Last Updated : 01 Jul, 2016 10:30 AM

 

Published : 01 Jul 2016 10:30 AM
Last Updated : 01 Jul 2016 10:30 AM

மவுனத்தின் புன்னகை 25: கோரா!

‘இந்தியாவில் இதுவரை எழுதப் பட்ட நாவல்களில் எது மிகச் சிறந்தது?’ என்ற கேள்வி குஷ்வந்த் சிங்க் உயிரோடு இருந்த காலத்திலேயே கேட்கப்பட்டது. அதற்கும் முன்னரும் அக்கேள்வி அவ்வப்போது எழுந்தாலும் 1980, 1990 வரை தீர்மான மாகச் சொல்ல முடியவில்லை. காரணம், ஓர் ஆய்வாளருக்கு ஓரளவு மக்கள் ஒப்புக்கொள்ளக் கூடிய அளவுக்கு இந்திய மொழிகளில் முக்கியமான இருபது, இருபத்தைந்து நாவல்களின் மொழிபெயர்ப்புகள் படித்தாராயக் கிடைத்திருக்க வேண்டும். அதற்கு மொழி பெயர்ப்புகள் வேண்டும். ஆங்கிலே யர் ஆட்சியில் முதல் சில நாவல்களில் சில பகுதிகளை ஆங்கிலேயர்களே மொழி பெயர்த்தார்கள். அவர்களுடைய நோக்கம் இலக்கிய வளர்ச்சியல்ல. மேலும் பார்க்கப் போனால் அந்த அதிகாரிகளுக்கு இந்தியர்களைக் கேலி செய்ய புதுத் தகவல்கள் கிடைக்குமா என்று கூட நினத்திருக்கக்கூடும். அவர் கள் வரை இந்தியர்கள் ஒரு புதிராக இருந்தார்கள். அலுவலகத்தில் அவர்கள் திறமையாகப் பணியாற்றினார்கள். ஆனால், அவர்கள் அந்தரங்கமாக என்ன நினைத்தார்கள், ஆட்சி பற்றி என்ன அபிப்பிராயம் கொண்டிருந்தார்கள்? அதிகாரிகள் முன் நிற்கும்போது அவர்கள் மனதில் என்ன எண்ணங்கள் ஓடுகின்றன என்பதையெல்லாம் அறிந்து கொள்ள முடியவில்லை. இந்திய மொழிகளில் வந்த நாவல்கள் மூலம் இந்திய மனதை அறிந்து கொள்ளலாம் என்று நினத்தார்கள். 1857 - 1858 புரட்சியை மிகக் குரூரமாக அடக்கி விட்டிருந்தாலும் அவர்களுக்கு உள்ளூர அச்சம் இருந்தது.

19-ம் நூற்றாண்டில் பல இந்தியர்கள் மொழிபெயர்ப்பில் ஈடுபட்டார்கள். திறமையாகவே செய்தார்கள் என்று சொல்ல வேண்டும். ஆனால் ‘வெள்ளைக் காரன் மொழிபெயர்ப்பு மாதிரி நம்மால் முடியுமா?’ என்று குறை கூறுபவர்களும் நிறையவே இருந்தார்கள்.

தாகூர் ‘கீதாஞ்சலி’ தொகுப்பை அவரே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து விட்டார். தாகூருடன் தொடர்பு கொண்டி ருந்த இங்கிலாந்து கவிஞர் யேட்ஸ், அதை சரி பார்த்தார். தாகூரின் பல சிறுகதைகள் அன்றே ஆங்கில மொழியில் படிக்கக் கிடைத்தன.

இந்தியாவிலேயே வாழ்ந்த ஓர் ஆங்கிலேயர் சில மொழிபெயர்ப்புகள் செய்தார். ‘கோரா’ நாவலையும் 1903 அளவில் அவர் மொழிபெயர்த்துவிட்டார். அதை தாகூரிடம் தந்தார். தாகூர் அதைப் படித்துவிட்டு ஒரு சொல் சொல்ல வில்லை. எங்கோ ஓர் அலமாரியில் வைத்துவிட்டார். ஆனால், 1923 அளவில் அந்த மொழிபெயர்ப்புதான் வெளியிடப் பட்டது. உடனே அது இந்தியாவின் மகத்தான நாவலாகக் கொண்டாடப்பட் டது. ஆனால், அதற்குத் தாகூரின் சம்மதம் இருந்ததா என்று ஒரு கேள்வி இருக்கத் தான் செய்கிறது. தாகூர் வெள்ளைக் காரர்களின் பாராட்டை வேதவாக்காக எடுத்துக் கொள்ளவில்லை. ‘கோரா’ நாவலையே அவர் ஒப்புக்கொண்டாரா என்றும் ஓர் ஐயம் இருக்கிறது.

தாகூருக்கு அவர் காலத்திலேயே விமர்சன எதிரிகள் உண்டு. அவர், ஒன்றும் பெரிய கவிஞர் அல்ல. உண்மை யான கவிஞர் ஜீபா நந்ததாஸ்தான் என்றார்கள். ஆனால், தாகூருக்கு உள்ள மனவிலாசம் தாஸ் கவிதைகளில் கிடைக்காது. தாகூரால் தன் கவிதைகளில் இருந்து விலகிப் பார்க்க முடியும். உருக்கம் நிறையவே இருக்கும். ஆனால், கழிவிரக்கம் இருக்காது. தாஸின் நூற்றாண்டு சென்னையிலேயே கொண்டாடப்பட்டது. தாஸ் உள்முகக் கவிஞர். தனக்குத்தானே பேசிக் கொள்வது போலிருக்கும். தாகூராக வெள்ளைக்காரன் ஒப்புதலுக்காகப் போனதாகத் தெரியவில்லை.

தாகூரின் சகபயணி என்று பிரேம் சந்த் அவர்களை சொல்லலாம். தாகூருக்கு இருந்தக் குடும்ப சூழ்நிலை பிரேம்சந்துக் குக் கிடையாது. உழைத்துச் சாப்பிட வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கை பரிதாப கரமானது. அவருடைய சித்தி அவருடன் தான் இருந்தாள். அவளுக்கும் பிரேம்சந் தின் மனைவிக்கும் எப்போதும் வாக்கு வாதம், சண்டை. இதெல்லாம் மீறித்தான் பிரேம்சந்த் அவருடைய அற்புதமான படைப்புகளை முதலில் உருதுவிலும் பின்னர் இந்தியிலும் படைத்தார். பம்பாய் சினிமாவில் இருந்தால் சுலபமாக நிறைய சம்பாதித்திருக்கலாம். அவருக்கு சினிமா மாந்தரின் பாமரத் தனம் சற்றும் ஒத்து வரவில்லை.

1937 அளவிலேயே அவருடைய சிறப் பைத் தமிழர் அறிந்திருந்தனர். ‘சேவா சதனம்’ அவர் எழுதியது. அது ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையில் தொடராக வெளி வந்தது. பிரேம்ச்ந்த் எவ்வளவோ ஆண்டு கள் முயற்சியில் ஈடுபட்டு 1936-ல் ‘கோதான்’ என்ற நாவலை எழுதி முடித் தார். அந்த ஆண்டே இறந்தும்விட்டார்.

இப்போது இந்தியாவில் இரு பெரிய நாவல்கள். இரண்டும் சமூக நிலையை யும் சமூக மாற்றங்களையும் காட்டு கின்றன. ஒன்றின் தலைவன் ஏழை விவ சாயி. இன்னொன்றின் பிரதான பாத் திரங்கள் மத்திய தர வாழ்க்கையில் அன்று நிலவிய ஆன்மிகப் பிரச்சினைகளை ஆராய்வது.

பிரேம்சந்தின் நாவல் முதலில் இந்தியர்களால்தான் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. ‘கோரா’எழுதி முடித்த உடனே ஓர் ஆங்கிலேயரால் மொழிபெயர்க்கப்பட்டாலும் இருபது ஆண்டுகள் அது வெளிவர ஆசிரியரிடம் அனுமதி கிடைக்கவில்லை. மொழி பெயர்ப்பு வெளியானபோதும் அதில் தாகூர் அதிக அக்கறை காட்டவில்லை என்று தெரிகிறது.

‘கோதான்’ நாவலைக் குஷ்வந்த் சிங் இந்தியாவின் நாவல்களில் முதமை யானது என்றார். அவரும் ஜெய்ரத்தன் செய்த மொழிபெயர்ப்பைவிட ரோடர் மால் என்ற ஆங்கிலேயர் செய்ததை உயர்ந்ததாகக் கருதினார். இத்த கைய ஒப்பீடுகள் எதிர்வினை ஆற்றிவிடு கின்றன. இந்திய மொழிபெயர்ப்பாளரை தாழ்வு மனப்பான்மையோடுச் செயல்பட வைத்து விடுகிறது..

மொழிபெயர்ப்பை ஆங்கிலேயர் செய்தார் என்பதினாலேயே அது சிறந்த தாக இருக்க வேண்டும் என்றில்லை என் பதற்கு ஓர் உதாரணம்,. 1892 அளவில் எழுதப்பட்ட ‘கமலாம்பாள் சரித்திரம்’ ஆங்கில மொழிபெயர்ப்பில் இருந்து தப்பிவிட்டது என்றிருந்தபோது ஓர் ஆங்கி லேயப் பெண்மணி அதை மொழி பெயர்த்து வெளியிடவும் செய்து விட் டாள். மிக நல்ல முன்னுரை. ஆனால், நாவலைப் பாதியாகச் சுருக்கிவிட்டாள்.

இங்கு இன்னொரு கேள்வி எழுகிறது. தமிழின் முதல் உரைநடை நாவல் என அனைவரும் ஒப்புக்கொள்ளும் ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்டது. அது எழுதப் பட்ட நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில் பல புதுப் பதிப்புகள் வெளிவந்தன.

“நீங்கள் ஷேக்ஸ்பியர் எழுதியபடி தான் இப்போது பிரசுரிக்கிறீர்களா? ஏன் இந்திய மொழிக்கு மட்டும்‘தூய்மை’ வேண்டுகிறீர்கள்?” இந்தக் கேள்வியின் நியாயத்தை நாம் புறக்கணிக்க முடி யுமா? ஷேக்ஸ்பியர் மறைந்து இருபது ஆண்டுகள் கழித்து அவருடைய நாடகங் களின் தொகுப்பு வெளியாயிற்று. இப்போது வெளியிடுபவர்கள் மாதிரிக்கு அந்தப் பழைய பதிப்பில் இருந்து ஒரு பக்கம் மட்டும் வெளியிடுவார்கள்.உண்மையில் ஆங்கில எழுத்துக்கள் நிறையத்தான் மாறிவிட்டன.

- புன்னகை படரும்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x