Published : 16 Jul 2016 09:51 AM
Last Updated : 16 Jul 2016 09:51 AM

முதலாளித்துவம், ஏகாதிபத்தியம், சோஷலிஸம்

(ஜவாஹர்லால் நேருவின் நூல்களில் இது தனிவகையானது. பிரதமராவதற்கு முன்பு நேருவின் சிந்தனைப் பரப்பையும், அவருடைய லட்சியங்களையும் புரிந்துகொள்ள உதவும் வகையில், சுதந்திரத்துக்கு முன்பு அவர் எழுதியவை மற்றும் கூட்டங்களில் பேசியவை மட்டுமே இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில இன்றைய காலகட்டத்துக்கும் அப்படியே பொருந்துவது ஆச்சரியமாக இருக்கிறது.)

நான் சோஷலிஸம் பற்றி அதிகம் பேசுகிறேன்; பெரும்பாலான என் சொற்பொழிவுகளில் ஏதாவதொரு முறையில் அதைக் கொண்டுவருகிறேன். அதற்காக சோஷலிஸத்தைப் பற்றி அதிகப் புலமையும், விஞ்ஞான முறையும் அமைந்துள்ள உரையை நான் நிகழ்த்துவதில்லை. கோட்பாட்டுரீதியிலான சோஷலிஸ்ட் என்று என்னைக் குறிப்பிட முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. சோஷலிஸத்தில் வறட்டுக் கோட்பாடுகளுக்கு இடமில்லை என்பதே என்னை அதிகமாகக் கவர்கிறது.

முதலாளித்துவம் நவீன வடிவத்தில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு உருவாயிற்று. அது தன் உற்பத்தி முறைகள் மூலம், ஏராளமான வேலையைச் செய்தது. அது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி செல்வத்தைப் பெருக்கியது. இந்தியாவில் இருக்கும் நமக்கு அதனால் ஒரு பலனும் ஏற்படவில்லை என்பது துரதிர்ஷ்டமே. ஆனால், உலகத்தை மொத்தமாக வைத்துப் பார்க்கும்போது, முதலாளித்துவம் உலகத்தின் செல்வ வளத்தைப் பேரளவில் அதிகப் படுத்தியது. உலக மக்களின் வாழ்க்கைத் தரத்தைப் பெரிய அளவுக்கு உயர்த்தியது.

முதலாளித்துவம் எப்போதுமே மோசமாக இருந்ததாக நாம் கருதக் கூடாது. ஆனால், அது தன்னுடைய கடமையை முடித்துவிட்டது. இனிமேல் அது நிறைவேற்ற வேண்டிய கடமைகள் இல்லை. முதலாளித்துவத்தில் உள்ள நல்ல அம்சங்களை மட்டும் எடுத்துக்கொண்டு, புதிய அமைப்பில் அவற்றைப் பொருத்த வேண்டும். அப்படிச் செய்தால் சமூகம் புதிய முறைகளினால் பலனடையும்.

செல்வத்தை உற்பத்தி செய்யும் பிரச்சினைக்கு முதலாளித்துவம் தீர்வு கண்டது. ஆனால், செல்வத்தை விநியோகிக்கும் பிரச்சினையை அது தீர்க்கவில்லை. இன்று என்ன நடைபெறுகிறது? ஒரு முனையில் செல்வக் குவிப்பும், மறுமுனையில் வறுமையும் தீவிரமடைவதும் ஏன்? சர்வதேசச் சண்டைகள் ஏன் ஏற்படுகின்றன? புதிய ரக ஏகாதிபத்தியம் என்பது என்ன? ஆகிய பிரச்சினைகளை நாம் புரிந்துகொள்ள சோஷலிஸப் பகுப்பாய்வு மட்டுமே உதவுகிறது.

ஏகாதிபத்தியத்தின் நவீன வளர்ச்சிக்கு, மூலப்பொருட்கள் மற்றும் சந்தைகளின் தேவைகளுடன் தொடர்பிருக்கிறது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், பிரெஞ்சு ஏகாதிபத்தியம், ஜப்பானிய ஏகாதிபத்தியம் என்று பல ஏகாதிபத்தியங்கள் இருந்தாலும் அவை சாராம்சத்தில் ஒரே ரகத்தைச் சேர்ந்தவை. ஆனாலும், ஒன்றுக்கொண்டு அடிக்கடி சண்டை போடுகின்றன. முதலில் அவை உலகத்தைப் பிரிக்க முயற்சி செய்தன. மூலப்பொருட்களையும், சந்தைகளையும் தேடியபோது சண்டையிட்டுக்கொண்டன. முதலாளித்துவத்தின் அடிப்படை என்பது தொடர்ச்சியான உள்நாட்டுச் சண்டை மட்டுமின்றி மாபெரும் சர்வதேசச் சண்டையும் ஆகும். இவை அனைத்தும் உலகத்தில் இன்றுள்ள முதலாளித்துவ அமைப்பின் தவிர்க்க முடியாத விளைவுகள்.

இந்தியாவைப் பொறுத்தவரை நாம் தனித்தன்மை மிக்க நிலையில் இருக்கிறோம். பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவுக்கு வந்தது, இந்தத் தனித்தன்மையான நிலைக்கு முக்கியமான காரணம். அவர்களின் வருகை மேற்கிலிருந்து பல தாக்கங்களையும் கொண்டுவந்தது. இந்தியாவில் முதலாளித்துவம் இன்னும் முழுமையாக வளர்ச்சியடையவில்லை. அது குழந்தைப் பருவத்தில் இருக்கிறது என்று கூறலாம்.

ஆனால், முதலாளித்துவம் உலக நிகழ்வு. நாம் ஒரு நாட்டு முதலாளித்துவத்தையும், மற்றொரு நாட்டு முதலாளித்துவத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது. எனவே, ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் முதலாளித்துவம் நசிந்துகொண்டிருக்கிறது என்றால் அதனால் இந்தியாவிலும் வெற்றிபெற முடியாது என்பது தெளிவு. ஒருபுறம் வளர்ச்சி என்றால், மறுபக்கத்தில் வறுமை மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் என்னும் மாபெரும் பிரச்சினை இருக்கிறது. பரந்த திட்டமிடும் அமைப்பு, பெரிய மற்றும் சிறிய தொழில்களின் வளர்ச்சி, சமூக நல உதவி வளர்ச்சி, விவசாய வளர்ச்சி, நிலச்சட்டங்களின் அமைப்பை மொத்தமாக மாற்றுதல் போன்றவை இல்லாமல் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. திட்டமிடுதல் என்னும் மாபெரும் அமைப்பு நமக்கு அவசியம். சோஷலிஸம் மட்டுமே அதை ஏற்படுத்த முடியும்.

சட்டங்களை நிறைவேற்றுவதன் மூலம் ஒரு நாட்டை சோஷலிஸ நாடாக்க முடியாது. பாதையில் உள்ள தடைகளை அகற்றுவதற்குத்தான் சட்டங்கள் தேவைப் படுகின்றன. ஆனால், அரசை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். நாம் சோஷலிஸத்தை விரும்பினால் அதற்கு முதலில் மக்களைத் தயார் செய்ய வேண்டும். ஆக, இது கற்பித்தல் பற்றிய பிரச்சினையாக இருக்கிறது. இறுதி லட்சியம் வெகுதூரத்தில் இருக்கிறது. அதை திடீரென்று அடைந்துவிட முடியாது.

- நூலிலிருந்து...

ஜவஹர்லால் நேரு: போராட்ட காலச் சிந்தனைகள்

விலை: 90

தொகுப்பாளர்: அர்ஜுன் தேவ், தமிழில் நா.தர்மராஜன்

நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா

ஏ-5, கிரீன் பார்க், புதுதில்லி 110016.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x