Published : 17 Jan 2017 10:05 AM
Last Updated : 17 Jan 2017 10:05 AM

நிறைந்தது மூன்று நாள் இலக்கிய மழை

சென்னையில் ஆண்டுதோறும் பொங்கலை ஒட்டி நடைபெறும் ‘தி இந்து லிட் ஃபார் லைப்’ இலக்கிய விழா இந்த ஆண்டு ஜனவரி 14,15,16 மூன்று நாட்களும் இலக்கிய ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி நிறைந்தது.

சென்னை சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் வேங்கட சுப்பராவ் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் புகழ்பெற்ற ஓவியர் குலாம் முஹம்மது ஷேக், ‘கஸ்தூரி அண்ட் சன்ஸ்’ இயக்குநர் நிர்மலா லக்ஷ்மண், ‘தி இந்து’ ஆங்கில நாளிதழின் ஆசிரியர் முகுந்த் பத்மநாபன், ‘கஸ்தூரி அண்ட் சன்ஸ்’ மேலாண் இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ராஜீவ் லோச்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இலக்கியத் திருவிழாவை ஓவியர் குலாம் முஹம்மது ஷேக் தொடங்கிவைத்தார்.

முதல் நாள் அமர்வுகளில் சசி தரூர், கௌரி விஸ்வநாதன், சதானந்த் மேனன், திஷானி தோஷி, சஷி குமார், ஆஸ்திரேலிய எழுத்தாளர் ஜெரால்டைன் புரூக்ஸ், ஜி.என்.டேவி, குலாம் முஹம்மது ஷேக், அக்ஷ்ய் முகுல், ஜோசி ஜோசஃப், ஹுசைன் ஹக்கானி, சஞ்சயா பாரு, சோம்னி சென் குப்தா, சுஹாசினி ஹைதர், மோலி கிராப்பாப்பிள், துர்ஜோய் தத்தா, பிரீத்தி ஷெனாய், ரவீந்தர் சிங், நந்தினி கிருஷ்ணன், மார்க் குர்லான்ஸ்கி, தாலியா குர்லான்ஸ்கி, சலீல் திரிபாதி, அருணவா சின்ஹா, ஷஃபீ கித்வாய், ஊர்வசி புட்டாலியா, பால் சக்கரியா, என்.மனு சக்கரவர்த்தி, கேட் பிளேக், சுபஸ்ரீ கிருஷ்ணஸ்வாமி, அமன்தீப் சந்து, கண்ணன் சுந்தரம், ஏ.எஸ்.பன்னீர்செல்வன், கே.சச்சிதானந்தன், மரியா ரேமோந்தஸ், பிரேமா ரேவதி, பிரளயன், கீர்த்தி ஜெயின், சி.பசவலிங்கய்யா அனுபமா சந்திரா உள்ளிட்டோர் பேசினர்.

இரண்டாம் நாள் அமர்வுகளில் கார்த்திகா வி.கே, கேத்தரின், சயீது நக்வி, மார்கஸ் ஜுஸக், சுனில் கில்னானி, ரகு கர்னாட், மாளவிகா சருக்கை, ஸ்ரீமதி ராம்நாத், என்.ராம், பெரும்பதவம் ஸ்ரீதரன், ஷைனி ஜேக்கப், கரண் மஹாஜன், ரேகா மேனன், ரஹ்மான் அப்பாஸ், வைஷ்னா ராய், ஷோனாலி முத்தாலாலி, கௌரி தேவிதயாள், அனூத்தி விஷால் உள்ளிட்டோர் பேசினர்.

மூன்றாம் நாள் அமர்வுகளில் ஜெயந்தி நடராஜன், முகுந்த் பத்மநாபன், எம்.எம்.முருகப்பன், ராஜீவ் லோச்சன், அடூர் கோபாலகிருஷ்ணன், கிரீஷ் கசரவல்லி, ரிஷி கபூர், சாந்தனு ரே சவுத்ரி, ரித்து பேரி, விவேக் கருணாகரன், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ், சுதீஷ் காமத், ஆ.இரா.வேங்கடாசலபதி, பழ.அதியமான், ய. மணிகண்டன் உள்ளிட்டோர் பேசினர்.

கிரண் தோஷிக்கு ‘தி இந்து’ விருது

ஆண்டுதோறும் ‘தி இந்து லிட் ஃபெஸ்ட்’ விழாவையொட்டி அளிக்கப்படும் ‘தி இந்து’ இலக்கிய விருதானது இந்த ஆண்டு எழுத்தாளர் கிரண் தோஷி எழுதிய ‘ஜின்னா ஆஃபன் கேம் டு அவர் ஹவுஸ்’ நாவலுக்கு அளிக்கப்பட்டது. 2016-ல் வெளிவந்த 60 நாவல்களிலிருந்து இந்நூல் தேர்ந்தெடுக்கப்பட்டது. ‘புலிட்ஸர் விருது’ பெற்ற ஆஸ்திரேலிய எழுத்தாளர் ஜெரால்டைன் புரூக்ஸ் ‘தி இந்து’ விருதை கிரண் தோஷிக்கு வழங்கினார். பாராட்டுப் பத்திரம், ரூ.5 லட்சம் ரொக்கம் ஆகியவை இந்த விருதில் அடங்கும்.

இதேபோல, ‘தி இந்து - யங் வேர்ல்ட் குட் புக்ஸ்’ விருது எழுத்தாளர்கள் ரித்து கோடா, வனிதா பை இருவருக்கும் ‘ஐ ஸ்பை இந்தியன் ஆர்ட்’ புத்தகத்துக்காக அளிக்கப்பட்டது. ‘தி இந்து - யங் வேர்ல்ட் குட் புக்ஸ் சிறந்த இல்லஸ்ட்ரேட்டர் விருது’ கே.பிரியாவுக்கு ‘பிரின்ஸஸ் ஈசி பிளீசி’ புத்தகத்துக்காக அளிக்கப்பட்டது.

தோஷியின் நூல் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதை தெரிவுக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான கே.சச்சி தானந்தன் விளக்கினார். விருதை வழங்கிய ஜெரால்டைன் புரூக்ஸ், “புனைவுகளை எழுதுவது சிக்கலானது, அதுவும் சிக்கலான சமகாலத்தில் இன்னும் கடினமானது” என்றார்.

சென்னை போன்ற நகரங்களில் வாழ்ந்ததால் தன் வாழ்க்கை சம்பவங்களால் நிறைந்தது என்று பரிசைப் பெற்றுக்கொண்ட தோஷி கூறினார். 35 ஆண்டுகள் தூதரகப் பணியும் பத்தாண்டுகள் கல்விப் பணியும் தனக்குள் பல சிந்தனைகளை உருவாக்கின என்று குறிப்பிட்டார். பாகிஸ்தானில் பணி செய்ய நேர்ந்ததும் திருமணத்தின்போது தனக்குத் தரப்பட்ட வரதட்சிணையும் தனக்கு எழுதுவதற்கான உந்துசக்தி என்றார்.

முன்னதாக ‘கஸ்தூரி அண்ட் சன்ஸ்’ இயக்குநரான நிர்மலா லக்ஷ்மண் பேசுகையில், “அச்சமூட்டும் அரசியல் பேச்சுகளும், சமூகப் பிரிவினைகளும், மற்றவர்கள் மீதான தாக்குதல்களும் அதிகரித்துவருவது உலக அளவில் அரசியலில் வலதுசாரிகளின் கையோங்கிய நிலையைக் காட்டுகின்றன. கருத்துச் சுதந்திரத்தை ஆதரிக்கும் இதைப் போன்ற மேடைகளும், சுதந்திரமான குரல்களும் வலுப்படுத்தப்பட வேண்டும், கேட்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

தமிழ் அமர்வுகளுக்கு வரவேற்பு

கடந்த ஆண்டைத் தொடர்ந்து ‘லிட் ஃபார் லைஃப்’ விழாவில் இணைக்கப்பட்டிருக்கும் தமிழ் அமர்வுகளுக்கு வரவேற்பும் கூட்டமும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த ஆண்டின் அமர்வுகளில், ‘சொல், இசை, பொருள்’ என்ற அமர்வில், கவிஞர் வைரமுத்துவும், தமிழச்சி தங்கபாண்டியனும் கலந்துரையாடினார்கள். எழுத்தாளர் பெருமாள்முருகனும், வரலாற்றாசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதியும் உரையாடிய ‘எழுத்தின் மறுவருகை’ அமர்வுக்கும் விழாவில் பெரிய வரவேற்பு இருந்தது.

‘வார்த்தை - ஒரு மேம்படுத்தும் கருவி’ என்ற அமர்வில், கவிஞர் சுகிர்தராணியும், கலீசிய எழுத்தாளர் மரியாவும் வழக்கறிஞர் சுசீலா ஆனந்துடன் கலந்துரையாடினர். நிறைவு நாளில் நடைபெற்ற ‘பாரதி அமர்வு’ பார்வையாளர்களை நெகிழச் செய்தது. பாரதி தொடர்பாக சமகாலத் தமிழகம் அறியாத பல வரலாற்றுத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர் ஆய்வாளர்கள் ஆ.இரா.வேங்கடாசலபதி, பழ.அதியமான், ய.மணிகண்டன் மூவரும். அப்போது வெளியிடப்பட்ட பாரதியின் புதிய புகைப்படம் பார்வையாளர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது.

மூன்று நாள் விழாவில் நடந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட அமர்வுகளில் ஆயிரக்கணக்கான இலக்கிய ஆர்வலர்கள் உற்சாகமாகப் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x