புனைவு வெளியில் புலிப் பாய்ச்சல்

புனைவு வெளியில் புலிப் பாய்ச்சல்
Updated on
2 min read

புராணிக மொழியும் கவித்துவமும் சமத்காரமும் வாய்மொழி மரபின் அம்சங்களும் கொண்ட தமிழ் சிறுகதைப் போக்கிலிருந்து விலகி எளிய, சாரமற்றது போன்று தோன்றக்கூடிய உரைநடையில் எழுதியவர் அசோகமித்திரன். அவரது கதைகளைக் கொஞ்சம் நுட்பமாகப் படிப்பவர்கள், அந்த எளிமை ஒரு தோற்றம்தான் என்பதை உணர்வார்கள். ஒரு கதையின் ஒட்டுமொத்தத் திறப்பும் குறுகத் தரித்த வாக்கியம் ஒன்றில் நிலக்கண்ணி வெடி போல புதைந்திருக்கும். கூர்மையான அவதானிப்புகள், எள்ளல், விமர்சனம் ஆகியவற்றை மவுனமாகக் கதைகளுக்குள் சிறு தானியங்களாகத் தெளிப்பவர் அசோகமித்திரன்.

மாற்றங்களின் ஒற்றன்

அசோகமித்திரன், ஒரு யுகசந்தியில் நடந்த சமூகவியல், கலாச்சார, பழக்கவழக்க மாற்றங்களின் ஒற்றன். 20-ம் நூற்றாண்டில் பல நாடுகள் விடுதலை பெறுகின்றன. ஜனநாயகம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற பிரக்ஞைகள் உருவாகின்றன. இனம் சார்ந்து, தேசம் சார்ந்து, கலாச்சாரம் சார்ந்து மனிதர்கள் மற்ற மனிதர்களிடம் கொண்டிருக்கும் பகைமைகளும் வன்மங்களும் பல நூறாண்டு காலம் வேரோடியிருப்பவை. ஆனால், 20-ம் நூற்றாண்டுக்கு முன்புவரை அந்தப் பகைமையை வெளிப்படையாகப் பராமரிக்க முடிந்த மனிதர்களுக்கு 20-ம் நூற்றாண்டு பெரிய சவாலை விடுக்கிறது. அந்தப் பகைமைகளை சாதாரணமாக வெளிப்படுத்த இயலாத வண்ணம் தட்டிப் பறித்துவிடுகிறது. இதனால் மனிதர்களுக்குத் தங்கள் கோபங்களை வெளிப்படையாக வெளிப்படுத்த முடியாமல் போகிறது.

ஒரு காலத்தில் போருக்கு உபயோகப்பட்டிருந்த அம்புகள் வெறுமனே வழிகாட்டும், சமிக்ஞை விளக்கு களின் அடையாளங்களாகிவிடுகின்றன; மரண தண்டனையின் அடையாளமாக இருந்த சிலுவை கிறிஸ்துவுக்குப் பிறகு வேறு அர்த்தத்தைப் பெற்றுவிட்டது போல. ஆனால் விடுதலை, சமத்துவம், ஜனநாயகம் என்ற பேரொளியில் பகைமைகள், வன்மங்கள் தங்களை மறைத்துக்கொள்ள வேறு உடைகள், அணிகலன்கள், ஆயுதங்கள் பூண்டனவே தவிர அவை அகன்றுவிடவில்லை. அம்புகள், குடும்பங்களில் ஆரம்பித்து நாம் உருவாக்கிய அமைப்புகள் சகலமானவற்றின் உடலுக்குள்ளும் திரும்பி உறுத்திக்கொண்டேதான் இருக்கின்றன. அவை ரத்தம் வெளித் தெரியாத போர்களுக்கும் கிளர்ச்சிகளுக்கும் காரணமாகின்றன. இந்த யுத்தக் களத்தில் நின்று அந்த ஆழமான மவுனத் துயரங்களுக்குத் தனது படைப்புகளில் தொடர்ந்து செவிகொடுத்தவர் அசோகமித்திரன்.

லட்சியங்கள் எதையும் உறுதியாகப் பராமரிக்க முடியாத, ஆனால் சகலமானவற்றுக்கும் குற்றவுணர்ச்சியை உணரக்கூடிய, எதற்கு வாழ்கிறோம் என்ற நிச்சயமில்லாத, ஆனால் ‘தீவிரமாக’ அன்றாடத்தையும் வாழ்வையும் நிர்வகிக்க வேண்டிய அவசியமுள்ள நடுத்தர வர்க்கமும் அவர்களைச் சார்ந்திருக்கும் சாதாரணர்களும் ஒரு திரளாக உருவான நூற்றாண்டு 20-ம் நூற்றாண்டு. வெளியிலிருந்து பார்த்தால் அல்பமாகத் தோன்றும் சாதாரணர்களின் பிரச்சினைகள், சிக்கல்கள், முடிச்சுகள், மவுனங்கள், விடுபடுதல்களை அசோகமித்திரன் போல தமிழில் யாருமே கதையாக்கியதில்லை. வெளிச்சம் இல்லாத எளிமையான ஒண்டுக்குடித்தன வீடுகளில் கனவுக்கும் நிதர்சனத்துக்கும் இடையே புழுங்கிப்போன சாதாரண ஆண்கள், பெண்களின் சுகதுக்கங்களைக் கறுப்பு வெள்ளைக் கோட்டுச் சித்திரங்களாக அடர்த்தியாகத் தீட்டியவர் அசோகமித்திரன். லௌகீகப் பற்றாக்குறை தொடங்கி மதம், கலாச்சாரம் அனைத்தாலும் சிறைப்படுத்தப்பட்ட இவர்கள் அசோகமித்திரனின் உச்சபட்சப் பரிவுக்குள்ளானவர்கள். இவர்களுக்கு வரலாற்றுப் பெருமிதமும் கலாச்சாரப் பெருமிதமும் ஆடம்பரங்கள். ஆம், அசோகமித்திரனுக்கும்தான். நடைமுறைரீதியிலான சின்னச் சின்ன நீக்குபோக்குகள்தான் அவர்களது கேடயங்கள்.

அசோகமித்திரனின் சிறந்த பத்துக் கதைகளைத் தொகுத்தால் அதில் ‘அழிவற்றது’ சிறுகதையும் நிச்சயம் இடம்பிடிக்கும். வாழ்வின் அர்த்தமின்மையும் நிச்சயமின்மையும் ததும்பும் கணத்தை இக்கதையின் முடிவில் உறையவைக்கிறார் அசோகமித்திரன். ‘புலிக்கலைஞன்’ கதையும் அப்படிப்பட்டதே. புலிவேஷம் போடும் காதர் என்ற துணைநடிகர், வாய்ப்பு கேட்டு ஸ்டுடியோவுக்கு வருகிறார். இப்போதைக்கு வாய்ப்பு இல்லை என்று நிர்வாகி சொன்ன பிறகும் தனது திறனைக் காண்பிக்க, அந்த ஸ்டுடியோவின் பெரிய அறைக்குள் புலியாக அவதாரம் எடுக்கிறான். காதரின் பசிதான் அவனை அந்த சாகசத்துக்குத் தூண்டுகிறது. ஆனால், பசியிலிருந்து வேஷப்புலியாக எழும்பும் காதருக்கு, பாய்ந்து புலியாகவே சொரூபம் காட்டும் அந்த உக்கிர சக்தியை இந்த உலகத்தால் மட்டும் ஒருபோதும் வழங்கவே முடியாது. அந்த உக்கிரம்தான், அந்த வேட்கைதான், அந்த தளராத உயிராசையைத்தான் அழிவற்றது என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார் அசோகமித்திரன்.

ஒரு வகையில் தன் கதைகள் மூலம் தன் சின்னஞ்சிறு பௌதிக உடலிலிருந்து அந்தரத்தில் பாய்ந்து புலியின் சொரூபத்தை தமிழ்ப் புனைவுவெளியில் காட்டிய கலைஞன் அசோகமித்திரன்.

- ஷங்கர், தொடர்புக்கு: sankararamasubramanian.p@thehindutamil.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in