Last Updated : 17 Oct, 2013 09:07 PM

Published : 17 Oct 2013 09:07 PM
Last Updated : 17 Oct 2013 09:07 PM

இளையோருக்காக எழுதுங்களேன்!

வெளிநாட்டுப் புத்தக விற்பனை நிலையங்களில் நீங்கள் 'Young Adult' என்ற தலைப்பில் நிறைய புத்தகங்களைப் பார்க்கலாம். இவை அனைத்தும் இளையோருக்கான புத்தகங்கள். பன்னிரெண்டு வயது முதல் இருபது வயது வரையுள்ள வளர்ந்த குழந்தைகளுக்கான நூல்கள். டீன் ஏஜ் அல்லது பருவ வயதினர் எனவும் கூறலாம்.

உலக சுகாதார மையம் 10 முதல் 19 வயது வரையிலானவர்களைப் பருவ வயதினர் என குறிப்பிடுகின்றது. இவர்களுக்கான பிரத்யேக நூல்கள் தற்போது (எப்பொழுதும்) தமிழில் வந்திருக்கின்றதா / வருகின்றதா என்ற கேள்விக்கு நீண்ட மெளனமே பதிலாகக் கிடைக்கிறது.

பருவ வயதினில்தான் மன தடுமாற்றங்களும் பருவ மாற்றங்களும் நிறைய நடக்கின்றன. உடலியல் மாற்றங்கள், உளவியல் மாற்றங்கள், நான் குழந்தையா? இளைஞரா? என்ற குழப்பங்கள், வாழ்க்கைப் பாதையை நிர்ணையிக்கும் முடிவுகள் என வாழ்வின் முக்கியமான பகுதியாகின்றது. நண்பர்கள் இணக்கமாவார்கள், எதிர்பால் மீது ஈர்ப்பு அதிகமாகும், பெரியவர்களின் பேச்சுகள் அறிவுரைகள் மீது வெறுப்பு அதிகமாகும், தனிமையை மனம் விரும்பும், இப்படியாக நிறைய மாற்றங்கள் நிகழும். இவைகளைப் பற்றி அறிந்துகொள்ள எளிதான, சிக்கலில்லாத வழி இல்லை. இளையோர் இலக்கியம் இந்தச் சிக்கலை எளிதாகத் தீர்க்கும். இத்தகையப் புத்தகங்கள் பருவ வயதின் பிரச்சினைகளைத் தீர்க்கும் வல்லமை பெற்றது.

இளையோருக்கான, அவர்கள் பிரச்சினைகளை, அவர்கள் உலகினை அணுகி, தோள்மீது கைபோட்டு நெருக்கமாகப் பேச வைக்கும் புத்தகங்கள் தமிழில் இல்லை என்பது ஒரு வருத்தமான செய்தி. 'என்னப்பா..! முன்னர் சிறுவர்களுக்குப் புத்தகம் இல்லை என்ற புலம்பல் இருந்தது; இப்போது புதிதாக இளையோருக்கு இல்லை என்ற புலம்பல் ஆரம்பிக்கின்றதே' எனத் தோன்றலாம். இவை புலம்பல்கள் அல்ல கோரிக்கை. காலத்தின் தேவை. நிர்பந்தம். தேவையும் அவசியமும் தற்சமயம் அதிகமாக இருக்கின்றது.

ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பாடப் புத்தகம் தாண்டி மற்றவைகளை வாசித்தல் பாவம் / குற்றம் என்று பாவிக்கும் மனநிலை கொண்ட சமூகத்தில்தான் இளையோர் இலக்கியத்தின் அவசியம் பற்றி நாம் பேசவேண்டியுள்ளது. சிறுவர் இலக்கியத்தில் இருந்து முதியோர் இலக்கியத்திற்குச் செல்ல ஒரு பாலம் தேவைப்படுகின்றது. சிறுவர் உலகில் இருந்து படார் என உண்மை உலகிற்கு செல்வது சிரமமாக இருக்கும். இளையோர் இலக்கியம் அதனை எளிமைப்படுத்தும்.

அலைபேசி என்னும் புதிய தொழில்நுட்பம், சமூக வலைத்தளங்கள், இணையம் ஆகியவை புதிய திறப்புகளைத் திறந்துள்ளது. அதனை இலகுவாக அணுகுதல், பக்குவமாகப் பயன்படுத்துதல் இளையோருக்கு தானாக எப்படி தெரியும்?

இளையோர்களுக்கு எழுதுவதிலும் பெரும் சவால் இருக்கின்றது. அறிவுரை என்ற தொனி இருக்கக்கூடாது. அதேசமயம் ஒரு தோழன் அருகே அமர்ந்து கைபிடித்து பேசுவது போன்ற நெருக்கத்தையும், அவனுடைய மொழியில், அவனுடைய உலக அறிவுடனும் பேச வேண்டும். ஒவ்வொரு நான்கு வருடத்திற்கும் தலைமுறைகள் மாறுகின்றது. அதாவது உணவு விருப்பங்கள், உடை விருப்பங்கள், இசை விருப்பங்கள் உட்பட அனைத்து விருப்பங்கள் மாறுவதாக நம்பப்படுகின்றது. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பருவ வயதினரின் விருப்புகள், ஆசைகள், சுபாவம், எண்ணங்கள் வேறு அடுத்த நான்கு ஆண்டுகளில் அதே வயதினரின் விருப்பங்கள் மாறி இருக்கும்.

பாலுறவு சம்பந்தமான பேச்சுக்களைத் தவறான இடங்களில் தவறாகக் கற்கின்றனர் அல்லது கற்பிக்கப்படுகின்றனர். வெளிப்படையான உரையாடல்களோ, தகவல்களோ அவர்களுக்கு இல்லை. இந்த வயதில் நண்பர்கள்தான் உலகம் என்று இருப்பார்கள். ஆரோக்கியமான நட்பு எவ்வாறானது, அதில் எழும் சிக்கல்கள், சண்டைகள் குறித்து இவர்களுக்கான எழுத்து பேச வேண்டும். எதிர்பாலின் மீது ஈர்ப்பு ஏன், அவர்களுடன் பேச விரும்புவதன் உளவியல் காரணம் என்ன? அதன் எல்லைகள் என்ன? போன்றவற்றை அறிந்துகொள்ளவும் பேசிக்கொள்ளவும் ஆரோக்கியமான மேடை தேவைப்படுகின்றது.

இளையோர் இலக்கியத்திற்கான சந்தை இருக்கின்றதா என்ற கேள்வி எழலாம். நிச்சயம் மிகப்பெரிய சந்தை இருக்கின்றது. மேலை நாடுகளில் Juvenile Literature வகை புத்தகங்கள் சக்கைபோடு போடுகின்றன. இங்கும் சினிமாக்கள், ஆடைகள், பொருட்கள், அழகு சாதனப் பொருட்களின் விளம்பரங்களைக் கவனித்தாலே அவை இளையோரை குறிவைத்து எடுக்கப்பட்டவை என்பதனை உணரலாம். அவர்கள் நினைத்தால் எந்த ஒரு பொருளும் ஹிட் என்ற நிலைமை தான். இப்போது வெற்றிகரமாக இயங்கும் சமூக வலைத்தளங்களும் அவர்களை குறிவைத்தே செயல்படுகின்றது. அவர்களைக் வசீகரிக்கின்ற, அவர்களுக்கு தேவையானதை எழுத்தில் கொடுத்தால் மிகப்பெரிய சந்தை நிச்சயம் இருக்கின்றது. இளையோர் மத்தியில் ஓரளவிற்குக் கையில் காசு புழக்கமும் உள்ளது. எப்படி செலவழிப்பது என்று தெரியாமல்தான் முழிக்கின்றனர்.

அறிவு சார்ந்த விஷயங்களிலும் இந்தப் பருவத்தில் தேடல் அதிகரித்து இருக்கும். அறிவியல் கட்டுரைகள், அறிவை தேடுவதற்கான வழிகாட்டிகள் தேவை. அரசியல் பற்றிய ஞானமும் தெளிவும் இந்த வயதில் இருந்தே ஆரம்பித்திட வேண்டும். நாட்டின் கட்டமைப்பை பற்றி, அதன் சிக்கல்கள் என்ன, தூண்கள் எவ்வாறு இயங்குகின்றது, உலகப் பொருளாதாரம், வியாபரம் ஆகிய வார்த்தைகளையாவது அவர்கள் கேட்டிருக்க வேண்டும், தேவையெனில் இளையோருக்குத் தேவையான அளவிற்குப் பொருளடக்கம் கொண்ட கட்டுரைகளும் புத்தகங்களும் வரவேண்டும்.

மிக முக்கியமாக இளையோரிடம் பெரும் சக்தியும், ஆற்றலும் கையில் இருக்கின்றது. அந்த வீரியம் உடல் தளரத் தளர சரியும் என்பது உண்மையே. இந்த சக்தியையும் ஆற்றலையும் நெறிபடுத்த, வழிநடத்திச் செல்ல இவ்வகை இலக்கியம் முக்கியப் பங்கு வகிக்கும்.

இவர்கள் இலக்கியத்திற்கான எழுத்துகள் வெறும் எழுத்தாளர்களிடம் இருந்து மட்டுமல்ல, பல்துறை வல்லுனர்களிடம் இருந்து எழ வேண்டும். அன்றாடம் அவர்களுடன் பழகும் ஆசிரியர்கள், பருவ வயது குழந்தைகளைச் சமாளித்த பெற்றோர்களின் அனுபவங்கள், ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள், உளவியல் நிபுணர்கள், சமூக ஆலோசகர்கள், அரசியல் விமர்சகர்கள், இலக்கியம் படைக்கும் எழுத்தாளர்கள் என எல்லோரும் உதவ வேண்டும். ஒன்றாக ஊர்கூடித் தேர் இழுக்கும் முயற்சி.

விழியன், கட்டுரையாளர் - தொடர்புக்கு umanaths@gmail.com

கட்டுரையாளரின் வலைத்தளம்: http://vizhiyan.wordpress.com

*****

| தி இந்து வலைத்தளத்தின் 'வலைஞர் பக்கம்' பகுதிக்காக கட்டுரைகளை அனுப்ப விரும்புவோர் webadmin@kslmedia.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு படைப்புகளை அனுப்பலாம். உங்களின் முழுப் பெயர், தொடர்பு எண், வலைப்பதிவுத் தள முகவரி அவசியம். ஏற்கெனவே வெளியிடப்படாத கட்டுரைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் |

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x