Published : 10 May 2017 10:53 AM
Last Updated : 10 May 2017 10:53 AM

திசையில்லாப் பயணம் 5: இதற்காகவா தடைசெய்வது?

சென்னையில், 22 ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் திடீரென்று பரபரப்பு, பிள்ளையார் பால் குடிக் கிறார் என்று! எங்கெல்லாம் பிள்ளையார் கோயில் இருந்ததோ, அங்கெல்லாம் மக்கள் கூட்டம். இந்தச் செய்தி முக நூல், வாட்ஸ்அப் இல்லாத அந்தக் காலத்தில் காட்டுத் தீயைப் போலப் பரவியது.

நான் எப்போதுமே ஒரு kill-joy. எத்தனையோ பேர் கூப்பிட்டும் நான் போய் அதைப் பார்க்கவேயில்லை. ஆனால், திராவிடர் கழகத் தலைவர் தோழர் வீரமணி ‘இந்த விவகாரத்தை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு விண்ணப்பம் வைத்தார். நீதி அரசர்களின் தலை சுற்றியது. இந்த உலகம் சம்பந்தப்பட்ட நடப்புகளை அவர்களால் விசாரிக்க முடியுமே யன்றி, இவ்வுலகத்துக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளைப் பற்றித் தீர்ப்பு சொல்லத் தங்களுக்கு அதிகாரம் இருக்கிறதா என்று அவர்களுக்குத் தெரியவில்லை. ‘இது மக்களின் நம்பிக்கையைப் பொறுத்த விஷயம்’ என்று சொல்லி தோழர் வீரமணியின் வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டது நீதிமன்றம்.

19-ம் நூற்றாண்டில் தெய்வீக சம்பந்தமான வழக்கு ஒன்று ஆங்கில நீதிபதி முன் வந்தது. ‘தெய்வ அருளால் பாடப்பெற்றது என்று சொல்லி, ஒரு பாடல் தொகுதியை ‘திருவருட்பா’ என்று பெயரிட்டு அழைப்பது தெய்வ நிந்தனை ஆகாதா? அந்தப் பாடல்கள் யாப்பமைதிக்கு இசைந்தனவா’ என்பதும்தான் வழக்கு.

வழக்குத் தொடுத்தவர் யாழ்ப்பாண நல்லூர் தவத்திரு ஆறுமுக நாவலர். குற்றம் சாட்டப்பட்டவர் வள்ளலார் இராமலிங்க அடிகள்.

ஆங்கில நீதிபதி யாப்பிலக்கணம் படித்தது இல்லை. சைவ சித்தாந்தம் பற்றியும் அவருக்கு எதுவும் தெரி யாது. இந்த அரும்பெரும் நாட்டைக் காலனி ஆட்சிக்கு உட்படுத்திய தம் மூதாதையரை நொந்துகொண்டு, நீதிமன்றத்தில் தம் இருக்கையில் அமர்ந்தார்.

நாவலர் ஏற்கெனவே வந்து தம் இருக்கையில் அமர்ந்திருந்தார். சிறிது நேரத்துக்குப் பிறகு, வள்ளலார் சாந்தம் ததும்பும் முகத்துடன், தூய வெண் உடையில் அவைக்குள் நுழைந்ததும், அவரைக் கண்ட மாத்திரத்திலே நீதிமன்றத்தில் இருந்த அனைவரும் தன்னிச்சையாக எழுந்து நின்றனர். நாவலரும் எழுந்து வள்ளலாருக்கு மரியாதை செய் வதைக் கண்ட ஆங்கில நீதிபதி, ‘‘இவை அருட்பாக்கள்தாம்; சந்தேகமில்லை!’’ என்றார்

சட்டம், தெய்வீக விஷயங்களை மட்டுமில்லை; இலக்கிய விவகாரங்களையும் விசாரித்து வந்திருக்கிறது.

இங்கிலாந்தில், 1960-ல் நீதிபதி பிரின் (Justice Byrne) முன்பாக, இலக்கியம் சம்பந்தமான ஒரு வழக்கு வந்தது. டி.எச். லாரன்ஸ் எழுதியிருந்த ‘லேடி சாட்டர்லீஸ் லவர்’ என்ற புத்தகத்தை ஆசிரியர் எழுதியிருந்தவாறே பிரசுரம் செய்யலாமா? அது உன்னத இலக்கியமா? அல்லது ஏற்கெனவே தடை செய் யப்பட்ட பகுதிகளுடன் தொடர்ந்து பிர சுரிக்க வேண்டுமா என்பதுதான் வழக்கு. 1929-ல் டி.எச்.லாரன்ஸ் காலமான பிறகு, 31 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி ஒரு வழக்கு.

லாரன்ஸ் உயிரோடு இருந்தபோது அரசாங்கத்தால் ‘சென் ஸார்’ செய்யப்பட்டிருந்த நாவலைத்தான் அவரால் பிரசுரிக்க முடிந்தது. இப்போது நீதிமன்றத்தின் முன்பு இருந்த கேள்விகள் என்னவென்றால், ‘அந்த நாவல் ஓர் உன்னதமான இலக்கிய நூல்தானா? அந்த நாவலில் தடை செய்யப்பட்டிருந்த பகுதிகள் நாவலுக்கு சிறப்பு சேர்க்கும் அம்சங்களா?’ என்பவைதாம்.

அந்நாவலில் 30 இடங்களில் பால் சேர்க்கை குறித்த ஆங்கில நாலெழுத்து வார்த்தை இடம்பெற்றிருந்தது. உடலுறவு சித்தரிப்பு வெளிப்படையா கவே கூறப்பட்டிருந்தது. ஓரினச் சேர்க்கை பற்றியும் சில குறிப்புகள் அதில் உண்டு.

நீதிமன்றத்தின் முன் நின்ற கேள்வி அவை ‘ஆபாசமானவையா?’ என்பது இல்லை. நாவலின் இயல்பான தன்மைக் கும், இலக்கியச் சிறப்புக்கும் இந்த வருணனைகள் உதவுகின்றனவா? இவை இந்நாவலுக்குத் தேவையான இன்றிய மையாத அம்சங்களா? நாவலைப் படிக்கும்போது, இந்தச் சித்தரிப்புக்கள் தனித்து நின்று, நாவல் வாசிப்பு கவனத்தை வேறு திசையில் திருப்பி விடுகின்றனவா போன்ற விமர்சன விசாரணைகள்தான்.

க்ரஹாம் ஹோ சொன்னார்: ‘‘நம் இலக்கிய மனோபாவங்களின் அடிப்படையே ‘செக்ஸே குற்றம்’ என்ற கிறிஸ்துவ சமயம் சார்ந்த ‘மூலப் பாவ’க் கோட் பாட்டின் (The concept of original sin) விளைவு. மனத் தடைகள் ஏதுமின்றிப் படிக்கும்போதுதான் லாரன்ஸ் எப்பேர்ப்பட்ட இலக்கிய மேதை என்று நமக்குப் புரியும். நாவலின் அடிப்படைக் கருத்து ஆண் - பெண் உறவு, கணவன் – மனைவி உறவு போன்ற, ஸ்தாபனரீதியாக இறுகி விட்ட கருத்துகளை மறுவிசாரணைக்கு உள்ளாக்குவதுதான்!’

இதற்கு முன்பு இவ்வளவு விரிவாக, ஆழமாக இலக்கியம் எங்குமே விவாதிக்கப்படவில்லை என்றார்கள். ஒருவேளை, நம் கடைச் சங்க காலத்தில் விவாதிக்கப்பட்டிருக்கக்கூடும். இறைவ னின் திறக்கப்பட்ட நெற்றிக் கண்ணே இதற்குச் சான்று. மேற்சொன்ன விசாரணைக்குப் பிறகு தடை நீங்கி டி.எச். லாரன்ஸின் மூல வடிவமே பிரசுர மாயிற்று. ஆனால், டி.எச்.லாரன்ஸ்தான் இல்லை!

நம் இந்திய மரபில் நமக்கு செக்ஸைப் பொறுத்தவரையில் எந்த விதமான குற்ற மனப்பான்மையும் இருந்ததாகத் தெரியவில்லை. நம்முடைய இலக்கியப் பாரம்பரியம் மனத் தடையற்றது. அரசாங் கத் தடை ஏதுமின்றி இலக்கியத் தரமற்ற ஆபாசங்கள் தாமாவே வழக்கொழிந்து போயிருக்க வேண்டுமென்று தெரிகிறது.

ஆஸ்கார் ஒயில்டு சொல்வதைப் போல், ‘‘நல்ல அறநூல் என்றோ, தீய அறநூல் என்றோ எதுவுமே கிடையாது. நன்றாக எழுதப்பட்ட நூல், மோசமாக எழுதப்பட்ட நூல் என்றுதான் இருக்கிறது!’’

ஜேம்ஸ் ஜாய்ஸ் எழுதிய ‘யுலிஸிஸ்’ என்ற நாவல் தடைக்குள்ளாகி, பிறகு தடை நீக்கம் செய்யப்பட்டபோது, அமெரிக்க உயர் நீதிமன்ற நீதிபதி சொன்னாராம்: ‘‘இந்த நூல் ஏன் தடை செய்யப்

பட்டது என்றே எனக்குப் புரியவில்லை. நான் படித்துப் பார்க்க முயன்றேன். மிக முனைப்பாக எழுதப்பட்ட கலை வடிவத்தாலான நூல் இது. பாதிப் புத்தகம் படித்து முடித்தவனுக்கே விருது கொடுக்கலாம் என்று தோன்றுகிறது. புரியவில்லை என்பதற்காகவா தடை செய்யப்பட வேண்டும்?’’

- பயணம் தொடரும்… | எண்ணங்களைப் பகிர: parthasarathyindira@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x