

இந்தியப் பொருளாதார வரலாறு - மார்க்சியப் பார்வை வே. மீனாட்சி சுந்தரம்
விலை ரூ.130. பரிசல் புத்தக நிலையம் வெளியீடு, சென்னை-04. 93828 53646.
தீக்கதிர் முன்னாள் ஆசிரியரான நூலாசிரியர் கல்லூரியில் அறிவியல் படித்தேன், பொருளியலைப் படிக்கவில்லை என்ற என்னுரையுடன் தொடர்கிறார். அவரது தொழிற்சங்க அனுபவம், வெளியுலகப் பழக்கம், மற்றும் நெடிய வாசிப்பு போன்றவை இந்தப் புத்தகத்தில் பிரதிபலிக்கின்றன. பணம், வர்த்தகம், தொழில் இம்மூன்றின் வரலாற்றுப் பயணத்தைப் பற்றி நூல் பேசுகிறது. நாணயங்களை செலாவணியாக வெளிநாட்டவர்கள் கருதியபோது அதையும் சேமிப்புக்குரிய சொத்தாக இந்தியர்கள் கருதியதை ஆசிரியர் அழகாகக் குறிப்பிட்டிருக்கிறார். சரக்குக்கு இருவிதமான மதிப்புகள். ஒன்று பயன்பாட்டு மதிப்பு, மற்றது பரிவர்த்தனை மதிப்பு என்று பொருளியலை எளிமையாகப் புரிய வைக்கிறார்.
முன்னோடிகள் ஆளுமைகள் சந்திப்புகள், சூரியசந்திரன், விலை:ரூ.250/-
எழில் பதிப்பகம், சென்னை-600015, 9003258983
17 ஆண்டுகளுக்கு முன்னால், பத்திரிகையாளர் சூரியசந்திரன் ‘புத்தகம் பேசுது’ இதழுக்காக எடுத்த பலதரப்பட்ட 20 ஆளுமையாளர்களின் நேர்காணல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
மறைந்த எழுத்தாளர்கள் வல்லிக்கண்ணன், சு. சமுத்திரம் தொடங்கி எழுத்தாளர்கள் பிரபஞ்சன், சிவகாமி, திலீப் குமார், தியடோர் பாஸ்கரன், வரலாற்றாய்வாளர் ஆ.இரா. வேங்கடாசலபதி, கலை விமர்சகர் இந்திரன், கவிஞர் கனிமொழி உள்ளிட்டவர்களுடனான உரையாடல்கள் நூலில் இடம்பெற்றிருக்கின்றன. நூலின் உள்ளே ஒவ்வொரு எழுத்தாளரின் முழு பக்கப் படமும் இடம்பெற்றிருப்பது சிறப்பு. ஆனால் பலருக்கும் நல்ல படங்கள் இல்லை என்பது ஒரு குறை.
தமிழ் கற்பித்தல், டாக்டர் பி. இரத்தினசபாபதி, விலை ரூ.200/-
சாந்தா பப்ளிஷர்ஸ், சென்னை-600014, 044-28115618
பள்ளி, கல்லூரிகளில் பயிற்றுமொழியாகவும் இல்லாமல் தமிழ் வெளியேற்றப்படும் காலம் இது. இந்நிலையில் மாற்றம் உருவாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மொழி ஆய்வாளர்களும் தமிழறிஞர்களும் படைப்பாளிகளும் சேர்ந்தே யோசிக்க வேண்டியது அவசியம். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தின் இவ்வாண்டிற்கான இளநிலை கல்வியியல் பாடத்திட்டத்தின்படி எழுதப்பட்ட இந்நூல், ஆறு தலைப்புகளின்கீழ் தமிழ் கற்பித்தல் பற்றித் தெளிவாக விளக்குகிறது. வருங்காலத்தில் தமிழைப் பயிற்றுவிக்கும் முறைகளிலும் மாற்றம் வர வேண்டுமென்பதற்கான தொடக்கப் புள்ளிகளுள் இந்த நூலும் ஒன்று.
தேடலின் தடயம், முனைவர் சோ.ராஜலட்சுமி, விலை:ரூ.160/-
காவ்யா, சென்னை-600024, 044-23726882
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் இளம் ஆய்வறிஞர் விருது பெற்ற முனைவர் சோ. ராஜலட்சுமி எழுதிய 18 கட்டுரைகளின் தொகுப்பு நூலிது. சங்க இலக்கியம் தொடங்கி,சமகால எழுத்தாளர்களின் படைப்பாளுமை வரையான தனது தேடல்களைக் எழுத்தாக்கியுள்ளார். மொழியியல் நோக்கில் சங்க கால இலக்கியம், திருக்குறளில் பெண் குறித்த பதிவுகள் ஆகிய கட்டுரைகள் குறிப்பிடத்தக்கன.
குளத்தூர் ஜமீன் கதை, முத்தாலங்குறிச்சி காமராசு, ரூ. 175,
காவ்யா வெளியீடு, சென்னை-24, 044-23726882.
தூத்துக்குடி அருகே உள்ள குளத்தூரின் காருகாத்தார் பரம்பரையைச் சேர்ந்த ஜமீன்தார், நெல்லை நகரத்தில் வாழ்ந்து வந்ததுடன் தொடங்குகிறது கதை. நெல்லைப் பகுதியில் மறவர், நாயக்கர், பிராமணர், தாழ்த்தப்பட்டோர், நாடார் என்று பல சமுதாயத்தைச் சேர்ந்த ஜமீன்தார்களும் வாழ்ந்துள்ளனர் என்ற தகவல் புதிது. நூலாசிரியர் பேருந்து நடத்துநர், பத்திரிகை நிருபர், துணுக்கு எழுத்தாளர், நூலாசிரியர், நாடகாசிரியர், திரைப்பட நடிகர் என்று பல பாத்திரங்களை வகித்தவர் என்பதால் நிறைய சுவாரசியங்கள்.