

வரலாறு என்பது வெறும் தனிமனித சாதனைகளைப் பற்றியதல்ல என்றாலுங்கூட தனிமனிதரையும் உள்ளடக்கியே வரலாறு எழுதப்படுகிறது. அதேபோல், தமிழில் தனிமனிதர்களின் பல்லாண்டு கால பெருமுயற்சியிலேயே வரலாறு தொகுக்கப்பட்டுவருகிறது. அந்த வகையில், வெளிவந்துள்ள குறிப்பிடத் தக்க வரலாற்று ஆவணம் இந்நூல்.
இந்திய சுதந்திரப் போரின் ஆரம்பகாலப் புரட்சியாளர்களான மருது சகோதரர்கள், ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரை ஒருங்கிணைத்து, அவர்களை நாட்டை விட்டு வெளியேறச் சொல்லி, அதனை ஓர் இயக்கமாக்கிச் செயல்பட்ட பெருமைக்குரியவர்கள்.
மருது சகோதரர்களின் வாழ்க்கையோடு இணைந்த இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தை மூன்று காண்டங்களாகப் பிரித்து, சிறுசிறு படலங்களாக எழுதியுள்ளார் நூலாசிரியர். நூலின் உண்மைத்தன்மைக்கு வலுசேர்க்கும் சான்றாதாரங்களாக இணைக்கப்பட்டுள்ள தொல்லியல் சான்றுகள், நீதிமன்ற ஆவணங்கள், நூலாதாரங்கள், இதழ்கள் என நீளும் பட்டியல் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன.
- மு. முருகேஷ்