Last Updated : 21 Jan, 2017 10:19 AM

 

Published : 21 Jan 2017 10:19 AM
Last Updated : 21 Jan 2017 10:19 AM

ஐரோப்பியர்கள் இந்தியாவைத் திருடியதன் வரலாறு!

வாஸ்கோடகாமா 1498-ல் இந்தியாவுக்கும் போர்ச்சுகலுக்குமான கடல்வழியைக் கண்டடைந்தது முதல் 1757-ல் ராபர்ட் கிளைவ் தலைமையில் ஆங்கிலேயர்கள் வங்காளத்தைக் கைப்பற்றியது வரையிலான வரலாற்றைக் கூறும் ‘த தெஃப்ட் ஆஃப் இந்தியா’ (The Theft of India) எனும் புத்தகத்தை ராய் மாக்ஸம் எழுதியுள்ளார். இந்தியாவை இரண்டாகப் பிளக்கும்படி ஆங்கிலேயர் உருவாக்கிய உயிர்வேலியைக் கண்டுபிடித்து 'த கிரேட் ஹெட்ஜ் ஆஃப் இண்டியா’ (தமிழில் 'உப்பு வேலி' - 2015) எனும் புத்தகமாக வெளியிட்டவர் ராய் மாக்ஸம்.

இந்தியாவில் வியாபாரத்துக்காகப் பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் போட்டி போட்டுக்கொண்டு வந்து சேர்ந்த வரலாற்றையும், பின்னர் இந்தியாவின் பல பகுதிகளையும் காலனிகளாக்கியதையும் தொழில்கள் மீது பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இந்தியாவை மெல்ல மெல்லக் கொள்ளையடித்த ஐரோப்பிய ஆதிக்கத்தின் கொடூர வரலாற்றையும் பாரபட்சமின்றி ராய் மாக்ஸம் பதிவுசெய்கிறார்.

போர்த்துகீசியர்கள் ஊடுருவலின் கொடுரத்தைச் சொல்லி இப்புத்தகம் தொடங்குகிறது. டச்சுக்காரர்களும் ஆங்கிலேயர் களும் நவீனப் போர்க்கப்பல்களுடன் வந்திறங்கியபோது போர்த்துகீசியர்களின் இந்திய ஆதிக்கம் வீழ்ந்தது. அவர்கள் கோவாவுக்கும் சில சிறு பகுதிகளுக்கும் துரத்தப்பட்டனர். போர்த்துக்கீசியர்களின் காலனிகளை ஆட்கொண்ட டச்சுக்காரர்களும் மிதவாதிகளாக இல்லை. இருவரும் இந்தியாவின் ஏற்றுமதி மீது, குறிப்பாக மசாலா பொருட்களின் ஏற்றுமதி மீது தனியாதிக்கம் செலுத்தினார்கள். இந்திய விவசாயிகளை, வியாபாரிகளை மிகக் குறைந்த விலைக்கு விற்கும்படி கட்டாயப்படுத்தினர். பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில், தென்னிந்தியாவில் பெரும் போரில் நஷ்டமடைந்த டச்சுக்காரர்கள் இந்தியாவை விட்டுவிட்டு கிழக்காசியாவுக்குச் சென்றனர்.

ஐரோப்பியர்கள் இந்தியாவில் மேற்கொண்ட போர்களையும் அடக்குமுறைகளையும் நேரில் கண்ட, அனுபவித்த சாட்சியங்களின் பதிவுகளையும் இப்புத்தகம் உள்ளடக்கியிருக்கிறது. இதுவரை பெரிதும் அறிந்திடப்படாத நிகழ்வான, இந்திய மக்கள் அடிமைகளாக கிழக்காசியாவிலிருந்த பல்வேறு ஐரோப்பிய ஆதிக்க சக்திகளுக்கும் விற்கப்பட்ட வரலாற்றையும் அது குறிப்பிடுகிறது. இதே காலகட்டத்தில் முகலாயர் ஆட்சிக்குட்பட்ட இந்தியாவில் இருந்த அடக்குமுறைகளையும் ராய் பதிவுசெய்துள்ளார்.

ஆங்கிலேயர் 1613-ல் இந்தியாவுக்கு வியாபாரம் செய்யும் ஒரே நோக்கோடு வந்து சேர்ந்தனர். இந்திய ஆட்சியாளர்கள் அவர்களை சிறிய தொழிற்பேட்டைகளை அமைக்க அனுமதித்தனர். டென்மார்க்

கிலிருந்து 1620-ல் வந்த வியாபாரிகளுக்கும் இதே அனுமதி வழங்கப்பட்டது. பிரெஞ்சுக்காரர்கள் வந்ததும் இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் பல பகுதிகளைக் கைப்பற்றிக் குடியிருப்புகளை அமைத்தனர். பின்னர் நடந்த போர்களில் சிறிய பிரெஞ்சுப் படை பெரிய இந்தியப் படைகளையும் எளிதில் வீழ்த்தியது. இந்த வெற்றிகள் தந்த தன்னம்பிக்கையில் பிரெஞ்சு ஆட்சியாளர்கள் பல்வேறு இந்திய சிற்றரசர்களுடன் உடன்படிக்கைகளைச் செய்துகொண்டனர். பிரெஞ்சுக்காரர்களின் வளர்ச்சியைக் கண்டு ஆங்கிலேயர் அதிர்ச்சியுற்றனர். இந்தியாவில் போர்ப்படைகளை அதுவரை அதிகமாகப் பயன்படுத்தாத ஆங்கிலேயர் முதன்முறையாகப் படையை வலுப்படுத்த ஆரம்பித்தனர். ராபர்ட் கிளைவின் தலைமையில் ஆங்கிலேயப் படை பிரெஞ்சு கூட்டுப் படையை வீழ்த்தியது. அதுவே, இந்தியாவில் பிரெஞ்சு ஆதிக்கத்தின் வீழ்ச்சியையும் உறுதிசெய்தது.

ஆங்கிலேயர் வங்கத்தில் தங்கள் வியாபார மையத்தை நாளுக்கு நாள் வலுப்படுத்திவந்ததைக் கண்டு நவாப் எச்சரிக்கையடைந்து அதைக் கைப்பற்றினார். அதை அவரிடமிருந்து மீட்குமாறு கிளைவுக்குக் கட்டளையிடப்பட்டது. வெறும் 2,000 போர்வீரர்களைக் கொண்டு சண்டையிட்ட கிளைவ் நவாபின் படையைப் பெருநாசம் செய்தார். சமாதான உடன்படிக்கை ஏற்பட்டது. கிளைவுக்கு உடன்படிக்கை நிலைக்குமென்ற நம்பிக்கை இல்லை. தனக்கு சாதகமான நவாபின் உறவினரும் தளபதியுமான மீர் ஜாஃபரை நவாபாக நியமிக்க விரும்பினார். மீர் ஜாஃபர் பிரதியுபகாரமாக கிளைவுக்குப் பெரும் செல்வம் தருவதாக வாக்களித்தார். மீண்டும் போர் சூழ்ந்தது. கிளைவ் வென்றார்.

பின்னர் ஒரு புதிய நவாப் பல முகலாய அரசர்களையும் ஆங்கிலேயருக்கு எதிராக

ஒன்றுதிரட்டினார். 1764-ல் அந்த கூட்டுப்

படையை கிளைவ் முறியடித்தார். அதின் பின்னர்

முகலாய மன்னர்களுடன் உடன்படிக்கையை உருவாக்கி வங்கம், பிஹார் ஆகியவற்றின் திவான்களைப் பெற்றார். இதன் விளைவாகப் பெருஞ்செல்வம் இங்கிலாந்துக்கு ஏற்றுமதி

யானது. உள்நாட்டுப் பொருளாதாரம் நலிந்தது.

1769-70 காலகட்டத்தில் பஞ்சம் ஏற்பட்டபோது கிழக்கிந்திய கம்பெனி உதவ மறுத்தது. ஒரு கோடி மக்கள் செத்து மடிந்தனர்.

இப்புத்தகம் ஐரோப்பிய அரசுகளின் மூன்று நூற்றாண்டு கால இந்திய ஆதிக்கத்தை மறுபரிசீலனை செய்கிறது. வழக்கமாக நாம் அறிந்திருக்கும் மென்மையாக மொழியப்படும் வரலாற்றை புரட்டிப்போடுகிறது.

சிறில் அலெக்ஸ்

ராய் மாக்ஸமின் முந்தைய நூலை ‘உப்பு வேலி’ என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தவர்;

தொடர்புக்கு: cyril.alex@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x