

சென்னை புத்தகக் காட்சி அரங்க வளாகத்துக்கு உள்ளே மட்டுமல்ல வெளியேயும் ஒரு புத்தகக் காட்சி எப்போதும் உண்டு.
இது ‘பழைய’ புத்தகக் காட்சி. நேஷனல் ஜியோகிராஃபிக், டைம் முதலான ஆங்கில இதழ்கள் டான்பிரவுன், ஃப்ரடெரிக் ஃபோர்ஸெயித், ஜான் கிரிஷாம் முதலான வெகுஜன எழுத்தாளர்களிலிருந்து காப்ரியேல் கார்ஸியா மார்க்கேஸ், குந்தர் கிராஸ் போன்ற தீவிர எழுத்தாளர்கள் வரை பலதரப்பட்ட புத்தகங்கள் மலைபோல் குவிந்து கிடந்தன. தமிழ்ப் புத்தகங்களும் நிறைய உண்டு.
ஏற்கெனவே, புத்தகக் காட்சியிலிருந்து கையில் கட்டைப் பைகளில் புத்தகங்களுடன் வெளிவருபவர்கள் இந்த மலிவுவிலைப் புத்தகங்களைப் பார்த்ததும் அப்படியே சரணாகதி அடைந்தார்கள். இந்த விற்பனையாளர்களில் தாடியுடனும் சற்றுப் பொக்கையுடனும் நம்மை ஈர்க்கிறார் புத்தகத் தாத்தா வைத்தியலிங்கம். ‘நாற்பது வருஷத்துக்கும் மேல் பழைய புத்தகம் விக்கிறேன் ராசா.
பேப்பருல எல்லாம் என்னோட ஃபோட்டோ வந்திருக்கு. என்னதான் மலிவா வித்தாலும் மக்களோட ஆதரவு நமக்குச் சரியாக் கிடைக்கறதில்லே’ என்று ஆதங்கப்பட்டுக்கொண்டார். எல்லாப் புத்தகத் தாத்தாக்களுக்கும் ஒரே மாதிரியானஆதங்கம் இருக்கும் போல!