

ஒரு மொழியில் புதிய நூல்களின் வரவு எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு ஏற்கெனவே வெளிவந்த நூல்கள் மறுபதிப்பு செய்யப்பட வேண்டியதும் முக்கியம். கால வெள்ளத்தில் கரையொதுங்கும் நூல்கள் அதன்பின் பெரும்பாலும் கண்டுகொள்ளப்படுவதே இல்லை. மானுடத்தின் மேன்மைக்கும் அறிவுத் துறையின் வளர்ச்சிக்கும் உண்மையான பங்களிப்பை நல்கக்கூடிய இலக்கியங்களும் பல்துறை ஆய்வுகளும் அவ்வப்போது மறுபதிப்பு செய்யப்பட்டு அடுத்து வரும் தலைமுறைக்கு அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
தமிழின் தற்போதைய பதிப்புச் சூழலில் மறுபதிப்பு நூல்கள் பரவலாக வெளிவருவது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் ஒரு நூலை மறுபதிப்பு செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய பதிப்பு நெறிகளைப் பதிப்பகங்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது கவலையளிக்கிறது.
ஒரு நூலை மறுபதிப்பு செய்யும்போது அதன் முதல் பதிப்பு எந்த ஆண்டில், யாரால் பதிப்பிக்கப்பட்டது ஆகிய விவரங்கள் கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும். அந்த வரலாற்று விவரங்கள் ஆய்வு நோக்கில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. ஒரு நூல் வெளிவந்த காலகட்டத்தை அறிந்துகொள்வதன் மூலமே அந்நூல் முன்வைக்கும் கருத்துக்களின் பின்னணியை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். ஆனால் தற்போது மறுபதிப்பு செய்யப்படும் நூல்கள் பலவற்றிலும் முதல் பதிப்பு பற்றிய விவரங்களைப் பார்க்க முடிவதில்லை.
தமிழில் மறுபதிப்பு செய்யப்படும் நூல்கள் பலவகைப்பட்டவை. நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைப் பதிப்பிப்பதில் தடையில்லை என்பதால் அவையே அதிகமும் மறுபதிப்பு செய்யப்படுகின்றன. பதிப்புரிமை காலம் முடிந்த நூல்களையும் மறுபதிப்பு செய்வதில் தடையில்லை. அதனால் சில பதிப்பகங்கள் நூலகச் சேகரிப்புகளிலிருந்து பழைய நூல்களைத் தேடியெடுத்து, மறுபதிப்பு செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. இவ்விரண்டு வகைகளிலும் மறுபதிப்பு செய்யப்படும் நூல்களில் முதல் பதிப்பு பற்றிய தகவல்களே இடம்பெறுவதில்லை. பதிப்பாசிரியரைக் கொண்டு ஆய்வுநோக்கில் வெளியிடப்படும் ஒருசில நூல்களில் மட்டுமே இவ்விவரங்கள் காணக்கூடியதாக இருக்கின்றன.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விவரங்களைப் பதிப்பகங்கள் தவிர்ப்பதன் காரணம் அதிர்ச்சியளிக்கிறது. தமிழகப் பொது நூலகத்துறை முதல் பதிப்பு நூல்களையே அதிக எண்ணிக்கையில் வாங்குகிறது, மறுபதிப்பு நூல்களை மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே வாங்குகிறது என்கிறார்கள் பதிப்பாளர்கள். ஒரு நூலின் தேவை, அதன் சிறப்பு ஆகியவற்றின் அடிப்படையில்தான் எத்தனை படிகள் வாங்குவது என்று முடிவெடுக்கப்பட வேண்டும். நூலகத் துறையின் புத்தகக் கொள்முதலுக்கான அளவுகோல்கள் அபத்தம். ஆனால், இந்த அபத்தத்தை எடுத்துச்சொல்லிப் பதிப்பாளர்கள் தங்கள் தவறுகளை நியாயப்படுத்திவிட முடியாது. வெளியிடும் நூல்களுக்கு நூலகத் துறை ஆணையைப் பெறுவது மட்டும்தான் நோக்கமா என்ன? அது மட்டும்தான் நோக்கம் என்றால் பதிப்புத் தொழிலின் கண்ணியம் காற்றில் பறக்கத்தான் செய்யும். பதிப்பாளர்கள் நூல்களை மறுபதிப்பு செய்யும்போது முதல் பதிப்பு வெளிவந்த ஆண்டு, மறுபதிப்புகள், முந்தைய பதிப்பாளர்கள் ஆகிய விவரங்களைத் தவறாமல் குறிப்பிட வேண்டியது அவசியமாகும். அது பதிப்பு நெறி மட்டுமல்ல வரலாற்றுக்குச் செய்யும் கடமையும்கூட.