Published : 26 Oct 2013 15:28 pm

Updated : 06 Jun 2017 12:38 pm

 

Published : 26 Oct 2013 03:28 PM
Last Updated : 06 Jun 2017 12:38 PM

வசீகரமான வீரயுக இளைஞர் இருவர்

தொடரும் போர் கேட்கும் பலி, சலிக்காத மன்னர்புகழ், முடிவற்றதாய் விரியும் புலவர் வறுமை என்பதற்கு எல்லாம் அப்பால், சில வசீகரமான வீரயுக இளைஞர்களைப் புறநானூற்றின் பிற்பகுதியில் காணமுடிகிறது. ஆசைகளுடனும், ஆசைகளுக்கு அப்பாலும் பயணிக்கிறவர்களாக அந்தப் பெயர் தெரியாத இளைஞர்கள் இருக்கிறார்கள். வீரயுகப் பாடல்களின் பொதுவான அம்சங்களான ஒரு நிகழ்ச்சியைப் பிரித்து எடுத்துக் கூறுவதாக இருத்தல், சிறிய விஷயங்களையும் நுணுக்கமாக வருணித்தல், புகழைத் தழுவுகிற ஆண்மையைப் பாடுபொருளாக அமைத்தல் என்று கலாநிதி சைலாசபதி குறிப்பிடும் கூறுகள் பொருந்திய பாடல்களில் இந்த இளைஞர்கள் எதிர்ப்படுகிறார்கள்.

'பெரும் மதுவிருந்தின் குழந்தையான அவன்' என்ற யவனிகா ராம் கவிதை வரியை நினைவுபடுத்தும் இளைஞனைப் புறநானூறு 292ஆம் பாடலில் சந்திக்கிறோம். உண்டாட்டு நிகழும்போது, அரசனுக்கு என்று பக்குவம் செய்த குளிர்ந்த மதுவை, இவனுக்கு ஏற்ற முறையில் வளாவித் தருவதற்குள் பொறுமை இழந்து, துடித்து எழுகிறான் அந்த இளைஞன். வாளைப் பற்றியவாறு மதுவைப் பெற முன்னே செல்லும் அவன்மீது சினம் கொள்கிற அரச சேவகர்களை சமாதானப் படுத்துகிறார் விரிச்சியூர் நன்நாகன் என்ற கவிஞர். மது அருந்தத் தன்முறை வரும்வரை பொறுக்காத அந்த இளைஞன் தான், பகைவரின் பெரிய படையை விலக்கிப் போரிடும் காலத்திலும், தன்முறை வரட்டும் என்று தாமசிக்காமல், முன்னே சென்று எழுச்சியுடன் போரிடுகிறவன் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் என்று அந்த கணத்து எழுச்சியே உருவான இளைஞரின் பக்கமாகப் பேசுகிறார் கவிஞர்.


'வேந்தற்கு ஏந்திய தீந்தன் நறவம்

யாம் தனக்க உறுமுறை வளாவ விலக்கி

வாய்வாள் பற்றி நின்றறெனன் என்று

சினவல் ஓம்புமின் சிறுபுல் லாளர்!

ஈண்ட போல வேண்டுவன் ஆயின்

என்முறை வருக என்னான், கம்மென

எழுதரு பெரும்படை விலக்கி

ஆண்டும் நிற்கும ஆண்தகை யன்னே'

இளமையின், கணித்துச் சொல்ல முடியாத பாய்ச்சலை இருநிலையில் வைத்துச் சொல்கிறது கவிதை.

இந்த இளைஞனைப் போல வித்தியாசமான இன்னொரு இளைஞனை மாரிப்பித்தி என்ற பெண் கவிஞர், புறநானூறு 251 மற்றும் 252 என்ற தொடர் கவிதைகளில் அறிமுகப்படுத்துகிறார். பித்தின் சாயல் கொண்டவன் போல் முதலில் தெரிந்தாலும், தெளிவின் போதம் பெற்றவன் ஆகவும் தோற்றம் தருகிறான் அந்த இளைஞன். பெண்களைப் பித்தாக அடித்த, அவர்கள் எண்ணங்களில் தீயாகச் சுழன்ற தனது யௌவனத்தைப் பின்தள்ளி, வேறு இடத்துக்குப் பயணித்துள்ளவன் அவன். இந்தக் கணத்தில் தனியனாக, மலையருவியில் நீராடி, காட்டு யானை சுமந்து வந்த விறகில் தீ வளர்த்து முதுகில் புரளும் சடையை உலர்த்துபவனாகவும், தாளி இலையைக் கொய்து பக்குவம் செய்து உண்பவனாகவும் காட்சி தருகிறான். சொற்களைக் கொண்டு பெண்களை வேட்டையாடுபவனாக முன்பு அறியப்பட்ட அந்த இளைஞன்தான் இன்று துறவியாக உருமாற்றம் பெற்றிருக்கிறான். அவனை மனத்தால் தொடர்ந்து வரும் பெண்ணின் பார்வையில் இந்தக் கவிதைகள் சொல்லப்படுகின்றன.

'கறங்கு வெள்அருவி ஏற்றலின் நிறம் பெயர்ந்து

தில்லை அன்ன புல்லிய கடையோடு

அள்இலைத் தாளி கொய்யு மோனே

இல்வழங்கு மடமயில் பிணிக்கும்

சொல்வலை வேட்டுவன் ஆயினன் முன்னே'

அருவிநீரை ஏற்றதால் பழைய கருநிறம் மாறித் தில்லந்தளிர் போல் காட்சி அளிக்கும் புல்லிய சடையை முதுகில் உலர்த்தியவாறு மலை வனத்தினுள் மறையும் இளைஞனுடைய சித்திரத்தை, உணர்ச்சி கலக்காமல் எழுப்ப முடிந்திருக்கிறது மாரிப்பித்திக்கு. பெயர் தெரியாத, அந்தப் புதிரான இளைஞனைத் 'தமிழ்த் தாபதன்' என்று அழைக்கிறார் அவ்வை துரைசாமிப்பிள்ளை, தம்முடைய உரையில்.


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x