நூல் நோக்கு: பாசாங்கில்லாத பாட்டுக்களம்

நூல் நோக்கு: பாசாங்கில்லாத பாட்டுக்களம்

Published on

உழைக்கும் மக்களின் பண்பாட்டையும் பழக்க வழக்கங்களையும் பதிவு செய்பவை நாட்டுப்புற இலக்கியங்கள் விரைந்தோடும் வாழ்வுச் சுழலில் இன்னமும் ஆவணப்படுத்தப்படாமல் வாய்மொழியாகவே இருக்கும் நாட்டுப்புற இலக்கியங்கள், சில தனி மனிதர்களின் முயற்சியினாலேயே ஓரளவுக்கேனும் பதிவாகியுள்ளன. பயிர்ச்பச்சை வாசம் வீசும் கிராமத்துக் காற்றோடு கலந்திருக்கும் நாட்டுப்புறப் பாடல்கள் அச்சில் ஏறாமல் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவரும் நிலையில், பேராசிரியரும் நாட்டுப்புற ஆய்வாளருமான தே. ஞானசேகரன், தான் பிறந்த ஊரான வத்தலக்குண்டு பகுதியில் பாடப்பட்டுவரும் நாட்டுப்புறப் பாடல்களைத் தேடித்தேடிச் சேகரித்துள்ளார்.

அம்மாயி, அம்மத்தா, அம்மா, அத்தை என தனது உறவுகளில் பலரும் பாடிய பாசாங்கில்லாத நாட்டுப்புறப் பாடல்களைத் தாலாட்டு, தொழில், காதல், ஒயிலாட்டம், ஒப்பாரி என பல தலைப்புகளின் கீழ் தொகுத்துள்ளார். “காக்கா கதிரறுக்க / கட்டெறும்பு சூடடிக்க / மாமன் படியளக்க / மச்சினன்மார் கோட்டை கட்ட..” என தாயொருத்திப் பாடும் தாலாட்டில் செழித்தோங்கி நிற்கிறது நாட்டுப்புற இலக்கிய வளமை.

-மு. முருகேஷ்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in