Last Updated : 08 Apr, 2017 09:32 AM

 

Published : 08 Apr 2017 09:32 AM
Last Updated : 08 Apr 2017 09:32 AM

நினைவின் இசை

இசைக் கலைஞர்களைப் பற்றியோ அவர்களின் ஆசாபாசங்களைப் பற்றியோ நம்மிடையே இருக்கும் ஆவணங்களும் பதிவுகளும் வெகு குறைவு. எழுத்தில் ஆர்வம் இருப்பவர்கள் இசை குறித்து எழுத மாட்டார்கள். இசைக் கலைஞர்களுக்கோ எழுத்தில் ஆர்வம் இருக்காது. செவ்வியல் இசையின் மேன்மையைக் கதையின் போக்கில் ஆழமாகப் பதிவுசெய்த பெருமை தி. ஜானகிராமன், கு. அழகிரிசாமி போன்ற சிலருக்கே உண்டு. இதைப் போன்றேநாட்டார் கலைகளின் சிறப்பை மிகவும் நுட்பமாகத் தம்முடைய கட்டுரைகளில் பதிவு செய்திருக்கும் பெருமைக்கு உரியவராக நம்மிடையே விளங்குகிறார் கி. ராஜநாராயணன்.

டி.என்.ஆரின் நாகசுரத்தில் இரு துளைகள்

நாகசுர சக்கரவர்த்தி டி.என்.ராஜரத்தினம், விளாத்திகுளம் சுவாமிகள், காருகுறிச்சி அருணாசலம் ஆகிய இசை மேதைகளுடன் நெருங்கிப் பழகியதன் மூலம், அந்த மேதைகளின் தனிப்பட்ட குணநலன், அவர்களின் நம்பிக்கைகள், சம்பிரதாயங்கள், வாசிக்கும் முறை, வாத்தியத்தை கச்சேரிக்கு எப்படி (தயார்ப்படுத்துகிறார்கள்) `தோது’படுத்துவார்கள்? சீவாளியை எப்படிப் பதப்படுத்துவார்கள்? டி.என். ராஜரத்தினம் நாகசுரத்தில் இரண்டு துளைகள் இருந்தது ஏன்? என்பது போன்ற பல நுணுக்கமான தகவல்களைக் கட்டுரையின் போக்கில் வெகு இயல்பாக சுவாரஸ்யம் குறையாமல் `சங்கீத நினைவலைகள்’ என்னும் இந்தத் தொகுப்பில் பதிவுசெய்திருக்கிறார் கி.ரா.

வரமும் சாபமும்

எழுத்தாளர் கு. அழகிரிசாமியோடு கொஞ்ச காலத்துக்கு இசை கற்றுக்கொண்டதையும் பின்னாளில் தன்னைப் பற்றியே ஒரு கீர்த்தனையை அவர் எழுதியதையும் சுவையோடு நினைவுகூர்ந்திருக்கிறார் கி.ரா. கச்சேரி தவிர்த்துத் தனிப்பட்ட முறையில் இசை மேதைகளின் வாசிப்பை நேரடியாக அனுபவித்த சுகத்தை `நாங்கள் பாக்கியவான்கள்’ என்று போற்றும் அதே நேரத்தில், இந்த அருமையான தருணங்களை ஆவணப்படுத்த எந்த விதமான தொழில்நுட்ப வசதிகளும் அந்நாளில் இல்லையே என சபித்தும் தன்னுடைய வருத்தத்தைப் பதிவு செய்திருக்கிறார். பிரபல ஹிந்துஸ்தானி பாடகர் ரோஷனா பேகம் எட்டையபுரம் வந்திருந்தபோது விளாத்திகுளம் சுவாமிகளோடு சேர்ந்து கி.ரா. அவரைச் சந்தித்தார். அப்போது ஹிந்துஸ்தானி ராகம் ஒன்றில் பேகம் பாடிய ஆலாபனையைக் கேட்டு ரசித்ததுடன், அதே ராகத்தை கர்னாடக இசையின் கமகங்களோடு விளாத்திகுளம் சுவாமிகள் பாடியதைக் கேட்டு, “உங்களின் இசையில் என்னுடைய குருவைப் பார்த்தேன்” என்று வியந்த தருணம் அற்புதமானது. நூறு பிரசங்கங்களுக்கு இணையானது ஒரு கலை நிகழ்ச்சி என்பதை நிரூபித்த பிச்சைக்குட்டியின் வில்லுப்பாட்டுத் திறமை, ரசிகைகளின் வருகையையும், கறார் விமர்சகர்களின் வருகையையும் கண் ஜாடையிலேயே பரிமாறிக்கொள்ளும் நாகசுரக் கலைஞர்கள், காடல்குடி ஜமீன்தாராக இருந்தாலும் இசைக்காகவே எல்லாவற்றையும் துறந்த விளாத்திகுளம் சுவாமிகளின் இசை மேன்மை என கி.ரா.வின் மனப்பதிவுகள் அனைத்தும் இந்நூலில் இசைப் பதிவாய் எதிரொலிக்கின்றன.

- வா. ரவிக்குமார், தொடர்புக்கு: ravikumar.cv@thehindutamil.co.in





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x