தபோது தொடக்கத்தில் மிதவாதிகளின் ஆதரவாளராகவே இருந்திருக்கிறார் சுப்பிரமணிய ஐயர். கொஞ்சம் கொஞ்சமாக தீவிரவாதிகள் பக்கம் அவர் சாயத் தொடங்கியதும் அதை மகிழ்வுடன் வரவேற்றவர் பாரதியார். ஜனவரி 10, 1907-ல் ‘இந்தியா’ இதழில் பாரதி இதைக் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார். விபின் சந்திரபாலர், கோபால கிருஷ்ண கோகலே, ஏ.ஓ. ஹியூம் போன்ற தலைவர்களின் அபிமானத்தைப் பெற்றவர் சுப்பிரமணிய ஐயர். அரசியல் கூட்டங்களில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த முதல் தலைவரும் அவர்தான் என்று பெ.சு. மணி குறிப்பிடுகிறார். இதுபோன்ற அரிய தகவல்கள் அடங்கிய புத்தகம் இது.

திலகர், வ.உ.சி., பாரதியார், சுப்பிரமணிய சிவா போன்ற தலைவர்கள் குறித்த ஆய்வுகள், தமிழறிஞர்கள், பதிப்பாளர்கள், பக்தி இயக்கங்கள் குறித்த ஆய்வுகள் என்று முக்கிய நூல்களை எழுதிய பெ.சு. மணி இந்த நூலை எழுதியிருக்கிறார்.

ஜி. சுப்பிரமணிய அய்யரின் மகன் வயிற்றுப் பேரனான வி. சுப்பிரமணிய அய்யர் கூறிய பிரத்யேகத் தகவல்களும் இந்த நூலில் இடம்பெற்றிருக்கின்றன. ஜி. சுப்பிரமணிய ஐயர் எழுதிய தமிழ்க் கட்டுரைகளைச் சேகரித்து ‘குமரி மலர்’ மாத இதழில் ஏ.கே. செட்டியார் வெளியிட்டதையும் இந்நூலில் பெ.சு. மணி பதிவுசெய்திருக்கிறார். இந்திய வரலாற்றில் தமிழர்களின் பங்கை அறிய விரும்புபவர்களுக்கு முக்கியமான வழிகாட்டி இந்த நூல்.

- வெ. சந்திரமோகன், தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x