Published : 14 Aug 2016 01:07 PM
Last Updated : 14 Aug 2016 01:07 PM

விடுபூக்கள்: இருளில் ஒளி அளிக்கும் புத்தகம்

புத்தகத்தின் பெயர்தான் ‘தி புக் ஆப் லைட்’. ஆனால் இதில் கூறப்பட்டுள்ள அனுபவங்கள் அத்தனை ஒளிகொண்டதல்ல. தந்தை, அம்மா, கணவர், மனைவி போன்ற பிரியத்துக்குரியவர்கள் வெவ்வேறு மனநோய்களால் பாதிக்கப்படும்போது ஏற்படும் வலிமிக்க அனுபவங்களைச் சொல்லும் வாக்குமூலங்களை இப்புத்தகத்தில் தொகுத்துள்ளார் ஜெர்ரி பின்ட்டோ.

இந்திய நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த 13 பேரின் சுய அனுபவங்கள் இப்புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. இருதுருவக் கோளாறால் (Bipolar Disorder) பாதிக்கப்பட்ட தந்தையைப் பற்றி சுகாந்த் தீபக் எழுதும்போது தந்தையின் பாதிப்பு கட்டுக்கடங்காமல் போனபோது குடும்பம் எத்தனை பாதிப்புக்குள்ளானது என்று எழுதுகிறார். கணவனாக வரப்போகும் ஒருவர் உளச்சிதைவால் பாதிக்கப்பட்டால் என்ன ஆகும்? அவரது பிரச்சினைகள் தெரிந்தும் திருமணத்துக்குள் போவதா? அவரைக் கைவிடுவதா?

லலிதா அய்யர் தனது அனுபவங்களை எழுதியிருக்கிறார். குடும்பம் என்ற நிறுவனமே பல மனநோய்களுக்கு இந்தியா போன்ற நாடுகளில் காரணமாக இருக்கிறது என்ற நிலையிலும், அதீத பாதிப்புகளுக்கு உள்ளாகும் நிலையில் உள்ள ஒருவருக்கு அடைக்கலமாகவும் குடும்பம்தான் குறைந்தபட்சமாக இருக்கிறது என்று நினைவூட்டுவதாக இப்புத்தகம் உள்ளது என்கிறார்கள் விமர்சகர்கள். தி புக் ஆப் லைட்: வென் எ லவ்ட் ஒன் ஹேஸ் எ டிபரண்ட் மைண்ட் (The Book of Light: When a Loved One Has a Different Mind) புத்தகத்தை ஸ்பீக்கிங் டைகர் பதிப்பகத்தினர் வெளியிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x