Last Updated : 27 May, 2017 08:49 AM

 

Published : 27 May 2017 08:49 AM
Last Updated : 27 May 2017 08:49 AM

நூல் நோக்கு: அகிம்சையின் மாவீரர்

ஆங்கிலத்தில் ராஜ்மோகன் காந்தி எழுதிய கான் அப்துல் கபார்கானின் வாழ்க்கை வரலாற்று நூலைத் தழுவி டாக்டர் ச. பாண்டியன் எழுதிய நூல் இது. ஒருங்கிணைந்த இந்தியாவில் ஹசாரா எனும் மாவட்டத்தில் உள்ள அஷ்டநகர் எனும் பகுதியில் பிறந்தவர் கான் அப்துல் கபார்கான். பொதுப் பள்ளிகளுக்குப் பிள்ளைகளை அனுப்பக் கூடாது என்ற உள்ளூர் முல்லாக்களின் எதிர்ப்பையும் மீறி கபார்கானின் தந்தை அவரைப் பொதுப் பள்ளிக்கு அனுப்பி வைத்தார். அங்கு சமுகத்தின் மீதான பார்வையை விரிவுபடுத்திக்கொள்ள உதவியவர் ஆசிரியர் விக்ரம்.

ஆசிரியர் விக்ரம் மீது கொண்ட பற்றே கான் அப்துல் கபார்கானைப் பொதுநலப் பணியில் ஈடுபடச் செய்துள்ளது. அறியாமையில் மூழ்கியிருந்த தன்னுடைய பட்டானியர் சமுகத்தினருக்கு நற்பண்புகளை வளர்க்க விரும்பிய கபார்கான் அவர்களுக்கான பள்ளிகளைத் திறந்தார். பட்டானிய மக்கள் மீது ஆங்கிலேயர் அரசு இழைத்த கொடுமைகளைக் கண்டு கபார்கான் கொதித்துப் போனார். ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தையும் கொடுமைகளையும் எதிர்க்க விரும்பிய கபார்கான் எங்கெல்லாம் வாய்ப்பு இருக்கிறதோ அங்கெல்லாம் சென்று ஆங்கிலேயே அரசுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தார். இதன் காரணமாக தன்னுடைய இருப்பத்தாறாவது வயதிலேயே கபார்கான் தம் மக்களின் தலைவராக விளங்கினார்.

எல்லையோரப் பகுதிகளில் ஆங்கிலேய அரசு கொண்டுவந்த ரௌலட் சட்டம் உட்பட பல்வேறு சட்டங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர் கபார்கான். அகிம்சை முறையில் போராட வேண்டும் என்ற காந்தியடிகளின் அழைப்பு அவரைக் கவர்ந்தது. காந்தியின் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட கபார்கான் எல்லைப்புறங்களில் இருந்த மக்களை நாட்டின் சுதந்திரத்துக்காக அகிம்சை வழியில் ஈடுபடுத்தினார். போர்க்குணத்துக்கும் மூர்க்கத்துக்கும் பேர்பெற்ற பட்டானிய மக்கள் அகிம்சைதான் உண்மையான வீரம் என்பதை உலகுக்கு நிரூபித்தனர். இந்த மாற்றத்தை ஏற்படுத்தியதன் காரணமாகவே கபார்கான் ‘எல்லை காந்தி’ என அன்போடு அழைக்கப்பட்டார்.

காந்தியைச் சந்தித்த பிறகு கபார்கான் நாட்டின் சுதந்திரத்தை வலியுறுத்தி, “சமூக வாழ்வில் அக்கறை வேண்டாமா? சொந்த வசதிகளை விட்டுத்தர தயாராக இருக்க வேண்டாமா?” என்று தன் மக்களிடையே உரையாற்றிவிட்டு ‘கடவுள் தொண்டர்கள்’ என்ற புதிய அமைப்பை உருவாக்கினார். சுதந்திரப் போராட்டத்தில் மக்களை ஒருங்கிணைப்பதில் காந்தியின் பங்கு எந்த அளவுக்கு முக்கியமாகப் பார்க்கப்படுகிறதோ, அதே அளவுக்கு எல்லைப்புற மக்களை ஒருங்கிணைப்பதில் கான் அப்துல் கபார்கானின் பங்கும் கவனிக்கப்பட வேண்டியதாகும்.

இந்திய விடுதலைக்குப் பிறகு பாகிஸ்தானில் தன்னுடைய இறுதிக் காலத்தை அவர் கழித்தார். இன்றைய இளம் தலைமுறையினர் மிக முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டிய தலைவர்களில் ஒருவர் கான் அப்துல் கபார்கான். அவரைப் பற்றிய நல்லதொரு அறிமுகம் இந்த நூல்.

மகாவீரர் எல்லை காந்தி கான் அப்துல் கபார்கான்
வாழ்வும், தத்துவமும்.
தமிழில்: எ. பாண்டியன்
விலை: ரூ.240
வெளியீடு: தக்கர் பாபா அகாடெமி, சென்னை-17
99946 26966

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x