Last Updated : 20 May, 2017 10:13 AM

 

Published : 20 May 2017 10:13 AM
Last Updated : 20 May 2017 10:13 AM

பிரபஞ்சனின் உலகம்: உலகு நோக்கித் தமிழ்

ஒருநாள் அப்பா என்னிடம் “நாளைக்குப் பள்ளிக்கூடம் போகப்போறே” என்றார். ஒரு தென்னந்தோப்புக்குள் இருந்த பாழ்வீட்டின் திண்ணைதான் பள்ளி. முன்பணிகள் தொடங்கியிருந்தன. புதுச் சட்டை, கால் சட்டை, வகுப்புத் தோழர்களுக்கு மிட்டாய் எல்லாம் சேகரம் ஆயின. முதல் நாள் என் தாய்மாமனுடன் கடற்கரைக்குச் சென்று, தூய மணல் நிரப்பிக்கொண்டு வந்தோம். மறுநாள் காலை, பிள்ளையார் கோயிலுக்குச் சென்று (அவர் பெயர் ஏழைப் பிள்ளையார், பாவம்) தீபாராதனைகள் முடித்துப் பள்ளிக்கூடம் சென்றோம். வரிசையில் எனக்கு ஒதுக்கப்பட்ட இடத்துக்கு (தரைதான்) முன்பு, கடல் மண்ணைப் பரப்பி, வாத்தியார் சுந்தரம், அரி நமோத்து சிந்தம் சொல்லி, என் விரலைப் பிடித்து மண்ணில் ‘அ’ எழுதினார். பள்ளியில் என்னைக் கவர்ந்த ஒரே விஷயம், வாத்தியார் அமரும் சாய்வு நாற்காலிக்கு அருகில் இருந்த என் உயர, விரல் பருமன் கொண்ட பிரம்புதான். அந்தக் காலத்து வாத்தியார்கள் தங்களை நம்புவதில்லை. பிரம்பையும் தண்டனையையும்தான் நம்பினார்கள்.

கிறித்துவம் தமிழருக்கு அளித்த மாபெரும் கொடை, கல்வி. அவர்கள் நடத்திய ஒரு பள்ளியில் அடுத்து சேர்க்கப்பட்டேன். இந்தப் பள்ளியின் சுற்றுச்சுவரின் உயரம், தோராயமாக முப்பது அடிகள். எங்களை ஆண்டுகொண்டிருந்த பிரெஞ்சு அரசின் சிறைச்சாலையின் சுற்றுச்சுவரின் உயரம் இருபது அடிதான். தலைமை ஆசிரியர் உட்பட பல ஆசிரியர்கள் இங்கும் பிரம்பையே நம்பினார்கள். கணக்குப் பாடத்தோடு எனக்குப் பிறவிப் பகை இருந்தது. இருக்கிறது. எட்டு ஒன்பது வகுப்புகளில் முதல் ‘பீரியடே’ கணக்காக இருக்கும். கணக்கு வாத்தியாருக்கு என்மேல் அலாதி பிரியம். என் பெயரைச் சொல்லி, “கம் டு த போர்டு” என்பார். ஏதாவது ஒரு கணக்கை எழுதி, “போடு” என்பார். எந்த நிமிஷமும் என் பிருஷ்டத்தில் விழப்போகும் பிரம்படியை நினைத்துக்கொண்டு கிலி பிடித்து நிற்பேன். பெரும்பாலான ஆசிரியர்கள் அடிப்பதற்கு ஏன் மாணவர்களின் பிருஷ்டத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள்? ஆராயப்பட வேண்டிய விஷயம் இது. அடிவாங்க வசதியாக முதுகைக் காட்டி நிற்க வேண்டும். இது தமிழர்களின் புறமுதுகு காட்டாத வீரப் பண்புக்கு எதிரானதல்லவா?

ஆர்க்கிமிடிஸ், பித்தாகோரஸ் கொள்கை, தேற்றங்கள் பற்றி பல நூறு முறை இம்போஷிஷன் எழுதியிருக்கிறேன். ஆனாலும் இன்னும் எனக்கு அவை பற்றி ஒரு எள்முனை அளவும் தெரியாது. இதனால் ஆர்க்கிக்கும் பித்தாவுக்கும் நஷ்டம் இல்லை. எனக்கும் நஷ்டம் இல்லை. அப்புறம் என்னத்துக்கு இந்த இழவுகளும் இழிவுகளும்?

ஆறு ஏழாம் வகுப்புக்கு திருநாவுக்கரசு என்று ஒரு ஆசிரியர், தமிழ் ஆசிரியர். உண்மையான புலவர், என் கட்டுரை நோட்டைப் படித்து என்மேல் அன்பு கொண்டார். மாலை நேரங்களில் அவர் சைக்கிளில் என்னை அமரவைத்துக்கொண்டு வீட்டுக்கு அழைத்துச் செல்வார். யாப்பிலக்கணம் கற்றுக்கொடுப்பார். சங்க இலக்கியம் பற்றியெல்லாம் பேசுவார். புத்தகங்கள் தருவார். கண்ணதாசன் நடத்திய பத்திரிகையில் வெண்பா போட்டி நடத்தப்படும். அதில் கலந்துகொள்ளும் அளவில் வெண்பா, கலிப்பா முதலிய செய்யுள் வகைகளை நான் கற்றுத் தேர்ந்தேன்.

என் பத்து வயது தொடங்கி என் பிறந்த நாட்களுக்குப் புத்தகத்தைப் பரிசளித்தார் அப்பா. அவர் படிக்காதவர். அதாவது பள்ளி கல்லூரிப் படிப்பு அறிந்தவர் இல்லை. ஆனால் யோக்கியர். உலகத்தைப் படித்தவர். என் ஆறாம் வகுப்புப் பருவத்தில் என்னை நூலகத்தில் சேர்ந்துவிட்டார். பிரெஞ்சு அரசு நடத்திய பிரம்மாண்டமான நூலகம். என் சுவை, மொழிபெயர்ப்பு நூல்களில் தொடக்கம் கண்டது. அது வரை தமிழில் வந்திருந்த பிரெஞ்சு இலக்கியங்களை வாசிக்கத் தொடங்கினேன். புரிந்தது, புரியாதது பிரச்சினையெல்லாம் வாசிப்பில் இல்லை. தொடர்ந்து தட்டிக்கொண்டே இருந்தால் கதவுகள் திறக்கும் என்பது என் அனுபவம். புரிதல் அல்ல, உணர்தலே முக்கியம். நூலகம் என்பது மேதைகளின் வசிப்பிடம். காலம்தோறும் உலகை நேசித்து, உலகுக்குத் தங்கள் உயிரையே வெளிச்சமாக ஈந்து வாழ்கிற நூற்றுக் கணக்கான மேலோர்கள் நம்மிடம் உரையாட எப்போதும் காத்துக்கொண்டிருக்கிறார்கள். மாப்பசான், ஜோலா, ரொமென் ரோலாந், பால்சாக், ரூசோ, வால்ட்டேர் என்று மேதைகள் பலரையும் பள்ளி இறுதிக்கு வரும் முன்பே நான் அறிமுகம் கொண்டேன்.

ஆங்கிலத்திலிருந்தும் ரஷ்யனிலிருந்தும் வந்த கணிசமான மொழியாக்கங்கள் தமிழையும் தமிழரையும் அகத்தில் மலர்ச்சி பெறப் பேருதவி புரிந்தன. ஆனால், பிரெஞ்சு இலக்கிய வரவு குறைவு. பெருமளவில் பிரெஞ்சு ஆன்மா தமிழுக்கு ஆக்கம் பெற வேண்டும். ஒரு ஆல்பெர் காம்யுவின் ‘அந்நியன்’ தமிழில் வந்த பிறகு தமிழ்ப் படைப்பின் முகம் மாறியிருக்கிறது. தமிழ் இலக்கியம் சார்ந்த பதிப்பகங்கள், அமைப்புகள், தமிழும் பிரெஞ்சும் அறிந்த படைப்பாளர்களைக் கொண்டு இந்த மொழியாக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது, ஒரு அவசரப் பணி. அண்மைக் காலத்தில் நிறைய பிரெஞ்சு மற்றும் தமிழ் எழுத்தாளர்கள் தமிழைச் செழுமையாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

மூன்று பெரும் பணிகளில் ஈடுபட்டிருக்கிறேன். ஒன்றை மட்டும் இங்கு சொல்லத் தகும். தமிழ்ச் சிறுகதை நூற்றாண்டை ஒட்டி எனக்குத் தோன்றி உருவான கருத்து. எவ்வளவு காலம் ஐரோப்பிய இலக்கியத்தை நாம் வாசிக்க நேர்வது? கொஞ்ச காலத்துக்கு ஐரோப்பியர்கள் நம்மைப் படித்து வியக்கட்டுமே!

தமிழின் 25 மிகச் சிறந்த கதைகளைத் தேர்வுசெய்திருக்கிறேன். முதலில் அவற்றை ஆங்கிலத்திலும், அப்புறம் பிரெஞ்சிலும் ஜெர்மானிய மொழியிலும் ஸ்வீடிஷ் மொழியிலும் தகுதியான மொழி ஆளுமைகளைக் கொண்டு மொழியாக்கம் செய்ய ஆசை. ஆசை பற்றி முயற்சிக்கிறேன்.

எந்த ஐரோப்பிய ஆளுமைக்கும் தமிழ் எழுத்தாளர் நிகரானவர் மட்டுமல்ல, மேலானவர் என்றும் கூட நான் நம்புகிறேன். நம் மேதைகளை உலகம் பாராட்டிப் போற்ற வேண்டும். தமிழ், உலக அரங்கில் கவுரவம் பெறும். பார்ப்போம்.

(தொடரும்…)

-பிரபஞ்சன், மூத்த தமிழ் எழுத்தாளர், ‘மானுடம் வெல்லும்’, ‘வானம் வசப்படும்’ முதலான நாவல்களின் ஆசிரியர், தொடர்புக்கு: writerprapanchan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x