Last Updated : 09 Nov, 2014 11:29 AM

 

Published : 09 Nov 2014 11:29 AM
Last Updated : 09 Nov 2014 11:29 AM

அரசியல் சீர்திருத்தம் வேண்டும்- யுகபாரதி நேர்காணல்

யுகபாரதி, கணையாழி இலக்கிய இதழில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அரசியல் பின்புலத்துடன் இயங்கும் கவிஞர்களில் முக்கியமானவர். ‘குறள் பீட’ விருது பெற்றவர். முனியாண்டி விலாஸ் என்ற கவிதைத் தொகுப்பை இப்போது கொண்டுவந்துள்ளார். பாடலாசிரியராக இயங்கும் அவருடன் திரைப்பாடலின் இன்றைய நிலை, கலை அரசியல் சூழல் குறித்து நிகழ்த்தப்பட்ட விரிவான உரையாடலின் ஒரு பகுதி...

‘நேற்றைய காற்று’ என்னும் தலைப்பில் முன்னோடிப் பாடலாசிரியர்கள் பலரைக் குறித்து எழுதியுள்ளீர்கள். இந்த முயற்சி எப்படித் தோன்றியது?

‘காலத்தை வென்றவன் நீ’ என்ற பிரபலமான பாடலை எழுதியது அவினாசி மணி. ‘வேட்டையாடு விளையாடு’ என்ற பாடலின் ஆசிரியர் ஆலங்குடி சோமு. ஆனால், நாமோ பல மேடைகளில் அதை வாலி எழுதியதாகவும் கண்ணதாசன் எழுதியதாகவும் சொல்லிக் கொண்டிருக்கிறோம். மருதகாசியின் பாடலைப் பட்டுக்கோட்டையார் பாடல் என்று சொல்லும் நிலையும் இருக்கிறது. இதற்கெல்லாம் முறையான குறிப்புகள் இல்லை. மேலும் திரைப்பாடலில் இதுவரை என்னென்ன நடந்திருக்கிறது எனத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதாலும் அவர்களைக் குறித்து ஆய்வுசெய்து எழுதினேன். இதை விரிவாக எழுதும் திட்டமும் இருக்கிறது.

பாடல்களின் மெட்டுகளை எப்படிக் கையாள்கிறீர்கள்?

நான் பத்திரிகையாளனாக இருந்தவன். அதனால் மொழியைக் கையாளும் உத்தி எனக்குக் கைவரப்பட்டிருக்கிறது. பத்திரிகை யில் கட்டுரை எழுதுவதைப் போலத்தான் பாட்டு எழுதுவதும். கட்டுரைக்குத் தலைப்புபோல பாட்டுக்குப் பல்லவி. அதன் உள்ளடக்கத்தைப் போன்றதுதான் சரணம். எந்தச் செய்தியைச் சொன்னாலும் கட்டுரையில் சுவைபடச் சொல்ல வேண்டும். அந்த உத்திதான் பாடலுக்கும் தேவைப்படுகிறது. இதையே சிறந்த பாடலுக்கான சூத்திரமாகக் கருதுகிறேன்.

‘என் தாயோடும் பேசாத மவுனத்தை நீயே தந்தாய்’ என்பது போன்ற கவித்துவமிக்க வரிகளை உங்கள் சமீபத்திய பாடல்களில் பார்க்க முடிவதில்லையே?

அது திட்டமிட்ட ஒன்றுதான். இந்த முயற்சியை பிரபு சாலமனின் ‘மைனா’வில் தொடங்கினேன். அவரே முழுச் சுதந்திரத்தோடு என்னை எழுதப் பணித்தவர். தொடக்கத்தில் இசையமைப்பாளர் வித்தியாசகருக்கு எழுதும்போது தீவிரமான உவமைகளைக் கையாள வேண்டும் என மெனக்கெட்டேன். பிறகுதான் பாடல் என்பது மக்கள் மொழியில் எழுதப்பட வேண்டும் என்பது புரிந்தது. “நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்” என்ற எளிமையான விஷயத்தை, “எதையோ என் வாய் சொல்லத் தொடங்க, அதையே உன் வாய் சொல்லி அடங்க...” என நான் ஏன் நீட்டி முழக்க வேண்டும்?

பாடல்களில் உங்களுக்கு முன்னோடி என யாரைச் சொல்வீர்கள்?

ஆரம்பத்தில் என் முன்னோடிப் பாடலாசிரியர்கள் பலரையும் ஆர்வத்துடன் படித்தேன். கருத்தில், ஆழத்தில், அழகில், வடிவமைப்பில் என என் எல்லா வரையறைக்குள்ளும் வந்தவர் புலமைப்பித்தன். அவரைப் பின்தொடரலாம் என நினைத்தேன். ஆனால், அது அவ்வளவு எளிதல்ல என்பது பிற்பாடுதான் தெரிந்தது. அவர் போல எழுதலாம். ஆனால், அவராக முடியாது. எனவே, எனக்கென ஒரு தனித்துவத்தை உருவாக்க வேண்டும் என முயற்சிக்கிறேன்.

பாடலின் சூழலையும் தாண்டி ஒரு பாட்டில் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

முதலில் கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் தேவையானதைச் செய்வதைத்தான் இயக்குநர்களும் இசையமைப்பாளர்களும் விரும்புகிறார்கள். அதைத்தான் நானும் செய்ய விரும்புகிறேன். இன்றைக்குப் பெரும்பாலான பாடல்களில் காதலே பிரதானம். காதல் உணர்வுகளைப் பட்டியலிட்டுச் சொன்னாலும்கூட அதைத் தீர்மானிப்பவர் இயக்குநர்தான். இந்த எல்லைக்குள்தான் பூச்செடிகளை நடவும் வளர்க்கவும் வேண்டும்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், உடுமலை நாராயணகவி, கண்ணதாசன் ஆகியோர்களால் தங்கள் அரசியலைக், காதல் பாடல்களில்கூட வெளிப்படுத்த முடிந்தது. இப்போது உள்ள பாடல்களில் இந்த அம்சம் இல்லையே...

இது இக்காலகட்டத்தின் பிரதிபலிப்பு. உடுமலை தீவிரமான சீர்திருத்தவாதி.பட்டுக்கோட்டையார் பொதுவுடைமைச் சிந்தனையாளர். கண்ணதாசன் பிற்காலத்தில் காங்கிரஸில் இணைந்தாலும்கூட அவர் ஒரு காலம்வரை திராவிட இயக்கச் சிந்தனை

யாளர். இதுபோல அன்றைக்கு இருந்த எல்லோருக்கும் இயங்க, அவர்கள் சார்ந்திருந்த இயக்கங்கள் இருந்தன. இயக்கங்களுக்குத் தீவிரமான கொள்கைகள் இருந்தன. இன்றைக்குக் கொள்கைகள் கொண்ட அரசியல் இயக்கங்கள் இல்லை. இருக்கின்ற இயக்கங்களுக்குக் கொள்கை களும் இல்லை. இடதுசாரி இயக்கங்களைத் தவிர்த்துப் பார்த்தால் ஒட்டுமொத்தமாக ஒருவித மொண்ணை அரசியல் சூழல்தான் நிலவுகிறது. பாடல்களில் மட்டுமல்ல, எல்லா விதமான செயல்பாட்டிலும் இதுதான் பிரதிபலிக்கிறது. அரசியல் சீர்திருத்தம் வந்தால்தான் இது மாறும்.

இந்நிலைக்குக் காரணம் சினிமா முழுவதும் வர்த்தகமயமாகிவிட்டதால்தானா?

இல்லை. அரசியலே வர்த்தகமயமாகி விட்டது. அந்தக் காலத்தில் நடிகர்களுக்குத் தீவிரமான அரசியல் நிலைப்பாடுகள் இருந்தன. அதைப் பாடல்களின் மூலம் வெளிப்படுத்த விரும்பினார்கள். ‘நான் இந்த அரசியல் இயக்கத்தைச் சேர்ந்தவன்’ என அவர்கள் மார்தட்டிக்கொண்டார்கள். இப்போது அப்படி எந்த நடிகரும் மார்தட்டிக்கொள்வதில்லை. அப்படிப்பட்ட அரசியல் இயக்கங்களும் இல்லை.

இப்போதும் அரசியல் பேசும் படங்கள் வருகின்றன அல்லவா?

சரிதான். ஆனால், பன்னாட்டு நிறுவனங்களை விமர்சிக்கும் படங்களிலும் பாடல்கள் பொதுவுடைமையைப் பேசுவதில்லை. ‘மெட்ராஸ்’ தலித் அரசியலைப் பேசும் படம் என்கிறார்கள். ஆனால், அதில் தலித் அரசியலின் முக்கியத்துவம் பேசும் ஒரு பாடலாவது உண்டா? கானா பாலாவின் ‘இறந்திடவா நீ பிறந்தாய்’ என்ற பாடலை மரண கானாவாகத்தான் பார்க்க முடியும். தலித் அரசியல் அதில் முழுமையாக வெளிப்பட்டிருக்கலாம் என்பது என் எண்ணம்.

அப்படியானல் இது இயக்குநர்களின் தவறா?

இயக்குநர்கள் இதை யோசிக்கலாம். பாடல்களில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளலாம். அரசியல் படங்களுக்கான பாடல்களில் அரசியலைச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை; வசனங்களில் சொன்னால் போதும் என நினைக்கிறார்கள். பாடல்களில் அரசியலைச் சொல்வதால் அதன் வியாபார நோக்கம் நிறைவேறாமல் போய்விடுமோ என நினைக்கிறார்கள். தவிர, அரசியல் பாடல்களைத் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்ப மாட்டார்கள். பாடல்கள் வெற்றி யடையாமல் போய்விட்டால் அதுவே படத்தைப் பற்றிய மதிப்பைக் குறைத்துவிடும் எனக் கருதிகிறார்கள். ‘சாட்டை’ என்கிற படம் முழுக்க முழுக்கக் கல்வி தொடர்பான படம். அந்தப் படத்தில், ‘கற்பி, ஒன்றுசேர், புரட்சிசெய்’ என்ற அம்பேத்கரின் முழக்கத்தை முன்வைத்து கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி, ‘நண்பா...’ என்று ஒரு பாடலை வைத்தோம். ஆனால், ‘ராங்கி, ராங்கி’ என்ற காதல் பாடலைத்தான் திரும்பத் திரும்பத் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின.

மக்களின் ரசனைக்கு ஏற்ப அவர்கள் மாறியிருக்கிறார்கள் எனலாமா?

மக்கள் மீது பழி போடுவதை விரும்ப மாட்டேன். குத்துப்பாட்டுதான் வேண்டும் என மக்களா கேட்கிறார்கள்? அப்பாடல்களைப் பிரபலப்படுத்துவதில் தொலைக்காட்சிகள் முந்திக்கொள்கின்றன. உலக வேகத்துக்கு ஏற்ப மக்களை ஓடவைத்தால்தான் காசு. இதை ஒரு தொலைக்காட்சி செய்யும்போது அதையே இன்னொரு தொலைக்காட்சியும் செய்கிறது. தொடர்ந்து எல்லாத் தொலைக் காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டால் அந்தப் பாடல் வெற்றிபெற்ற பாடலாகக் கொள்ளப்படுகிறது. நான் எழுதிய ‘மன்மத ராசா’ பாடல் பலமுறை ஒளிபரப்பப்பட்ட வெற்றிப் பாடல். ஆனால், அதை இன்றைக்கு மக்கள் ரசிக்கிறார்களா?

அப்படியானால் ‘எந்தப் பாடலைக் கேட்டாலும் அந்தக் காலத்துப் பாடல்போல் இல்லை’ என்ற குற்றச்சாட்டு நியாயமானதுதானா?

இந்தக் குற்றச்சாட்டு மனரீதியான பதிவுகளிலிருந்து எழுகிறது. பதின்ம வயதில் உங்கள் மனதில் பதியக்கூடிய பாடல்தான் இறுதிக் காலம்வரை உள்ளுக்குள் ஒலித்துக்கொண்டே இருக்கும். முதன்முதலில் ரசித்த பெண்ணைத்தான் வாழ்நாள் முழுதும் தேடிக்கொண்டே இருப்போம். அப்படித் தான் 80-களின் பாடலையும் 60-களின் பாடலையும் அந்தந்த காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள் இந்தக் காலப் பாடல்களுடன் ஒப்பிடுகிறார்கள். இன்றைக்குப் பதின்ம வயதில் உள்ளவர்கள் நாளைக்கு எங்களது பாடல்களை எதிர்காலப் பாடல்களுடன் ஒப்பிடுவார்கள். இது, தனி மனிதனின் சிந்தனையைச் சார்ந்ததே தவிர; இந்தக் குற்றச்சாட்டில் உண்மை இல்லை.

- தொடர்புக்கு: jeyakumar.r@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x