

அரை நூற்றாண்டுக்கும் மேலாக எழுதிவந்த சுந்தர ராமசாமியின் ஆக்கங்களாகச் சுமார் ஐயாயிரம் பக்கங்கள் நம் முன் விரிந்திருக்கின்றன. சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள், விமர்சனங்கள், இதர கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், பத்திகள், கேள்வி - பதில்கள், அனுபவப் பதிவுகள், உரைகளின் பதிவுகள் என எழுத்தின் பல்வேறு வகைமைகளும் காணக் கிடைக்கின்றன. இத்தனையும் சேர்ந்து அவரது பங்களிப்பாக நமக்கு விட்டுச் சென்றிருப்பது என்ன?
கவிதைகள் உள்ளிட்ட அவரது படைப்புகள் படைப்பைத் தீவிரமான செயல்பாடாகக் கருதிச் செயல்பட்ட ஒரு படைப்பாளியின் பயணத் தடங்கள். தீவிரமும் ஆழமும் கூடிய படைப்பை மட்டுமே தர வேண்டும் என்னும் முனைப்பு சு.ரா.வின் படைப்புகளின் ஆதார சுருதி. படைப்பிற்குள் வெளிப்படும் தேடலும் விசாரணையும் ஒருபுறம் இருக்க, படைப்பின் வடிவத்திலும் கூறல் முறையிலும் தொடர்ந்து தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருந்தது சு.ரா.வின் படைப்பாளுமையின் முக்கியமானதொரு கூறு. ஜே.ஜே. சில குறிப்புகள் நாவலும் பல்லக்குத் தூக்கிகள் முதலான சில கதைகளும் தமிழ்ப் படைப்புகளின் வடிவங்களில் பெரும் உடைப்பை ஏற்படுத்தியவை.
தீவிரம், அழகியல், மொழி நேர்த்தி, கலை அமைதி ஆகிய கூறுகள் இவரது பெரும்பாலான படைப்புகளில் இசைவுடன் பொருந்தியிருக்கின்றன. நுட்பமான வேலைப்பாடுகள் நிறைந்த தேர்ந்த சித்திரம்போல இவரது பல படைப்புகள் உருப்பெற்றிருக்கின்றன. காணும்தோறும் பலவித வடிவங்களில் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் சித்திரங்கள் இவை. எனவே இவை திரும்பத் திரும்ப வாசிக்கப்படுகின்றன. தன் படைப்புகளின் வீச்சையும் எல்லைகளையும் தொடர்ந்து விஸ்தரித்துக்கொண்டேவந்ததன் மூலம் சூழலில் தொடர்ந்து சலனங்களையும் சவால்களையும் எழுப்பிவந்தார் சு.ரா.
அற்புதமான படைப்புகளைத் தந்த இவர், விமர்சனத் துறையிலும் தீவிரமாக இயங்கிவந்தார். அவர் எழுதிய விமர்சனங்கள் தமிழ் விமர்சனத்தின் போக்கை மாற்றியிருக்கின்றன. புதுமைப்பித்தன், மு. தளையசிங்கம், அகிலன், க.நா. சுப்பிரமணியன். ஜி. நாகராஜன், வண்ணதாசன், மௌனி, காசியபன், ஷண்முக சுந்தரம் முதலான படைப்பாளிகளை மதிப்பிட்டு அவர் எழுதிய கட்டுரைகள் தமிழின் விமர்சனப் போக்கில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தின.
தரமான எழுத்து என்றால் என்ன என்னும் கேள்வி இன்றளவிலும் முன்வைக்கப்படுகிறது. எது மேலான இலக்கியம்? இலக்கியத்தில் கருத்துக்களுக்கான இடம் எது? சமூக மாற்றம் காண விழையும் எழுத்துக்களை எப்படி வகைப்படுத்துவது? எழுத்தாளரின் சமூகப் பொறுப்பு என்ன? - இது போன்ற பல கேள்விகள் தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றன. இந்தக் கேள்விகளுக்கான தெளிவான பதில்களைச் சொல்லாமல் பரந்துபட்ட மக்களுடன் இலக்கியம் குறித்துப் பேச முடியாது. இந்தக் கேள்விகளுக்கான பதிலகளை சுந்தர ராமசாமியின் தொடக்ககாலக் கட்டுரைகளில் காணலாம்.
எளிய அடிப்படைகளோடு நின்றுவிடாமல் நுட்பமான தளத்திலும் தனது விமர்சன மதிப்பீடுகளை சு.ரா. முன்வைத்தார். இலக்கியத்தை மதிப்பிடும்போது படைப்புக்கும் வாழ்வுக்கும் இடையிலான உறவுக்கு இவர் முக்கியத்துவம் அளித்தார். யதார்த்தத்தை மறுஆக்கம் செய்வதற்கும் படைப்பாளி தன் குறுகிய தேவைகளுக்கேற்ப யதார்த்தத்தைத் திரிப்பதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை அம்பலப்படுத்தினார். மேலோட்டமான அணுகுமுறையை முற்றாக நிராகரித்தார். யதார்த்தத்தின் வீரியத்தைக் குறைக்கும் மேலோட்டமான அழகியலையும் புறமொதுக்கினார். நல்ல எழுத்துப் போலத் தோற்றம் தரும் போலிகளைத் துல்லியமாக இனம்காட்டினார். தனது முடிவுக்கான காரணங்களையும் அவர் முன்வைத்தார்.
சு.ரா. முன்வைத்த அளவுகோல்களும் சொல்லாடல்களும் விமர்சன முறைமைகளும் பலரது விமர்சனங்களில் இயல்பாக இடம்பெறத் தொடங்கின. அழகியல் சார்ந்தும் தர்க்கபூர்வமான அலசலின் அடிப்படையிலும் இவர் முன்வைத்த விமர்சனங்கள் சூழலில் இன்றளவிலும் தாக்கத்தை ஏற்படுத்திவருகின்றன. படைப்பை அணுகுவதில் அடிப்படையான சில அம்சங்களை நிலைநிறுத்தியதும் அவற்றைப் பொதுவான அளவுகோல்களாக மாற்றியதும் இவரது முக்கியமான பங்களிப்புகள்.
சு.ரா. மொழியில் ஏற்படுத்திய தாக்கம் அவர் கருத்தளவில் ஏற்படுத்திய தாக்கத்தைக் காட்டிலும் முக்கியமானது என்று சொல்லலாம். அழகும் நேர்த்தியும் கொண்ட அவரது மொழி தமிழ் நடையை நவீனப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியிருக்கிறது. அவர் தேர்ந்தெடுத்த சொற்கள், சொற்சேர்க்கைகள், புதுமையான உதாரணங்கள், புதிய வாக்கிய அமைப்புகள் ஆகியவை நவீன தமிழுக்கு வளம் சேர்த்திருக்கின்றன. மொழியை அலங்காரப்படுத்தாமலேயே அழகுபடுத்த முடியும் என்பதைக் காட்டியவர் அவர். மேலோட்டமான அடுக்கு மொழி சமத்காரங்களைத் தவிர்த்து மொழியின் உள்ளார்ந்த அழகை அதன் அர்த்தம் சார்ந்து வெளிப்படுத்தியவர் சு.ரா. அவரைப் போலவே எழுதப் பலரும் முனைந்தது அவரது நடையின் தாக்கத்துக்குச் சிறந்த சான்று.
எழுத்தில் மட்டுமல்லாது எழுத்து சார்ந்த பிற செயல்பாடுகளிலும் தொடர்ந்து ஈடுபட்டவர் சு.ரா. காகங்கள் என்னும் இலக்கிய அமைப்பை அவர் நடத்திவந்தார். இது இலக்கிய விவாதங்களுக்கும் உரையாடலுக்குமான வெளியாக இருந்தது. அவர் தொடங்கிய காலச்சுவடு இதழும் அதில் அவர் முன்வைத்த கனவுகளும் மேற்கொண்ட முயற்சிகளும் சூழலில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தின. பல்வேறு துறைகளைச் சார்ந்த ஆளுமைகளுடனும் பல வாசகர்களுடனும் அவர் கொண்டிருந்த உயிரோட்டமுள்ள தொடர்பு அவரது இலக்கியச் செயல்பாட்டின் முக்கியமான பகுதி. இந்த உறவுகள் மூலம் அவர் நிகழ்த்திவந்த உரையாடல்களும் கடிதப் போக்குவரத்துகளும் அவரது இலக்கியச் செயல்பாடுகளின் முக்கியமான பகுதிகளாக இருக்கின்றன. வயது, இனம், சாதி, மதம், வர்க்கம், வட்டாரம் என எந்த வேறுபாடும் அற்று இவர் பேணிவந்த இந்த நட்புகள் மனித உறவுகள் சார்ந்த இவரது ஆழ்ந்த அக்கறையின் வெளிப்பாடுகள். இலக்கிய அமைப்புகள், நட்புகள் மூலம் தொடர்ந்த உரையாடல்களை இடையறாமல் நிகழ்த்திவந்தார் சு.ரா. இந்த உரையாடல்களின் சலனங்கள் பல்வேறு தளங்களில் பல்வேறு விதங்களில் ஏற்பட்டுவந்தன.
சுந்தர ராமசாமி முற்போக்கு எழுத்தாளராகத் தன் எழுத்து வாழ்வைத் தொடங்கியவர். அவரது அனுபவங்களும் தேடலும் அவரது எழுத்தின் திசைவழியை மாற்றியபடி இருந்தன. எந்த ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள்ளும் சிக்காமல் தன் எழுத்தைத் தொடர்ந்த அவர், வாழ்நாள் முழுவதும் சாதி, சமயம் ஆகியவற்றைக் கடந்தவராகவே இருந்தார். சாதி, சமயச் சடங்குகள் எதுவும் இன்றி வாழ்ந்த அவர் மரணமும் சடங்குகள் அற்றதாகவே இருந்தது. அவரது வழ்வும் மரணமும் நமக்குச் சொல்லும் சேதிகள் அவரது படைப்புகளைப் போலவே முக்கியத்துவம் வாய்ந்தவை.
பிரகடனங்களைக் காட்டிலும் செயல்பாடுகளில் நம்பிக்கை, எழுத்தை ஆத்மார்த்தமானதும் தீவிரமானதுமான செயல்பாடாகக் கருதுவது, எங்கும் எதிலும் சமரசமற்ற அணுகுமுறை, போலித்தனங்களுக்கு எதிரான குரல், எதைச் செய்தாலும் அதைப் புதியதாகவும் சிறப்பாகவும் செய்ய வேண்டும் என்னும் வேட்கை, தொடர்ந்து தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருத்தல், நேர்த்தியும் அழகும் கவனமும் கூடிய மொழி ஆகியவற்றை சுந்தர ராமசாயின் முக்கியமான பங்களிப்புகளாகச் சொல்லலாம். தொடர்ந்து தமிழ்ச் சூழலில் தாக்கத்தை ஏற்படுத்திவரும் அம்சங்கள் என்னும் வகையில் இவை கூடுதலான முக்கியத்துவம் பெறுகின்றன. இன்று வெகுஜன ஊடகங்களில் ஏற்பட்டுள்ள பல்வேறு ஆரோக்கியமான சலனங்களுக்கான செயல்பாட்டை முன்னெடுத்தவர்களில் முக்கியமானவர் சுந்தர ராமசாமி. இவற்றுக்குப் பின்னால் இருக்கும் மதிப்பீடுகளையும் அவற்றை முன்வைத்த குரலையும் தனித்துக் காண இயலாத வகையில் இவை சூழலில் கலந்துவிட்டன. அந்த அளவுக்குத் தன் சூழலைப் பாதித்திருப்பதே சு.ரா.வின் ஆகப்பெரிய பங்களிப்பு என்று சொல்லலாம்.
(அக்டோபர் 15 சுந்தர ராமசாமி நினைவு தினம்)
அரவிந்தன் - தொடர்புக்கு: aravindan.di@kslmedia.in