Published : 21 Dec 2013 12:00 AM
Last Updated : 21 Dec 2013 12:00 AM

நிகழ்ந்ததும் நிகழாததும்

கன்னட பக்தி இலக்கியத்தில் தவிர்க்கவியலாத பெயர்

அக்க மகாதேவி. 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அக்கா மகாதேவி, சைவ பக்தி மரபில் வந்தவர், சிவனைக் கணவனாக ஏற்றுக்கொண்டு கவிதைகள் புனைந்தவர். மனிதக் காதலை நிராகரித்து தீராக்காதலோடு இறைவனைக் கண்டடைய முனைபவை மகாதேவியின் கவிதைகள்.

அது லிங்கம் என்று நான் சொல்லவில்லை

அது லிங்கத்துடனான இணைதல் என்று நான் சொல்லவில்லை

அது ஒற்றுமை என்று சொல்லவில்லை

அது இசைவு என்று சொல்லவில்லை.

அது நிகழ்ந்துவிட்டது என்று நான் சொல்லவில்லை.

அது நிகழவில்லை என்றும் சொல்லவில்லை.

அது நீ என்று சொல்லவில்லை.

அது நான் என்றும் சொல்லவில்லை.

சென்ன மல்லிகார்ஜுனாவின்

லிங்கத்துடன் இணைந்த பிறகு

நான் எதுவும் சொல்லவில்லை.

என்ற கவிதை அவரது ஒட்டுமொத்தப் படைப்புகளில் கவிந்திருக்கும் கவித்துவ அமைதிக்கு ஓர் எடுத்துக்காட்டு.

பக்தி இலக்கிய மரபில் வந்த பெரும்பாலான பெண் கவிஞர்கள் போலவே திருமண பந்தத்தில் அமைதி அடையாதவராக இருந்தார் அக்க மகாதேவி. ஜைன சமூகத்தைச் சேர்ந்த அவரது கணவர் கௌசிகன் பெரும் செல்வந்தராக இருந்தார். ஆனால் வசதியான வாழ்க்கையை நிராகரித்து தேசாந்திரியாகத் திரிந்து சிவன் மீதான பாடல்களை இயற்றி வாழ்க்கையைக் கழித்தார் அக்க மகாதேவி.

காதலின் மகத்தான பாதைகளைப் பாருங்கள்.

நீங்கள் ஒரு அம்பை எய்தினால்

அதை இறகு தெரியாத வண்ணம்

மண்ணில் ஊன்றுங்கள்

நீங்கள் ஒரு உடலை அணைத்தால்,

எலும்புகள் உடைந்து நொறுங்க வேண்டும்.

பற்ற வைத்தால்

அது மறைய வேண்டும்.

அப்புறம் காதல் என்றால்

எனது கடவுளின் காதல் மட்டுமே.

என்று தீவிரமாக எழுதிய அக்க மகாதேவி தான் வாழ்ந்த காலத்தில் மாற்றத்திற்கான குறியீடாகவும் இருந்தார். குறிப்பாக, அவரைப் பெண்களின் முன்னேற்றத்திற்கான குறியீடாகப் பார்க்கிறார்கள் வரலாற்றாய்வாளர்கள். தொடர்ந்து பல கூட்டங்களில் கலந்துகொண்டு பக்தி பற்றியும் கல்வி பற்றியும் தர்க்கங்களில் அவர் ஈடுபட்டார்.

அக்க மகாதேவியின் வாழ்க்கையை மூன்று கட்டங்களாக பிரிக்கலாம். முதல் கட்டத்தில் ஆசைகளைத் துறந்தவராகவும், இரண்டாம் கட்டத்தில் விதிகளை மறுப்பவராகவும் மூன்றாம் கட்டத்தில் சென்ன மல்லிகார்ஜுனாவை நோக்கிய பயணத்தில் ஈடுபடுபவராகவும் இருக்கிறார்.

தங்களது ஆடைகள் அவிழும் போது

ஆண்களும் பெண்களும் வெட்கப்படுகிறார்கள்.

உயிர்களின் கடவுள்

முகமில்லாமல் மூழ்கியிருக்கும் போது

நீங்கள் எப்படி வெட்கப்படலாம்?

உலகமே கடவுளின் கண்ணாக இருந்து

பார்த்துக்கொண்டிருக்கும்போது

நீங்கள் எதை மூடி மறைக்க முடியும்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x