Published : 10 Jan 2017 11:14 AM
Last Updated : 10 Jan 2017 11:14 AM

வாசிப்பு வழிகாட்டி | தமிழில் மருத்துவ நூல்கள் - டாக்டர் ஜி.ராமானுஜம்

பொதுமக்களுக்கு மனித உடலைப் பற்றியும் நோய்களைப் பற்றியும் தகவல்களை மருத்துவத் துறை சார்ந்த நிபுணர்கள் எழுதிய நல்ல நூல்கள் தமிழில் வந்துள்ளன. 'உச்சி முதல் உள்ளங்கால் வரை' என்ற புத்தகம் பல்வேறு மருத்துவ நிபுணர்கள், தோல், கண், சிறுநீரகம் போன்ற பல உறுப்புகளின் செயல்பாடுகள் மற்றும் நோய்கள், அவற்றின் அறிகுறிகள், சிகிச்சைகள் போன்றவற்றைப் பொதுமக்களுக்குக் கேள்வி - பதில் முறையில் விளக்குகிறது.

அதுபோல டாக்டர் கணேசனின் 'ஏன் தெரியுமா?', டாக்டர் காட்சனின் 'பதின் பருவம்: புதிர்பருவமா?' போன்று சமீப காலத்தில் 'தி இந்து'வில் வெளிவந்த பல்வேறு நல்ல மருத்துவக் கட்டுரைகள் நூல் வடிவம் பெற்றுள்ளன. இவை நோய்களையும் உடல் இயக்கத்தையும் புரிந்துகொள்ள உதவுகின்றன. 'டாக்டர் இல்லாத இடத்தில்', 'மனநல மருத்துவர் இல்லாத இடத்தில்'போன்ற புத்தகங்கள் மிகவும் அத்தியாவசியமானவை. இதுபோல் புகழ்பெற்ற மேயோ க்ளினிக்கின் கையேடுகளும் தமிழில் வந்துள்ளன.

மருத்துவம் என்பது வெறும் நோயுடன் தொடர்புடையது மட்டுமல்ல. அது வாழ்க்கை முறையோடு தொடர்புடையது. அவ்வகையில், டி.கே.வி. தேசிகாச்சாரியார் எழுதிய 'உடலே உன்னை ஆராதிக்கிறேன்' என்னும் புத்தகம் யோகாசனம் மட்டுமன்றி, கீழையியல் வாழ்க்கை முறை பற்றியும் விவரிக்கும் முக்கியமான நூல். அது போன்றே கு.சிவராமனின் 'ஆறாம் திணை' நம்முடைய பாரம்பரிய வாழ்க்கை முறை சார்ந்த அறிவின் சாராம்சமாக விளங்குகிறது.

அறிவியல்ரீதியாக மருத்துவத்தைப் பொதுமக்களுக்கு விளக்கும் வகை நூல்கள் மருத்துவத்தில் மிகப் பிரபலம். தமிழில் சுஜாதாவின் 'தலைமைச் செயலகம்' மனித மூளையின் அதிசயங்களை அறிமுகப்படுத்தும் நல்ல நூல். மருத்துவத் துறை மூளை, மனம் போன்றவற்றின் அற்புதங்களை விளக்குவதில் தலைசிறந்தவரான வி.எஸ். ராமச்சந்திரனின் 'உருவாகும் உள்ளம்' (தமிழில்: ஆயிஷா நடராஜன்) முக்கியமான நூல்.

இலக்கியத்திலும் நோய், மருத்துவம் பற்றிய படைப்புகள் நமது புரிதலை விரிவாக்குகின்றன. தாராசங்கர் பானர்ஜி யின் 'ஆரோக்கிய நிகேதனம்' மாறுபட்ட மருத்துவ முறைகளின் தத்துவச் சிக்கல்களையும் , எம்.வி. வெங்கட்ராமின் 'காதுகள்' மனப்பிறழ்வால் எழும் மாயக் குரல்களின் வெளிப்பாடுகளையும், எஸ். ராம கிருஷ்ணனின் 'துயில்' நோயுற்றவர்கள் நோயை எதிர்கொள்வதையும் கலைப் பாங்கில் வெளிப்படுத்தும் முக்கியமான நூல்கள்.

- டாக்டர் ஜி.ராமானுஜம்,மனநல மருத்துவர் 'நோயர் விருப்பம்' என்ற நூலின் ஆசிரியர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x